தொடர்கள்
கவர் ஸ்டோரி
விலைவாசி ஏற்றம்... தாய்மார்கள் சீற்றம்... கவர் - 1 - தில்லைக்கரசி சம்பத்
20210518144907431.jpeg

கொரோனா இந்தியாவுக்கு வந்து ஒன்றரை வருடங்களாகிறது. முதல் அலையின் போது, நாடெங்கிலும் போடப்பட்ட ஊரடங்கின் விளைவாக... சிறு தொழில் முனைவோர், தனியார் நிறுவன ஊழியர்கள் முதற்கொண்டு கூலி தொழிலாளர்கள் வரை பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.

2021 மார்ச்சில் வந்த இரண்டாம் அலையின் கொடூர தாக்குதலில் சில லட்சம் மக்கள் உயிரையே இழந்தனர்.

கொரோனா கொடுமைகள் ஒருபுறம், வேலையின்மை ஒருபுறம், விஷம் போல் ஏறிய விலைவாசி மற்றொருபுறம் என பன்முக தாக்குதல்களில் இந்தியர்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். அதுவும் இல்லத்தரசிகளின் நிலைமை மிகவும் கொடுமை. பல குடும்பங்களில் வருமானம் பாதியாகி போனது. ஆனால், விலைவாசியோ பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு அவர்களின் கணவன்மார்கள் கொடுக்கும் மாத செலவிற்கான பணம் குறைந்திருக்கிறது. ஆனால், சமையல் சிலிண்டரிலிருந்து, காய்கறி, மளிகை சாமான்கள் வரை விலை எக்குத்தப்பாக எகிறி இருக்கிறது. ஊரடங்கில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருக்க, சமையல் ஒரு நாளைக்கு மூன்று வேளை, 30 நாள் என்று சாப்பாடு செய்து போடும் இல்லத்தரசிகள் இந்த விலைவாசி உயர்வினால், திக்குமுக்காடி நிற்கிறார்கள்.

20210518181104226.jpeg

2020-ல் கொரோனா முதல் அலையின் போது இந்தியர்கள் 1 கோடி பேருக்கு மேல் தங்களது வருங்கால வைப்பு நிதியை சேமிப்பு கணக்கிலிருந்து எடுத்து இருக்கிறார்கள். 2019-ஐ ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கையில் பாதி பேர் தான் இந்த நிதியை எடுத்து இருக்கிறார்கள்.

வயதாகி வேலையில் ஓய்வு பெற்றப்பின், தங்களது செலவுகளுக்காக பாதுகாப்பாக போட்டு வைத்த சேமிப்பை, இப்பொழுது கை செலவிற்கு எடுத்திருக்கிறார்கள் என்பது வேதனை மிகுந்த செய்தி.

சமையல் எண்ணெய், டீத்தூள், பருப்பு வகைகள், வெங்காயம், பால், அரிசி, காய்கறிகள், பழங்கள் என அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. ரூ.15000 மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு, ஏற்கனவே கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்துவந்த சூழ்நிலையில், இந்தக் கடுமையான விலைவாசி உயர்வினால் அவர்களின் மாத செலவு ரூ. 25000 என உயர்ந்திருக்கிறது.

20210518181136499.jpeg

சம்பள உயர்வு இல்லை... வேலை நிலைத்தால் போதும், பாதி சம்பளம் கூட பரவாயில்லை என்று சிரமத்துடன் ஓட்டுகிறார்கள். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையோ புதிய உச்சத்தில் நிற்கிறது. மத்திய அரசும் அதன் விலையை குறைக்கும் வழியும் தெரியவில்லை.

வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கால் வீட்டில் இருக்க, மின்சார கட்டணம் வேறு எகிறி இருக்கிறது.

20210518181201679.jpeg

நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கான காய்கறிகளுக்கு மாத செலவு ரூ.2000 இருந்தது. இப்போது அது இருமடங்காக உயர்ந்திருக்கிறது.
இந்தக் காலக் கட்டத்தில், கொரோனா வந்து மீண்டவர்கள், கொரோனா வராதவர்கள் என அனைவரும் உடலில் எதிர்ப்பு சக்தி கூட, அனைத்து மக்களையும் சத்தான உணவு வகைகள் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று அரசு சொல்கிறது. விற்கும் விலைவாசியில் ஏழை, நடுத்தர வர்க்கம் எப்படி வாங்குவார்கள்? இருக்கும் செலவுகள் பத்தாது என்று முககவசம் சானிடைசர் செலவு வேறு..!

