தொடர்கள்
கவர் ஸ்டோரி
விலைவாசி ஏற்றம்... தாய்மார்கள் சீற்றம்!! கவர் - 2 - ஆர்.ராஜேஷ் கன்னா

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் வருமா?!

20210517201354848.png

சமீபத்தில் ஒரு நாள்.... பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு கவலையளிக்கிறது. கச்சா எண்ணெய் விலையுயர்வு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த, அதனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும், இதனை ஜிஎஸ்டி உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கவலையுடன் தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வால், சாமானிய மக்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது என மத்திய அமைச்சரின் கவலை, இந்திய மக்களின் விலைவாசி உயர்வால் தவிக்கிறார்கள் என்பது நிஜமாக பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு ராக்கெட் வேகத்தில் எகிறிக்கொண்டு இருக்க... குடும்ப பட்ஜெட் சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாகவே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செயல்படுத்தப்படும் லாக் டவுன், அனைத்து தரப்பினர் இயல்பு வாழ்க்கையையும் முடங்க செய்து விட்டது. இதில் விலைவாசி உயர்வு, கொரோனா வைரஸை விட... சாமனியர்களை மிரட்ட தொடங்கி விட்டது.

கொரோனா காலத்திற்கு பிறகு, பல சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்காமல், ஊழியர்களுக்கு முழுவதுமாக சம்பளத்தை கூட கொடுக்க முடியாத அவல நிலையில் திண்டாடி வருகிறது. இதனால் பல குடும்பங்கள், எப்படி காலத்தை தள்ளுவது என்ற கவலையுடன் உள்ளனர்.

இந்த நிலையில்... அன்றாடம் உபயோகிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் ஒரு வருடத்தில் பன்மடங்கு உயர்ந்து விட்டதால் சிறிய மற்றும் அன்றாட வேலைக்கு சென்று சிறிய பட்ஜெட்டில் வாழும் சாமானிய குடும்பங்கள், விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

20210517202423250.jpg

ஜிஎஸ்டி வரி விதிப்பு சுமை அதிகமாக இருப்பதால், நடு மற்றும் சிறு ரக தயாரிக்கும் தொழிற்சாலைகள், உற்பத்தி செய்ய வாங்கும் முலப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், தொழிற்சாலையை மூடிவிட்டது. இதனால் பல தொழிலாளர்களுக்கு பணியின்மை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு உலக நாடுகளில் இருக்கும் ஜிஎஸ்டி வரியை விட, நமது நாட்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அதிகமாக உள்ளது. இதனை மற்ற நாடுகள் போல் குறைத்து செயல்படுத்தினால், எங்களை போன்ற சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை மீண்டும் பழையபடி இயக்க முடியும் என்று தொழிற்சாலையை மூடிய நபர் தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் விவசாயம் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்கள், கடந்த இரண்டு வருடத்தில் நல்ல முறையில் இயங்கி வந்திருக்கிறது. விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு, உரிய தொகை கிடைக்கிறதா என்று பார்த்தால்... பல இடங்களில் உற்பத்தி செலவு கூட விவசாயிக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சி லாக்டவுன் காலம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், நம் நாட்டில் உள்ள விவசாயம் தங்கு தடையின்றி நடைப்பெற்று கடந்த ஒன்றரை வருடங்களாக ஏழை எளிய மக்கள் பசியாறி கொண்டனர் என்பது ஆறுதலான செய்தியாக உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பல தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. ஒரு பொருளுக்கு தேவை அதிகரித்து தட்டுபாடு ஏற்பட்டால், விலை அதிகரிக்கும். தேவை குறைந்து பொருள் அதிக உற்பத்தியானால் விலை சரியும் என்பது அடிப்படை நியதியாகும்.

