தொடர்கள்
பொது
பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்

20240403121413748.jpg

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பாஸ்டன் நகரில்,உலகத்திலேயே மிகவும் பழமையானதும் புகழ் வாய்ந்ததுமான பாஸ்டன் மாரத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது.இது வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையின் போது நாட்டுப்பற்றாளர்களின் நாளன்று (Patriot’s day) நடத்தப்படுகின்றது.இது நூறு வருடத்திற்கும் மேலாக நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டாகும்.இதில் கலந்துகொள்ள உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஓட்டப் பந்தய வீரர்கள் வருகிறார்கள்.இதில் கலந்து கொள்வதே மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டு வருகின்றது.இதனைக் காண லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் வருகின்றார்கள்.

20240403121519302.jpg

இந்தப் புகழ்பெற்ற மாரத்தான் போட்டியின் தடகளத்தின் ஒரு பகுதி என் வீட்டிற்கு அருகாமையில் இருந்ததால்,எனக்கு இதனைப் பார்க்கும் சந்தர்ப்பம் சுலபமாக அமைந்தது.காலையில் வீட்டிலிருந்து காரில் கிளம்பினேன்.எந்த சாலைக்குப் போனாலும் அதற்கு இடையே தடை போட்டு இருந்தது.அதில் detour அறிவிப்பு இருந்தது.விவேக்கின் take diversion காமெடி தான் நினைவிற்கு வந்தது.இதற்குப் பிறகு கூகுள் மேப் பார்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என முடிவு செய்து, நான் வேறு ஒரு சாலையில் திரும்பினேன்,அங்கு மக்கள் கூட்டமாக நடந்துப் போவதையும்,கார்கள் முன்னால் சென்று கொண்டிருப்பதையும் பார்த்து,அனைவரும் மாரத்தான் போட்டி பார்க்கத் தான் போய் கொண்டிருப்பார்கள் என யூகித்து, பின் தொடர்ந்து நானும் சென்றேன்.

20240403121652244.jpg

சிறிது தொலைவில் ஒரு பள்ளி இருந்தது.அதன் முகப்பில் Welcome to Boston Marathon என போட்டிருந்தது.அந்த பள்ளியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு,மக்கள் நடந்து செல்லும் பாதையில் நானும் நடந்து சென்றேன்.பதினைந்து நிமிடங்கள் நடந்தவுடன்,பிரதானசாலை வந்தது.மக்கள்,வழிநெடுக நடைபாதையிலும்,அதனைச் சுற்றியுள்ள புல்வெளியில் நாற்காலியிலும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.குழந்தைகள் stroller இல் இருந்தார்கள்.

20240403121747986.jpg

உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டி ஆரம்பித்தது. காவல் துறையினர் பாதுகாப்பிற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்கள்.

முதலில் ஊனமுற்றவர்கள்,அவர்களின் வண்டிகளை கைகளால் வேகவேகமாக இயக்கிக் கொண்டே வந்தார்கள்.பார்வையில்லாதவர்கள் வழிகாட்டியுடன்(guide) ஓடினார்கள்.அவர்களில் பெரும்பாலோர்,தன் கையோடு வழிகாட்டியின் கையை ஒரு கயிற்றால் தகுந்த அளவுக்கு நீளம் விட்டு கட்டியிருந்தார்கள்.அதற்குப் பிறகு பெண்கள் ஓடினார்கள்.கடைசியாக ஆண்கள் ஓடினார்கள்.இப்படி சில நேர அவகாச இடைவெளியில் ஒவ்வொரு பிரிவினராக ஓடினார்கள். ஒவ்வொரு பிரிவினருக்கும் முன்னால் காவல்துறையினர் வந்தார்கள்.

2024040312224674.jpg

இதில் பிரபலமான தொழில் சார்ந்த ஓட்டப்பந்தய வீரர்களும் பிற துறையை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு ஓடினார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு, பெரிதும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். நியூ இங்கிலாந்து பகுதியில் குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு மாறும் தட்பவெப்ப நிலையில் நடக்கும் இந்த நிகழ்வு, ஒரு சாதனை போட்டியாகவே உள்ளது.

