தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம்- 7 பொன் ஐஸ்வர்யா

20240402192327253.jpg

அட்லாண்டா விசிட்

அமெரிக்காவின் சன் பெல்ட் (Sun Belt) என்று அழைக்கப்படும் தென்கிழக்கு மாகாணங்களில் புளோரிடாவுக்கு அடுத்தபடியாக பெயர் பெற்ற மாகாணம் ஜார்ஜியா ஆகும். இங்குதான் அட்லாண்டா மாநகரம் உள்ளது.

அட்லாண்டாவிற்கு ஒரு விசிட் போய் வரலாம் என்று டாம்பாவில் இருந்து புறப்பட்டாயிற்று. அட்லாண்டா, சாலை மார்க்கமாய் சுமார் 450 மைல் தூரம். கிலோ மீட்டரில் சொல்வதென்றால் எழுநூறை தாண்டும். கிட்டத்தட்ட சென்னை டூ கன்யாகுமரி தூரம் என்று வைத்துக் கொள்ளலாம். விமானத்தில் ஒன்றரை மணி நேரப் பயணம். நாங்கள் குடும்பத்தோடு காரிலேயே கிளம்பி விட்டோம். ஏழு மணி நேரப் பயணம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அமெரிக்காவின் நீண்ட பெரும் சாலைகளில் பயணிப்பதே இனிமையான அனுபவந்தானே!

20240402192412643.jpg

வழிநெடுக அதிக ஏற்றம் இறக்கம் இல்லாத சமதள ஐ-75 சாலை. ஆங்காங்கே சாலையோரம் அமைக்கப்பெற்ற ரெஸ்ட் எரியா (Rest Area). ரெஸ்ட் ஏரியா என்றால் ஏதோ நம்ம NHகளில் லாரிகள் ஓய்வெடுக்கும் லேபை (Lay by) மாதிரி நினைத்துவிட வேண்டாம். இங்கே ரெஸ்ட் ஏரியா என்பது சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி ஓய்வெடுக்க சகல வசதிகளோடு அமைந்த வளாகம் எனலாம். கண்டெய்னர் லாரிகள் ஒரு புறம், RV என்றழைக்கப்படும் Recreational Vehicles- கேரவேன் மாதிரியான வண்டிகளுக்கு ஒரு புறம், பிற கார்களுக்கு தனியிடம் என்று தனித்தனியாக நிறுத்துமிடங்கள். வார இறுதி வந்து விட்டால் இங்குள்ளவர்கள் குஷியாகி விடுகிறார்கள். நிறைய பேர் பெட்டி பெட்டியாய் RVகளைக் கோர்த்து இழுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்கள்.

ரெஸ்ட் ஏரியாவில் நன்றாக பராமரிக்கப்படும் சுத்தமான கழிவறைகள். இயற்கையை ரசித்தவாறு ஓய்வெடுக்க, மர நிழல்களில் காலாற நடக்க, காற்றோட்டமாய் அமர்ந்து சாப்பிட என்று விசாலமான வசதிகள் நிறைந்துள்ளன. குடிக்க, கொறிக்க, கூல்டிரிங்ஸ் தின்பண்டங்கள் எல்லாம் ஆட்டோமேட்டிக் வெண்டிங் மிஷினில் வாங்கிக் கொள்ளலாம்.இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நின்று நிதானமாக ஓய்வெடுத்தவாறு பயணித்தோம்.

வழியில் மகாண் (Macon) என்னும் பழமையான நகரம். அங்கு அமைந்துள்ள “செயிண்ட் ஜோசப் கத்தோலிக்க தேவாலயம்” சென்று பார்த்தோம். இது நூற்றாண்டுகளைக் கடந்த புகழ்பெற்ற தேவாலயம். இதன் சிறப்புகளையும் இங்குள்ள புகழ்பெற்ற சிம்போனி இசை கருவி (எந்திரம்!) பற்றியும் அங்கிருந்தவர்கள் எங்களை வாஞ்சையோடு வரவேற்று விளக்கினார்கள். நாங்கள் இந்தியர்கள் என்று தெரிந்ததும் பெரிதும் மகிழ்ந்தார்கள். பண்டைய இந்தியர்களுக்கும் இந்த நகரத்திற்கும் ஏதோ தொடர்புபடுத்தி சொன்னார்கள். எங்களுக்குச் சரியாய் புரியவில்லை.

