தொடர்கள்
இசை
கவிஞரின் 95 வது பிறந்தநாளில் ஒரு கவிதாஞ்சலி... - காவிரிமைந்தன்

2021051816214405.jpg

கவிதை வானின் பூரணச்சந்திரன் கண்ணதாசன்!

பாரதிக்குப் பிறகு, கவிதை உலகில் பொதுஜன மக்களின் கவிஞனாகப் பிரகாசிப்பவன் கண்ணதாசன்! கவியரசின் திருவுருவச்சிலை 09.12.1994 அன்று மாலை தி.நகரில் திறந்துவைத்து உரையாற்றிய அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் “கவிதை வானின் பூரணச் சந்திரன் கண்ணதாசன்” என்று புகழாரம் சூட்டினார்!

20210518162227399.jpg

தமிழகத்தின் மிகப் பெரிய அடையாளம் கண்ணதாசன்! தமிழ் மொழிக்கு அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது! அவரின் மொழி ஆளுமை என்பது பாமரன் வரை பைந்தமிழைக் காதலிக்க வைப்பது! கரடு முரடாகக் காட்சியளித்த இலக்கியச் செய்யுள்களையெல்லாம் எளிய பதங்களாக்கி, இனிய பல்லவிகளாக்கி அருமையான பாட்டுவரிகள் மூலம் நமக்கான இலக்கிய விருந்தினைப் படைத்தவர் கண்ணதாசன்!

ஆகச் சிறந்த கவிஞர் அவர் என்பதால், அன்றைய நாளில் தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தாலும், கண்ணதாசனை அரசவைக் கவிஞராக்கி அழகுபார்த்தார்!

புலவர் புலமைப்பித்தன், கண்ணதாசனைப் பற்றி குறிப்பிடும்போது... கண்ணதாசனைவிட பலமடங்கு நான் படித்தவன் என்று சொல்லி, சில வினாடிகள் கழித்து.. கண்ணதாசன் என்னைவிட பலமடங்கு படைத்தவன் என்றார்! கவிஞர் கண்ணதாசன் பற்றி புலவர் புலமைப்பித்தன் எழுதிய வரிகளிவை:

வேட்டியின் ஒருபக்கத்து நுனியினைப்பிடித்து
கோட்டைக்குள் அந்தக் கோமகன் செல்லும்போது
கவிதையே கால் முளைத்துச் செல்வதுபோலிருக்கும்
என்பார்.

கண்ணனின் கையிலிருந்து இம்மண்ணில் விழுந்த புல்லாங்குழல் என்பார் – வாலிபக் கவிஞர் வாலி! மேலும் – எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன் – கண்ணதாசன் எனும் அழகிய இலக்கியப் புத்தகத்தைக் கிழித்துவிட்டான்! என்றதும் அவரே!
கவியரசு கண்ணதாசன் இருந்த நாற்காலி, இன்னும் முழுமையாக நிரப்பப்படாமல் இருக்கிறது என்கிறார் கவிஞர் பிறைசூடன் அவர்கள்!
கண்ணதாசனைப் பொறுத்தவரை.. ஏனைய கவிஞர்களிலிருந்து விஞ்சிநிற்பதற்கு ஒற்றைக் காரணம்தான் உண்டு. ஆம்.. அவன் மானுட வாழ்வின் சுகங்களுக்கும் சோகங்களுக்கும் சொந்தம் சொல்லும் வரிகளை அணுவணுவாகத் தந்தவன். ஒவ்வொரு தனி மனிதனும், தன்னை இவர்தம் பாடலில் கண்டெடுக்கிற அதிசயம் வேறெங்கும் நடக்கவில்லை. வாழ்வின் எந்த சூழ்நிலைக்கும் கண்ணதாசன் பாடல் கைகோர்த்து நிற்கும் அழகு காலத்தை வென்ற கவிஞராக கண்ணதாசனை பரிணமிக்க வைத்திருக்கிறது!

