தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்...

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்த கதை..!

20210519073232243.jpeg

ஒரு பக்கம் வருவேன், சீக்கிரம் வருவேன்... கட்சி என்னுடையதுதான் என்று ஆடியோ ரிலீஸ் செய்கிறார் சசிகலா. இன்னொரு பக்கம் ஓபிஎஸ் - இபிஎஸ் கோஷ்டிசண்டை. இது போன வாரம் நிலவரம். இந்த வாரம்... நாங்கள் இரண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு என்று ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒன்று கூடிவிட்டார்கள்.

எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவர் ஆனதும், துணைத் தலைவர் பதவி ஓபிஎஸ்-க்குத்தான் என்பதில் உறுதியாக இருந்தார், அவர் நினைத்ததை சாதித்து விட்டார்.

ஜூன் 14 ஆம் தேதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா போன்ற பதவிகளை தீர்மானிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு விஜயபாஸ்கர் உட்பட பலர் ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்கள் யாரிடமும் எடப்பாடி எந்த உத்தரவாதமும் தரவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன், எடப்பாடி, ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆலோசனை செய்தார்கள். ஒரு கட்டத்தில் எடப்பாடி... வேலுமணி, தங்கமணி இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு, ஓ. பன்னீர் செல்வத்திடம்... “அண்ணே பணத்தைக் காட்டி, இந்தக் கட்சியை விலைக்கு வாங்கலாம் என்று அந்த பொம்பள நினைக்குது. நீங்க அதுக்கு துணைக்கு போகப்போறீங்களா... அந்தப் பொம்பளகிட்ட, கட்சி போனா என்ன நடக்கும்னு, என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும். நீங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வேணா கூட எடுத்துக்கோங்க.. ஆனா, இந்தப் பொம்பளையை மறுபடியும் இந்தக் கட்சியில் சேர்க்க வேண்டாம், உங்களை கையெடுத்து கும்பிடுறேன்” என்று உருக்கமாக பேச... ஒரு மாதிரியாக ஓபிஎஸ்... “எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்” என்று சொல்ல... அப்போது எடப்பாடி... “நீங்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்ல... அதற்கு ஓபிஎஸ் சம்மதம் சொன்னதும்... “உங்களை மீறி அல்லது உங்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது போல், நான் எதுவும் செய்ய மாட்டேன். இந்த உத்தரவாதத்தை நான் உங்களுக்கு தருகிறேன். அதிமுக என்பது திமுகவின் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி, அதை நாம் எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடக்கூடாது” என்பதையும் பன்னீர்செல்வத்திடம் நினைவுபடுத்தினார். எடப்பாடி சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் ஓபிஎஸ். அதைத் தொடர்ந்து... “முன்னாள் அமைச்சர் ஆனந்தன், பெங்களூர் புகழேந்தி உட்பட 16 பேரை கட்சியை விட்டு நீக்க கோரிக்கை வைக்க..” அதற்கும் ஓபிஎஸ் சம்மதித்தார்.

20210519073257748.jpeg

இது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சி. சசிகலா, அதிமுகவில் நுழைய பன்னீர்செல்வத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்த நினைத்தார். இப்போது பன்னீர்செல்வம், எடப்பாடி பக்கம் சாய்ந்ததும். நான் ஓபிஎஸைதான் மீண்டும் முதலமைச்சராக்க நினைச்சேன், ஆனால் அவர் என் முதுகில் குத்தி விட்டார் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதே, சசிகலா ராஜினாமா கடிதம் கேட்டு வற்புறுத்தியதால் தான் என்பதை தனது வசதிக்காக சசிகலா மறந்து போனார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைந்ததில், இன்னொரு காரணமும் உண்டு. திமுகவை பொருத்தவரை அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர்ந்து, அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. சமீபத்தில் சுகாதாரத்துறையில் நிறைய ஊழல்கள் நடந்திருக்கிறது, அதுபற்றி விசாரித்து வருகிறேன் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் சொன்னதையும் கவனிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை, ஆதாரங்களுடன் நிரூபிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கை விசாரித்து, தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு நிறைய ஆதாரங்கள் அவர்களிடம் சிக்கியிருக்கிறது. இதுபற்றி முதல்வரின் கவனத்திற்கு அவர்கள் உடனுக்குடன் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

20210519073320901.jpeg

உதாரணத்துக்கு ஓபிஎஸ், ஆர்.வி. உதயகுமார் இருவர் மீதும் புதிதாக ஒரு வழக்கு தொடர, சில ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியிருக்கிறது. பஞ்சமி நிலம், அரசு புறம்போக்கு நிலம் என அரசுக்கு சொந்தமான நிலங்களை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 270 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு பட்டா மாற்றி தந்திருக்கிறார்கள். அதன் பின்பு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக... அந்த நிலங்களை மத்திய அரசிடம் தந்து, 250 கோடி ரூபாய் இழப்பும் பெற்றிருக்கிறார்கள். இது பற்றிய புகார் வந்ததும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை செய்தபோது... முதல்கட்ட விசாரணையில், மாவட்ட வருவாய் அலுவலர், முன்னாள் தாசில்தார், நிலத்தை விற்பவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அவர்கள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கை ஓபிஎஸ், ஆர்வி உதயகுமார் மீது திருப்ப லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்திருக்கிறது.

20210519073524806.jpeg

இது பற்றிய விவரங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு போனபோது... அவருக்கு திடீரென ஒரு புதிய யோசனை தோன்றியிருக்கிறது. “இதில் மத்திய அரசு சம்பந்தப்பட்டிருக்கிறது. போலி பட்டாக்கள் மூலம் மத்திய அரசிடம் இழப்பீடு தொகை வாங்கியிருக்கிறார்கள். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்தால், அப்போதைய வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஆர்வி உதயகுமார், ஓபிஎஸ் இருவரும் சிக்குவார்கள்” என்று யோசித்து வருகிறார். விரைவில் இந்த வழக்கு சிபிஐ பரிந்துரைக்கு அனுப்பப்படும் என்கிறது கோட்டை வட்டாரம்.

எனவே இப்போதைக்கு... இது அரசியல் பழிவாங்கல் என்று இருவரும் ஒருமித்த குரலில் பேசுவதற்கு, இருவரும் இணைந்து இருந்தால் நல்லது என்றுதான் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இந்தத் தகவலும் முதல்வரின் கவனத்திற்கு போயிருக்கிறது.

சசிகலா, அதிமுகவை கைப்பற்றியே தீரவேண்டும் என்று முடிவு செய்து, விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அவரிடம் பணம் நிறைய இருக்கிறது... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதன் நடுவே ஓபிஎஸ் இனி எம்ஜிஆர் வாழ்க, புரட்சித்தலைவி வாழ்க என்று தான் கோஷம் போட வேண்டும், வேறு யாரையும் சொல்லக்கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.