20240402192637371.jpg

அட்லாண்டா நகருக்குள் நுழையும் போது மாலை நேரமாகி விட்டது. முதலில் அட்லாண்டா சென்டினரி ஒலிம்பிக் பூங்காவிற்குச் சென்றோம். 1996ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் இங்கே நடந்ததன் நினைவாக 22 ஏக்கரில் ஒலிம்பிக் நூற்றாண்டு பூங்கா அமைந்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏதென்ஸ் நகரில் 1896ல் தொடங்கி 1996ல் நூறு ஆண்டுகளை நிறைவு செய்ததால் ஒலிம்பிக் நூற்றாண்டானது. டௌன்டவுண் எனப்படும் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்த இப்பூங்காவைச் சுற்றிலும் நிறைய சுற்றுலா இடங்கள் உள்ளன.

20240402192728114.jpg

ஜார்ஜியா வேர்ல்ட் காங்கிரஸ் மையம், காலேஜ் ஃபுட்பால் ஹால் ஆஃப் ஃபேம், ஸ்டேட் ஃபார்ம் அரீனா, சிஎன்என் மையம் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியம். பூங்காவின் மேற்குப் பகுதியில் ஜார்ஜியா அக்வாரியம் வடக்குப் பகுதியில் கோகோ கோலா மியூசியம். எல்லாமே இங்கு முக்கியமான இடங்கள்.

பூங்காவை ஒட்டியே ஸ்கைவியூ பெர்ரிஸ் சக்கரம், நம்ம ஊர் ரங்க ராட்டினம்தான், ரொம்ப பெரிய சைஸ். அமெரிக்காவில் பல நகரங்களில் இந்த ராட்டினங்களைப் பார்க்கலாம். அட்லாண்டா ராட்டிணம் 42 ஏ/சி கேபின்களோடு சுழன்று கொண்டிருந்தது. டிக்கட் வாங்கிக் கொண்டு ஏறி நகரத்தின் அழகையும் அதைச் சுற்றி பெருநகரத்தின் பரந்த காட்சிகளையும் மூச்சடைக்க பார்க்க முடிந்தது.

அந்தி சாயும் மாலை நேரத்தில் மினிமினுக்கும் வானுயர்ந்த கட்டிடங்களின் வனப்பு கண்களைப் பறித்தது. ஸ்கைவியூ சக்கரத்தில் நான்கு முறை சுற்றி மொத்த நகரையும் மிக உயரத்திலிருந்து பார்த்தது மகிழ்ச்சியின் உச்சம். உச்சியிலிருந்து சாலைகளில் ஓடும் ட்ராம்கள் நெளியும் கம்பளிப் பூச்சிகளாய் தெரிந்தன.

20240402192855872.jpg

ஒலிம்பிக் பூங்காவின் வாட்டர் ஃபவுண்டைன் மற்றும் வண்ண வண்ண ஒலிம்பிக் வளையங்கள் என்று புகைபடங்கள் எடுத்துக் கொண்டு தங்குவதற்கு ஹோட்டலுக்கு கிளம்பினோம்.

ஹோட்டல் போகும் வழியில் பூங்காவைச் சுற்றி நூற்றுக் கணக்கில் வீடற்றோர் (Homeless) நடைபாதையில் அந்த மாலை வேளையில் படுத்திருப்பதை கண்டதும் எல்லோருமே ஒரு கணம் திடுக்கிட்டுப் போனோம். இவ்வளவு வளமான அமெரிக்காவில் இத்தனை ஏழைகளா? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? என்ன செய்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? என்கிற கேள்விகள் இரவு முழுவதும் மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தன.

அட்லாண்டா பற்றி தொடர்ந்து பேசுவோம்…

பயணம் தொடரும்