தொடர்கள்
நேயம்
"கொரோனா சோகம், இளைஞரின் இறப்பு... - நல்லடக்க குழு உதயம்” - ஸ்வேதா அப்புதாஸ்

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா தாக்கம் உலகை உலுக்கி கொண்டிருக்கிறது.. கடந்த வருடம் கொரோனா மரணங்கள் குறைவாக
இருந்தது. இந்த வருடம் இரண்டாவது அலை மிக மோசமாக தன் கோர
தாண்டவத்தை காட்ட துவங்கிவிட்டது... அதன் விளைவு பரிதாப மரணங்கள்...

கொரோனாவால் இறக்கும் உடல்களை, அவர்களின் வீட்டிற்கு கூட எடுத்து செல்ல முடியாத கொடூரம். உறவுகள் மட்டும் மருத்துவமனைக்கு சென்று ஒரு நிமிடம் முகத்தை பார்த்து விட்டு, வந்து விடுவது தான்... அதிலும் இறந்தவரின் மத முறைப்படி கூட, இறுதி மரியாதையை செலுத்த முடியாத சூழ்நிலை...

20210516133355867.jpg
நீலகிரியில், தமிழ்நாடு இஸ்லாமிய முன்னேற்ற கழகமும், நீலகிரி சேவா கேத்திர இளைஞர் குழுவும் இணைந்து, கொரோனாவால் இறந்த உடல்களை எடுத்து சென்று அடக்கம் செய்வது, எரியூட்டுவதை நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்கள் தங்கள் கபர்ஸ்தானத்தில் அடக்கம் செய்ய, இந்துக்கள் தங்கள் முறை படி அடக்கம் மற்றும் எரியூட்டி வருகின்றனர்.

அதே சமயம்... கொரோனாவால் இறக்கும் கிறிஸ்தவர்களுக்கு, தனியாக கல்லறை இல்லை... அந்தந்த ஆலயத்தின் அருகில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தனர். ஊட்டி... காந்தல் என்ற இடத்தில் பெரிய கல்லறை தோட்டம் இருந்தும், அங்கு இடம் இல்லை என்பதால்.... ஒன்றும் செய்ய முடியவில்லை.

20210516133517113.jpg
கடந்த மாதம் 30 ஆம் தேதி காலை டேனி என்ற முப்பத்திஆறு வயது இளைஞரின் இறப்பு, கிறிஸ்தவ இளைஞர்களை தட்டி எழுப்பியது. கொரோனா தொற்று ஏற்பட்டு ஊட்டி தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட டேனி மூச்சு திணரலால் போராட... நல்ல சிகிச்சை கொடுக்கிறோம் என்று கூறி நாட்களை நகர்த்தி, பின் கைகழுவி.. ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றினார்கள். அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்கியும், பலனளிக்காமல் 30 ஆம் தேதி காலை, தன் இளம் மனைவியின் கரத்தில் உயிர் பிரிந்தது...

இதில் என்ன கொடுமை என்றால்... டேனியின் இல்லத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று. வீட்டு தனிமையில் அவர்கள் இருக்க... டேனியின் உடலை கடைசியாகக் கூட பார்க்க முடியவில்லை... டேனியின் மனைவி, தன் ஒரு சில உறவினர்களுடன் நிர்கதியாக நிற்க... கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய முடியாமல் தவித்தார். அவரின் தந்தை, ஆலய பங்கு குருக்களிடம் கேட்க... அவர்களுக்கும் கல்லறை தோட்டத்தில் இடம் இல்லாத சூழ்நிலை. மறைமாவட்ட பிஷப்பின் உத்தரவு கிடைக்க வேண்டும் என்று நிலையி, நேரம் போய்க்கொண்டிருக்க... உடலை கல்லரையில் வைக்க முடியாது என்பதால் டேனியின் மாமா, உடலை எரியூட்டுவதற்கு சம்மதம் தெரிவிக்க... ஊட்டி மஞ்சனக்குறை மையானத்தில் டேனியின் உடல் இளம் மனைவியின் சம்மதத்துடன் அவர் நேரில் நிற்க எரியூட்டப்பட்டது..

20210516133935771.jpg

பின்... ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தில், டேனியின் சாம்பலை எடுத்து வந்து வைத்து இறுதி திருப்பலி நிறைவேற்றி அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்பு கணவனின் சாம்பலை தன் கரத்தில் ஆலயத்தினுள் எடுத்து வந்து

20210516140327117.jpg

கிறிஸ்தவ முறைப்படி திருப்பலி நிறைவேற்றப்பட்டு, அந்த சாம்பலை அடக்கம் செய்தார் அந்த இளம் மனைவி. இதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள் பதறி போய்விட்டனர்...

