தொடர்கள்
கவிதை
நசிதல் நயம்பட - ராகவன் ஸாம்யெல்

2024031920293176.jpeg

களைத்த உறக்கத்தின்
விளிம்பில் என்னுடைய படுக்கையை
யாரோ வலுவாய் பிடித்திழுக்கிறார்கள்
உரையாடல்களிலும் உதவாதவைகளிலும்
பிடித்து உடன் தொங்கியவர்கள்
இன்னும் அயர்ச்சியில் இருந்தார்கள்
கோடையின் அதிகாலை வெம்மை
அறையை முழுதுமாய் போர்த்திருந்தது
ஒரு உலோகமுட்டை போல.
எங்கு முட்டி எப்படி திறப்பது?
சுவாசப்பைகளின் முடிச்சுகள் தளர்வதாய் இல்லை
யாரோ துரத்தியதில்தான் கனவில்
வெளியே வந்து கிடக்கிறேனாய் இருக்கும்
துரத்தலுக்கான காரணங்களின் கற்பிதங்கள்,
தெளிவுறுதலின் மீது அடித்த ஆணிகள்
திறந்திருந்த கதவின் வழியாய்
அலைந்து நெளியும் திரைச்சீலைகள்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தன
மறைக்கவோ காட்டவோ?
ஆதுரமற்ற பிசுபிசுத்த இரவின்
வெந்நீர் கொதிகலனில்
சர்க்கரை இடாத காப்பி கலந்து கொண்டேன்
கனவின் மிச்சக் கசப்பு படர்ந்தது உள்ளே!
கோப்பைக்கான தூரத்தை
எளிதில் கடக்கமுடியவில்லை
நெருங்க விலகும் நிச்சலனம்
செரிமானமாகாத தொல்லுயிர் எச்சத்தின்
கார்பன் நாள்காட்டியில்
என்னுடைய முதுகெலும்பு
தொலைந்த குறிப்புகள் ஏதுமில்லை
இருளின் முனைகளற்ற விளிம்புகளில்
உடற்மொழி மறந்த நடனத்தில்
சுரந்து கசியும், நசுங்கிச் சாவும்
புணரவுமான, புலர்ச்சிக்குமான ஒரு பொழுது.