தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 20 - பத்மா அமர்நாத்

20240318151304153.jpg

புத்திசாலிகள் சொல்வதற்கு சில செய்திகள் இருப்பதால் பேசுகிறார்கள். முட்டாள்கள் ஏதேனும் சொல்ல வேண்டுமே என்பதற்காகப் பேசுவார்கள். -பிளேட்டொ.

உடல்மொழி அம்சங்களை தொடர்ந்துப் பார்த்து வருகிறோம். அதில் அடுத்து நாம் கவனிக்க வேண்டியது,

பதற்றம்.

பேசும்போது, பதற்றத்தை வெளிபடுத்தாதீர்கள். பதற்றத்தை அறிவிக்கும் செய்கைகள் சில…

நகத்தினை கடித்தல் : தயக்கம், நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மையை குறிக்கிறது.

மூக்கினை வருடிக் கொண்டு இருத்தல் : சந்தேகத்தை குறிக்கிறது.

கண்னத்தினைத் தேய்த்துக் கொண்டு இருத்தல் : முடிவெடுக்கப் போகும் தருணத்தைக் குறிக்கிறது.

விரல்களால் தாளம் தட்டல் : பொறுமையின்மையைக் குறிக்கிறது.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருத்தல் : சிந்தனை செய்யும் நிலையைக் குறிக்கிறது.

காதினை வருடிக் கொண்டு இருத்தல் : இருமனதுடன் சந்தேக உணர்வுடன் இருக்கும் உணர்வு.

பின் தலையை சொறிதல்: நம்பிக்கை குறைகிறது என்று அர்த்தம்.

ஜூலியஸ் ஸீசர் நாடகத்தில், ஆக்டேவியஸ் அந்தோனியிடம் பேசுகிறபோது, ‘அவன் சொல்லுகின்ற விஷயத்தை விட, சொல்லும் முறை தான் எனக்கு மிகவும் வெறுப்பைத் தருகிறது’ என்று கூறுவார். நாம் சொல்ல வரும் செய்தியை விட, அதைச் சொல்லும் முறை மிக முக்கியம்.

அடுத்த அம்சம்,

வார்த்தை பிரயோகம் :

20240318151757385.jpg

எதைச் சொல்வது என்பதைவிட, எப்படிச் சொல்வது என்பது தான் அவசியம். பேச வேண்டியக் கருத்துக்களை மனதில் இருத்தி, எதிரில் இருப்பவர்களை, ஒரு செயலைச் செய்து முடிக்க கூடிய வகையில், தன் பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும். பல அறிஞர்களின் மேடை பேச்சுக்கள், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருப்பதற்கு, அவர்களுடைய பேச்சில் அமைந்த சொல் நயம் தான் காரணம். திருக்குறளில் சொல்வன்மைக்குத் தனி அதிகாரமே வைத்திருக்கிறார் திருவள்ளுவர். பெண்கள், வீட்டிலும், வெளியிடங்களிலும் இந்த சொல் நயத்தை கையாளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

20240318152021494.jpg

இதற்கு ஒரு உதாரணம், கிராமசத்திரம் ஒன்றில், இரண்டாம் ஜார்ஜ் மன்னர், உணவருந்த வந்தார். மணமகிழ்ச்சியுடன் உணவைப் பரிமாறிய சத்திர உரிமையாளர், மன்னர் அருந்திய இரண்டு முட்டைகளுக்கு, இரண்டு மடங்கு விலையை உயர்த்திக் கேட்டார். முட்டைக்கு இவ்வளவு விலையா என்று ஆச்சரியத்துடன், “இங்கே முட்டைகள் கிடைப்பது அரிதுப்போல..” என்றார். அதற்கு அந்த உரிமையாளர், “இல்லை, மன்னர்கள் வருவது அரிது.” என்றார். மன்னருக்கு முன்னுரிமை கொடுத்து, அவரை புகழ்ந்த வாரே, தன் காரியத்தையும் சாதித்துக் கொண்டார் அந்த உரிமையாளர். இது தான் சொல்லில் சாமர்த்தியம்.

குடும்பங்களில் இன்று பல சிக்கலும் குழப்பமும் வர, சரியான வார்த்தை பிரயோகமும் புரிதலும் இல்லாதது தான் காரணம்.

அடுத்த முக்கியமான உடல் மொழி,

புன்னகை

20240318152138162.jpg

சிரிப்பு மற்றும் நகைச்சுவைக்கு, உறவுகளை வளர்ப்பதில் அதிகம் தொடர்புண்டு. எந்த ஒரு காலத்திலும், நம் முகத்தில் புன்முறுவல் மாறாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால், இது மிகவும் கடினம். சிரிப்பு நம் உடலில் உள்ள இயற்கையான வலிநிவாரணிகளைத் தூண்டுகிறது. மற்றும் எண்டோர்பின்கள் எனப்படும் சுரப்பி, 'நல்ல உணர்வை' மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வாழ்க்கையின் கடினமான நேரங்களில் சிரிக்க மறப்பவர்கள், எண்டோர்பினைத் தூண்டி, சிரிப்பை வரவழைத்து, அதே உணர்வை அடைய, போதைப்பொருள் மற்றும் மதுபானங்களைத்தேடிப் போவார்கள்.

புன்னகை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சமயங்களில் துயரத்தைத் தவிர்க்க முடியாது. அப்படிப் பட்ட சூழ்நிலையில், இதுவும் கடந்துப் போகும், என்ற மந்திரத்தை மனதில் ஏற்றி, புன்னகையுடன் அமைதியாய் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

20240318152338708.jpg

ஆக உடல்மொழியின் முக்கியக் கூறுகளாக, கைகள், தலை அசைப்பு, பதற்றத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது, சரியான வார்த்தைப் பிரயோகம் மற்றும் புன்னகை ஆகிய அம்சங்கள் முக்கியமானவை.

அடுத்தக் கட்டுரையில் critical thinking திறனாய்வுச் சிந்தனையைப் பற்றிப் பார்ப்போம்.