அசைவ உணவிற்கான மீன், மாமிசம் போன்றவைகளை மார்க்கெட் சென்று வாங்கும் வழியில்லாது போனதால், பலரும் ஸ்விக்கி போன்று ஆன்லைன் விற்பனை மூலம் வீட்டுக்கே வரவழைக்கிறார்கள். ஆனால் விலையோ மூன்று மடங்கு. “புரோட்டீன் உணவுவகைகளை அதிகம் உண்ணுங்கள். தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும்” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த முட்டைவிலையும் ஏறி இருக்கிறது. 5 பேர் அடங்கிய குடும்பத்தில் தினமும் அனைவரும் முட்டை சாப்பிடுவது மத்தியவர்கத்திற்கு சாத்தியமில்லை தான். முன்பெல்லாம் வாரம் ஒரு முறை முட்டை சாப்பிடுவார்கள். இப்போது இந்த விலைவாசி உயர்வு, அதையும் வாங்க வழியில்லாது தடுத்து விட்டது.

சில்லறை வணிக வியாபாரிகள், இந்தக் கொரோனா காலத்தில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். ஒரு முறை விலையேற்றி விட்டால் அதை குறைப்பதே இல்லை.

100 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கியவர்கள், இப்போது அதே அளவு காய்கறிகளுக்கு 200 ரூபாய் செலவழிக்கின்ளனர். பழங்களோ கேட்கவே வேண்டாம். மாதுளம் பழம் ஒரு கிலோ ரூ280.

தக்காளி கிலோ ரூ20, சின்ன வெங்காயம் கிலோ 10,0 பெரிய வெங்காயம் ரூ.40. இப்படி எல்லாமே தாறுமாறாகதான் எகிறி இருக்கிறது.

அரிசி சில வருடங்களாகவே விலை ஏறி கொண்டே போகிறது. கடந்த ஒரு வருடமாக சன்ஃபளவர் எண்ணெய் 50% விலை உயர்ந்து இருக்கிறது.
துவரம் பருப்பு 25%, கடலை பருப்பு 24% விலை ஏறி இருக்கிறது. இந்த சிறு தானியங்களான குதிரவாலி, வரகு, சாமை, தினை, ராகி, கம்பு போன்றவைகளும் ஒரு கிலோவுக்கு ரூ.10க்கு மேல் விலை ஏறி இருக்கிறது. Biscuit போன்ற தின்பண்டங்கள் விலையும் உயர்ந்துள்ளது. இது போன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது.

இந்த கொரோனா ஊரடங்கை சாக்காக வைத்து கொண்டு, மொத்த விற்பனையாளர்கள், சிறுவணிக வியாபாரிகள் தங்களின் வாய்க்கு வந்த விலையை வைத்து, அத்தியாவசிய உணவு பொருட்களை விற்கிறார்கள். அதற்கு போக்குவரத்து செலவு, பெட்ரோல், டீசல் விலையேற்றம்தான் காரணம் என்கிறார்கள். முன்பெல்லாம் காய்கறிகள், மளிகை சாமான்கள், எங்கே விலை மலிவாக கிடைக்கிறதோ அவ்விடங்களை தேடிப் போய் மக்கள் வாங்கி கொண்டிருந்தார்கள். ஆனால், ஊரடங்கின் காரணமாக வீட்டை சுற்றி இருக்கும் கடைகளிலேயே இவற்றை வாங்கும் சூழ்நிலை வந்துவிட்டதால், வியாபாரிகள் சொல்லும் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.

குறைந்த பட்சம் இந்த காய்கறிகளுக்காவது, அரசாங்கமே ஒரு விலை நிர்ணயம் செய்தால் என்ன??

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
எதிர் கட்சிகளோ, இந்த விலைவாசி உயர்வுக்காக... அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை முன் எடுக்காமல் மவுனமாக இருக்கிறார்கள். கண்டனங்கள் கூட தெரிவிக்காமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொத்தத்தில் சமையலறை பட்ஜெட் 40% உயர்ந்ததால், இல்லத்தரசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, சிரமப்பட்டு வருகின்றனர்.