உலகின் பிரதான சாலை போட்டிகளில் ஒன்றாக திகழும் இந்தப் போட்டி எப்படி ஆரம்பித்தது என்பதும்,மாரத்தான் என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் ஒரு வரலாறு. மாரத்தான் கிரேக்க நாட்டில்(Greece) இருக்கும் ஒரு ஊரின் பெயர்.கிமு 490 இல் கிரேக்க நாட்டிற்கும் பாரசீகத்திற்கும்(Persia) நடந்த போரில் கிரேக்கர்கள் பாரசீகர்களை வென்றனர்.இந்த செய்தியை Pheidippides என்ற கிரேக்க வீரன் மாரத்தான் நகரில் இருந்து எங்கும் நிற்காமல் தொடர்ச்சியாக ஏதன்சுக்கு ஓடிச் சென்று மக்களுக்கு தெரிவித்தான். அந்த தொலைவு 34.5 கிலோமீட்டர் என்று கணிக்கப்பட்டது.அப்போதிருந்த அரசர்,அவருடைய நினைவாக அந்த நாளை மாரத்தான் நாள் என அறிவித்தார்.அவர் வருடா வருடம் அந்த நாளில் மாரத்தான் போட்டி நடத்தி,அதில் வெற்றி அடைபவர்களுக்கு பணமும் பரிசும் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறார்.

கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸில்(Athens) 1896 ஆம் ஆண்டு முதன்முதலாக நவீன தற்காலிக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்தது.இதில் அந்த பழைய நினைவிற்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நெடுந்தூர ஓட்டப்போட்டியை பந்தய போட்டிகளில் இணைத்து, அதற்கு ‘மாரத்தான்’ என பெயரும் வைத்தனர்.அந்தப் பழைய வரலாறுதான் நவீன மாரத்தான் போட்டிக்கு அடிப்படையாக இருந்தது.

கிரீஸில் மாரத்தான் சாலையை ஒட்டி Pheidippides க்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.. B.A.A வின் குழுவினரும்,அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் மேலாளராகவும் இருந்த ஜான் கிரஹாம்(John graham),1896 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் பந்தயத்தில் இடம்பெற்ற மாரத்தான் போட்டியில் ஈர்க்கப்பட்டு, அதற்கு அடுத்த வருடத்திலேயே 15 ஓட்ட வீரர்களை கொண்டு மாரத்தான் போட்டியை பாஸ்டன் நகரில் ஆரம்பித்தார்.இப்போட்டியை 1897 ஆம் ஆண்டு முதல் பாஸ்டன் தடகளச் சங்கம் (Boston Athletic Association B.A.A)நிர்வகித்து வருகின்றது.B.A.A வின் சின்னமாக Unicorn இருக்கின்றது.

2024040312330444.jpg

1896 ஆம் ஆண்டில் இருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக மாரத்தான் இருந்தபோதும்,1924 ஆம் ஆண்டில் இருந்து தான் இந்த மாரத்தான் போட்டிக்கான தூரம் 42 கிலோமீட்டர் என தடகள விளையாட்டு கூட்டமைப்புகளின் பன்னாட்டு சங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டது.

பாஸ்டன் மாரத்தானில்,கடந்த நூற்றாண்டிலிருந்து தற்போது வரை நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.

1969 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரியமாக ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது திங்களன்று மாரத்தான் நடக்கும்படி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.1972 லிருந்து பெண்கள் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.1996 இல் நடந்த பாஸ்டன் மாரத்தான் நூற்றாண்டு விழா உலக அளவில் சாதனை படைத்தது.2007ஆம் ஆண்டு நடந்த மாரத்தானில்,அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் கலந்துகொண்டார்.2011 இல் பாஸ்டன் மாரத்தானில் 43 சதவிகிதம் பெண்கள் கலந்து கொண்டன20240403123458229.jpg

2013ஆம் ஆண்டு பாஸ்டன் மாரத்தான் போட்டியில்,வெற்றியாளர்கள் எல்லைக்கோட்டை வந்தடைந்த இரண்டு மணி நேரம் கழித்து, எல்லைக்கோட்டிற்கு அருகில் உள்ள Copley square என்ற இடத்தில் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பால் மூன்று பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.

ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் பாஸ்டன் மாரத்தான் போட்டி, கொரோனா வைரசால் 2020 மற்றும் 2021 இல் முறையே செப்டம்பர், அக்டோபர் என தள்ளி வைக்கப்பட்டது.1897 ஆம் ஆண்டில் 15 ஓட்டப்பந்தய வீரர்களை கொண்டு ஆரம்பித்த பாஸ்டர் மாரத்தான் போட்டியில், இப்போது 30,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 2013 ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு வெடிப்பிற்கு பிறகு,பாதுகாப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.129 நாடுகளில் இருந்தும்,அமெரிக்காவில் 50 மாநிலங்களில் இருந்தும்,வரும் 30,000 பங்கேற்பாளர்களும் கலந்துகொள்ளும் இந்த போட்டி பாதுகாப்பான முறையில் நடக்க, பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.அண்மையில் நடந்த ஏப்ரல் 2024 மாரத்தான் போட்டி,128 வது பாஸ்டன் மாரத்தான் போட்டியாகும்.

20240403123612288.jpg

ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பார்வையாளர்கள் இதனைப் பார்க்கின்றனர்.உலகின் ஆறு முதன்மையான மாரத்தான் போட்டிகளில் இது ஒன்றாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு சரியாக 42.195 கிலோமீட்டர் ஆகும்.

மாரத்தானை பார்க்கப் போன இடத்தில் மக்கள் மணி அடித்துக்கொண்டும்,கைதட்டியும் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

20240403123950199.jpg

சிறிய பிள்ளைகள் நடைபாதைக்கு அருகில் நின்று கொண்டு கையை நீட்டிக்கொண்டு இருந்தார்கள்.ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடிகொண்டே,அவர்களின் கைகளைத் தட்டி கொடுத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.சிலர் தங்களின் அன்புக்குரிய சிறப்பு குழந்தைகளை,சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிகொண்டும் ஓடினார்கள்.தொண்டு நிறுவனங்களுக்காக(charities) சிலர் ஓடுகிறார்கள்.இதில் கிடைக்கும் பணத்தை அந்த தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள்.அன்று தட்பவெப்ப நிலை சுமார் 65 F க்கு இருந்ததால்,ஓடுவதற்கு கஷ்டமாக இருந்ததாக ஓட்டப்பந்தய வீரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.ஆனால் அந்த தட்பவெப்ப நிலை மக்களுக்கு மாரத்தான் போட்டியை நீண்ட நேரம் இருந்து பார்க்க வசதியாக இருந்தது.

20240403124142112.jpg20240403124232575.jpg

இதில் கலந்து கொள்ளும் ஊனமுற்றோர்கள், B.A.A அங்கீகரிக்கப்பட்ட சக்கர நாற்காலி மற்றும் பந்தய நாற்காலியை உபயோகப்படுத்துகிறார்கள்.பாதங்களே இல்லாதவர்கள் செயற்கையான பாதங்களை அணிந்து கொண்டு ஓடினார்கள்.பாதங்கள் இல்லாத ஒருவர் வில்வளைவு போன்ற ஒரு கருவியை,தன் குறையுள்ள கால்களுடன் பொருத்தி இருந்தார்.அவர் போட்டியில் ஓடிய காட்சி என் மனதை மிகவும் உலுக்கியது.இவர்களின் மனவலிமையை நினைத்து மலைத்து போனேன்.நம்மில் பெரும்பாலோர் நடைப்பயிற்சி போகாமல் இருக்க பல காரணங்களை தேடுகிறோம்.ஆனால் இவர்களை பார்த்தவுடன் மனதில் ஒரு உத்வேகம் வந்தது.

ஊனம் உடலுக்கு மட்டுமே,மனதிற்கு கிடையாது;மனதின் ஆற்றல் அளப்பரியது!

புகழ்மிக்க இந்த பாஸ்டன் மாரத்தான் போட்டி

“மன உறுதி இருந்தால் யாரும் எதனையும் சாதிக்கலாம்” என்ற அரிய உண்மையை உணர்த்துகிறது.