காதலுக்கும் வசந்த மாளிகை தந்தவன்.. தத்துவங்களுக்கும் தடாகமாய்த் திகழ்ந்தவன்! மொத்தத்தில் இவன் பாடல் வரிகள் மானுட வாழ்க்கைக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கும் உயில்! அன்பு, வீரம், தாய்மை, பாசம், பக்தி, தேசப்பற்று, சோகம், ஆறுதல் என்று அத்தனை வகைகளிலும் அள்ளித் தெளித்திருக்கிறார்.

இத்தனைப் பாடல்களையும் காலகாலமாக நாம் கேட்டு ரசித்து, மகிழ்ந்து வருகிறோம்.. மானசீகமாக கண்ணதாசனுக்கு அன்றாடம் நன்றிசொல்லிக் கொண்டே!

எல்லாவற்றிலும் இழையோடிக் கிடப்பது எது என்பதை நாம் கண்டுணர்ந்தால், அவர்தம் பாடல்களில் உள்ள நேர்மறை எண்ணங்கள் நம்மை தலைநிமிரவைத்து நடைபோடவைக்கும்!

வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்..
ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா
என்று
அழைப்பு விடுக்கிறார்! அங்கே பாதை தெரிகிறது! பயணம் தொடர்கிறது! காட்சி கிடைக்கிறது! கவலை பறக்கிறது! வாழ்க்கை இனிக்கிறது அல்லவா?

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்


நேர்மறை எண்ணங்களை.. நம்பிக்கையை.. உற்சாகத்தை, ஊட்டத்தை, நங்கூரமிட்டு வைத்திருக்கிற அதிசயம் நம்மை வியக்க வைக்கிறது! அநேகப் பாடல் வரிகள் இந்த உணர்வுகளின் பின்னணியில்தான் பின்னிக்கிடக்கின்றன! சோகத்தைக்கூட இவன் சொல்லும்போது நமக்கு சுகமாக படுகிறது.

எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே...

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்..

உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக.. அன்னை மடியை விரித்தாள் எனக்காக..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்ததுன்பம் எதுவென்றாலும்
வாடிநின்றால் ஓடுவதில்லை..

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


சராசரி மனிதனுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்து தனது பாடல்களில் பெரும்பாலும் அவர்களுக்கான நம்பிக்கையை, நேர்மறை எண்ணங்களைப் பதிவுசெய்து தான் வெற்றிபெற்றதுடன்.. அவர்களையும் வெற்றியடையச் செய்திருப்பதுதான் கண்ணதாசனின் சிறப்பாகும்!

தமிழகத்தின் தவப்புதல்வன்.. மானுடவர்க்கத்தின் மகத்தான கவிஞன்! நாட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டையிவன்! பட்டினத்தார் வழிதோன்றிவந்த தத்துவ ஞானமகன்! சித்தர்கள் பலர் சொன்ன தத்துவங்களையெல்லாம் எளிய வார்த்தைகளில் வடித்துத்தந்த கவி வள்ளல்! இலக்கியங்களின் சாறெடுத்து தன் இன்பத்தமிழால் நம் இதயங்களில் வார்த்தமகன்!

தன் மனதை ஆளக்கூடிய திறன் தந்த கண்ணதாசன்!
பிறருக்காக வாழ வேண்டுமென்ற எண்ணம் தந்த கண்ணதாசன்!
தன்னம்பிக்கையை நம் நெஞ்சங்களில் ஆழப் பதித்தவர் கண்ணதாசன்!

மற்றவர்களின் மனவலிகளைப் புரிந்துகொண்டு கருணையோடு பழக வைத்த கண்ணதாசன்!
தோல்விகண்டு துவண்டுவிடாத நெஞ்சுரம் தந்த கண்ணதாசன்!
இயற்கையிடம், இறைவனிடம் சரணாகதி அடைகின்ற மனப்பக்குவத்தைத் தந்த கண்ணதாசன்!
சிரமங்களுக்கு மத்தியிலும் சிரிக்கக்கூடிய அருந்துணிவு.. தந்த கண்ணதாசன்!
நிலையற்ற வாழ்வின் நிலையுணரும் பேரறிவு தந்த கண்ணதாசன்!!
காலமெல்லாம் கண்ணதாசன் புகழ் வாழ்க!!

அன்புடன்..
காவிரிமைந்தன்