நாமும் உதகை மறைமாவட்ட முக்கிய குருவிடம் பேசினோம்... “நம் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறைகளில் இடம் இல்லை, கொரோனா உடல்களை புதைக்க ஜே.சி.பி .தேவை. அது கல்லறையினுள் வர முடியாது. இப்படி பல சங்கடங்கள் இருப்பதால், எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. எரியூட்டுவது, நம் மதத்தில் இல்லை. தற்போது வேறு வழிஇல்லமல் அதற்கு ஒத்து கொள்ள வேண்டும். பார்க்கலாம்”... என்று முடித்தார்.

டேனியின் இறப்பு சடங்கு... கிறிஸ்தவ முறை படி நடக்கவில்லை என்பது ஒரு வேதனையாக அனைவர்க்கும் ஏற்பட்டது. அதிலும் அவரின் மனைவியே எரியூட்டு நேரத்தில் இருந்தது, பின் அவரின் சாம்பலை அவரே எடுத்து வந்தது, மிகவும் உறுத்தியது.

ஊட்டி - செயின்ட் மேரிஸ் ஆலய பங்கு பேரவை துணை தலைவர் மேத்தியூஸ், உடனடியாக மறைமாவட்ட ஆயர் அமல்ராஜை சந்தித்து இது குறித்து பேசி.. கட்டாயம், இதற்கு முடிவு எடுக்க வேண்டும் என்று பேச... ஊட்டி, காந்தல் கல்லறையில் இடத்தை தேடி பிடித்தனர், செயின்ட் தெரேசா ஆலய பங்கு தந்தை லியோன் மற்றும் இளைஞர் குழுவினர்.

டேனியின் இறப்புக்கு பின், செயின்ட் தெரேசா ஆலய இளைஞர்கள் பன்னிரெண்டு பேரும், செயின்ட் மேரிஸ் ஆலய இளைஞர்கள் பத்து பேர் ஒன்று சேர்ந்து, கொரோனா இறப்பு உடல்களை கிறிஸ்தவ முறை படி அடக்கம் செய்ய கத்தோலிக்க கிறிஸ்தவ கோவிட் 19 நல்லடக்க சேவை என்ற குழு துவக்கப்பட்டது. இதற்கு வழி வகுத்த மறைந்த இளைஞர் டேனிக்கு, எப்படி நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.

நாம் கத்தோலிக்க கிறிஸ்தவ கோவிட் 19 நல்லடக்க சேவை குழுவின் ஒருங்கிணைப்பாளர் மேத்தியூஸ் தொடர்பு கொண்டு பேசினோம்...

20210516134656811.jpg

“கொரோனா இறப்புகள் ஏற்படும்போது, நம் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்ய தான் விரும்பி யோசித்தோம்... கொரோனா தொற்று பயமும் தடையாக இருந்தது... பின் கடந்த மாதம் எங்கள் ஆலய பங்கு இளைஞர் டேனி இறப்பு, அவரின் மனைவி முன் நின்று அவரின் உடலை எரியூட்டி, அஸ்தியை தன் கரத்தால் எடுத்து வந்து அடக்கம் செய்தது என்னை மிகவும் பாதித்து விட்டது. உடனடியாக எங்கள் ஆயர் அமல்ராஜ் அவர்களை சந்தித்து பேசி... நானும் பாதர் லியோனும் நேரில் சென்று, காந்தல் கல்லறையை ஆய்வு செய்து, ஒரு ஒதுக்கு புறமான இடத்தை தேர்வு செய்து ஜே.சி.பி போக வசதி உள்ளது என்று முடிவு செய்து, மறை மாவட்ட பிஷப் ஒப்புதல் அளித்த பின், நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியிடம் பேசி அவரும் ஓகே சொன்னார். பின் சுகாதார துறை மருத்துவர் ஸ்ரீதர், நேரில் வந்து ஆய்வு செய்து அங்கு கொரோனா தொற்று உடல்களை நம் முறைப்படி அடக்கம் செய்யலாம் என்று கூறி அரசு வழிகாட்டுதலின் படி உதவி செய்தனர்.