நாடெங்கிலும் விவசாய பணிகள் மீது மக்கள் ஆர்வம் குறைந்து வருகிறது என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் தொடங்குவது, பொருளாதார மண்டலங்கள் பெருக்கத்தால், விவசாயம் செய்யும் நிலப்பகுதிகள் பெருமளவு குறைந்து வருவதால் உணவு பொருட்களின் உற்பத்தி கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாகவும், கட்டிடங்களாகவும் மாறி வருகிறது. விவசாய நிலங்களை வாங்கி தொழிற்சாலைகள், கட்டிடங்கள், கல்லூரிகள், பொருளாதார மண்டலங்கள் என மாற்றி வருவதால்... விவசாயி பணிகள் தடைப்பட்டு, உணவு உற்பத்தி குறைவதால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. விவசாய நிலங்களை குறி வைத்து மேற்கண்ட பணிகள் நடைபெறுவதை கேட்டால், பொருளாதார வளர்ச்சி என்ற பதிலை சொல்லிவிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் நழுவி விடுகின்றனர்.

மக்கள் தொகை அதிகரித்து வருவதால், உணவுத் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் விவசாயப் பணிகளின் மீது மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது. வேறு பணிகளுக்கு செல்வதை அவர்கள் விரும்புகின்றனர். மேலும் தொழிற்சாலைகள், பொருளாதார மண்டலங்கள் இவற்றின் பெருக்கத்தால், விவசாய நிலப்பகுதிகள் குறைந்து விட்டன. இதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது. இதனால் விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது.

வரும் 2050-ம் ஆண்டில், இந்திய ஜனதொகை 160 கோடியாக உயர வாய்ப்புள்ளது. அப்போது, இந்தியாவில் உணவு தேவை பன்மடங்கு அதிகரிக்கும். அத்துடன் இப்போது நாம் சந்திக்கும் விலைவாசி உயர்வு, நாளுக்கு நாள் அதிகரித்து எதிர்கால சந்ததிக்கு உணவு பொருள் தட்டுபாடு அல்லது பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எதிர்காலத்தில் விவசாய நிலங்கள் முலம் அதிக உணவு உற்பத்தி பொருளை பெற இப்போதே நாம் விவசாய நிலங்களை விரிவாக்கம் செய்து, வேளாண் உற்பத்தி பெருக்கும் கொள்கைகளையும் திட்டங்களையும் விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று விவசாய வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வு என்பது தொழில்துறை, வேளாண்மை, சேவை பணித்துறை என்று பொருளாதாரத்தின் எல்லா துறைகளிலும் உற்பத்தி செலவை அதிகப்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையுயர்வை அதிகரித்துவிடும்.

சென்ற 20 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை 238 % மேல் விலை உயர்ந்திருப்பதால், விலைவாசியும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

பெட்ரோல், டீசல் இல்லாமல் கிட்டதட்ட எந்தத் தொழிலையும் தற்போது செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால்... பெட்ரோல், டீசல் விலையுயர்வை கட்டுபடுத்த பல வருடங்களாக ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அப்படி செய்தால், விலைவாசி அதிகளவில் குறையும் என்று பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நமது சாமானிய மக்களின் இந்தக் கோரிக்கையை நமது மத்திய அரசு விரைவில் நிறைவேற்றினால், மக்கள் அவதிப்படும் விலைவாசி எனும் துயரம் குறையும்.

கடந்த காலங்களில்... விலைவாசி உயர்வு பிரச்சனையால், பல ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிகளை இழந்துள்ளனர். முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி அவசர காலநிலையை பிரகடப்படுத்தினர். அதன்பின் 1977 ஆண்டு நடந்த தேர்தலில் அவர் ஆட்சியை இழந்தார்.

20210517202032152.jpg

ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி ஆண்டு வந்த போது, வெங்காய விலை உயர்வு விண்ணை முட்டியது. இது தான் சமயம் என்று அப்போது இந்திராகாந்தி வெங்காய விலையுயர்வை தனது பிரச்சாரமாக எடுத்துகொண்டு, 1980 நடந்த மக்களவை தேர்தலில் இந்திராகாந்தி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக ஆட்சி நடத்த தொடங்கினார். அடுக்கு முறையால் தனது இமேஜை இழந்த இந்திரா காந்தி, மீண்டும் பிரதமர் நாற்காலில் அமர வைத்தது வெங்காய விலை உயர்வு என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

1988-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைப்பெற்று வந்தது. பிரதமர் வாஜ்பாய் தங்க நாற்கர சாலை திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்து, நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தார். தீடீரென் வெங்காய விலை விலையுயர்வு ஏற்பட்டதால், டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஷீலா தீட்ஷத் முதல்வரான கதையும் நடந்தது.

சென்ற வருடம் முடிவில் வெங்காயம் விலை கிலோ ருபாய் 150 வரை சென்றது. கடுமையான மழை மற்றும் உற்பத்தி குறைவு தான் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என சொல்லப்பட்டது. சிறிது காலம் வெங்காயம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அதன்பின் தற்போது வெங்காயம் விலை தற்போது கிலோ ரு 20 முதல் ரு 30 வரை கட்டுக்குள் வந்தது.

இந்தியாவில் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகள் பெருமளவில் இல்லை. அத்துடன் தக்காளி போன்ற விளைப் பொருட்களை சேமித்து வைக்கும் குளிர்பாதன கிடங்குகளும் இல்லை என்பதால்... நமது விவசாயிகள் விளைவிக்கும் பல பொருட்கள், விளைச்சல் அதிகமாகும் போது சேமிக்க முடியாமல் ரோட்டில் வந்து கொட்டும் நிலை உள்ளது.

நாடு முழுவதும் சேமிப்பு கிடங்குகளை மத்திய அரசு போர்கால அடிப்படையில் நிர்மாணித்தால், ஆண்டு முழவதும் ஒரே சீரான விலை இருக்கும். இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள், சாமானியர்களும் விலைவாசி உயர்வின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார் இந்தியாவின் விவசாய ஆராய்ச்சியாளர்.

தொழில் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதைவிட விவசாய வளர்ச்சி அதிமுக்கியம் என்பதால் விவசாய விளைச்சல், பாசன வசதி கொண்ட நிலங்களை விவசாயத்தை தவிர மற்ற காரணங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு தடை கொண்டு வரவேண்டும் என்கின்றனர்.

வறட்சி பகுதிகள், வறண்ட நிலங்களில் தொழிற்சாலைகள், பொருளாதார மையங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் அமைத்து கொள்ள அரசு அனுமதி வழங்கலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. வீணாக கிடக்கும் விவசாய நிலங்களை, அரசே தலையிட்டு ஏழை விவசாயிகள் விவசாயம் செய்ய உதவினால்... வரும் காலத்தில் விலைவாசி உயர்வினால் நமது பாரத நாடு சிரமப்படாது.

தமிழகத்தில் தோராயமாக 4 லட்சம் சரக்கு லாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையுயர்வினால் கடந்த ஓராண்டில் மட்டும் 25 சதவீதத்திற்கு மேல் சரக்கு வாகனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, மளிகை பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைத்து, ஜி.எஸ்.டி வளையத்திற்குள் கொண்டு வந்தால், கிட்டதட்ட விலைவாசி குறைந்து விடும். ஆனால், எந்த மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்யவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.

சென்ற ஆண்டு இருந்த விலையை விட, இந்த ஆண்டு சமையல் எண்ணெய் 20 சதவீதம், சூரிய காந்தி எண்ணெய் விலை 56 சதவீதம், வனஸ்பதி 42 சதவீதம், பாமாயில் 52 சதவீதம் மற்றும் பருப்பு வகைகளின் விலை 15 சதவீதம் என அத்தியாவசிய பொருடகளின் விலை உயர்ந்து சாமானிய மக்களை விலைவாசி உயர்வு வாட்டி வதைக்கிறது. இப்பல்லாம் பாக்கெட் நிறைய பணம் கொண்டுபோனாலும்... காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கி வீட்டிற்கு வரும் போது பாக்கெட்டில் பணம் இல்லாமல் காலியாக இருக்கிறது என்பது மட்டுமே நிஜம்.