20210516135619824.jpg

இந்திய செஞ்சிலுவை சங்க செயலர் மோரிஸ் சாந்த குருஸ் மற்றும் தி.மு.க. மாவட்ட துணை செயலர் ரவி குமார், பிபிடி கிட் கொடுத்து உதவி செய்ய... செயின்ட் மேரிஸ் ஆலய மற்றும் செயின்ட் தெரசா ஆலய இளைஞர்கள், தடுப்பூசி போட்டு கொண்ட 25 பேர் ஒன்று சேர்ந்து இந்தச் சேவையில் இறங்கியுள்ளோம் .

20210516135003281.jpgநீலகிரி மாவட்டம் முழுவதிலுமிருந்து, கொரோனா தொற்றால் இறந்த கிறிஸ்தவர்களின் உடல்களை நாங்கள் எடுத்து வந்து கிறிஸ்தவ முறைப்படி பிராத்தனை செய்து, அடக்கம் செய்ய துவங்கியுள்ளோம். இந்த துணிவை ஏற்படுத்தின இறந்த டேனி ஆன்மாவிற்கு தான் எங்களின் முதல் நன்றிகள். அவரின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. இனி அப்படி யாருக்கும் நடக்க கூடாது” என்று உறுதியாக கூறினார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ கோவிட் 19 நல்லடக்க சேவை குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் ரவி நம்மிடம் கூறும்போது...

20210516135117508.jpg

“இஸ்லாமியர் மற்றும் இந்து சகோதர்கள் துணிந்து இந்தச் செயலை செய்து வந்ததை பார்த்தோம்... எங்களால் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை. பின் திடீர் என்று டேனி என்ற இளம் வயது வாலிபர் இறந்து விட.. அவரின் உடல் அடக்கம் செய்ய தவித்து, பின் வேறு வழியில்லாமல் எரியூட்டப்பட்டு, அவரின் சாம்பல் மட்டும் தான் அடக்கம் செய்யப்பட்டது. அதிலும் அவரின் மனைவி, சாம்பலை எடுத்து வந்தது தான் எங்களை மிகவும் பாதித்து விட்டது.செயின்ட் மேரிஸ் ஆலய பங்கு பேரவை துணை தலைவர் மேத்தியூஸ் துணிந்து எடுத்த முடிவு, எங்க பிஷப் மற்றும் பங்கு தந்தை லியோன் அனுமதி கொடுத்தது பெரிய உதவி.

2021051613540368.jpg

தற்போது இரு பங்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து, கொரோனவால் இறக்கும் கிறிஸ்தவர்களின் உடல்களை கிறிஸ்தவ முறை படி அடக்கம் செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது...” என்று முடித்தார்.

கொரோனவால் மரணிக்கின்ற உடல்களை, நகராட்சி ஊழியர்கள் தான் எரியூட்டி வந்தனர். அவர்களால் முடியாத சூழலில்... இந்துக்களின் உடல்களை, நீலகிரி சேவா கேத்திர இளைஞர் குழு, எரியூட்டி, அடக்கம் செய்யும் பணியை செய்து வருகின்றனர்.

20210516135951245.jpg

மற்ற மதத்தினரின் உடல்களையும் இவர்கள் முறைப்படி இறுதி மரியாதை செய்து வருகின்றனர். அதே போல தமிழ்நாடு இஸ்லாமிய முன்னேற்ற கழக இளைஞர்கள், தங்கள் இஸ்லாமிய மத உடல்களையும் மற்ற மதத்தினர் உடல்களையும் எடுத்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.

20210516144810898.jpg

ஊட்டி எம்.எல்.ஏ. கணேசன், புதியதாக துவக்கி இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ கோவிட் 19 நல்லடக்க சேவை குழுவின் இளைஞர்களை நேரில் சந்தித்து, அவர்கள் எடுத்த முயற்ச்சியை பாராட்டி எல்லா உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளார்.

தற்போது கத்தோலிக்க கிறிஸ்தவ கோவிட் 19 நல்லடக்க சேவை குழு, இந்த மனிதாபிமான பணியை துவக்கிருப்பது, இந்த பயங்கரமான நெருக்கடி நாட்களில், அனைத்து இளைஞர்களும் மதத்தை தாண்டி இந்த பெரிய உதவியை செய்து வருவதை நம் சமுதாயம் கண் கலங்கி பார்த்து நன்றி தெரிவித்து கொண்டிருக்கிறது.

நம்மை விட இறந்த ஆன்மாக்கள், இந்த இளைஞர்களுக்கு தங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டிருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது....