கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை பற்றிய விவரங்கள் நம்மை நிலை குலைய வைத்து விட்டது .
தினம் செய்தித்தாள் படிக்கும் என் அம்மா இது பற்றிய செய்தியை தேடிப் படித்து விட்டு ," இன்னும் என்னென்ன கொடுமைகளைப் பார்க்க இருக்கிறேனோ ?" என்று புலம்புகிறார்கள் .அதே மனநிலையில் தான் நாம் அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம் .
என்ன கொடூரமான மரணம் ! இதயமே இல்லாமல் ஒரு பெண்ணைச் சிதைத்து தள்ளி இருக்கிறார்கள். ஒருவனை மட்டுமே குற்றவாளியாக கை காட்டினாலும், இது ஒரு கூட்டு வன்புணர்வு என்பதில் சந்தேகமில்லை. அந்த பெண் மருத்துவரின் உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. 90 டிகிரியில் கால் எலும்பு முறிக்கப்பட்டுள்ளது .கழுத்து நெறிக்கப்பட்டதால் மூசசுத் திணறி இறப்பு நேர்ந்துள்ளது. கொடூரமான தாக்குதலும் ,உடன் வன்புணர்வும் நேர்ந்துள்ளது . தவிர ,150 மி.கி அளவு விந்து அப்பெண்ணின் உடலில் இருந்துள்ளது .எனவே இது கூட்டு வல்லுறவாக இருந்திருக்க வேண்டும்
தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தானாகவே வழக்குப் பதிவு செய்ய ,மருத்துவர்களின் பாதுகாப்பை ஆராய தலைமை நீதிபதி அவர்கள் முன்னணி மருத்துவர்கள் அடங்கிய தேசிய செயற் குழுவை ஏற்படுத்தி இருக்கிறார் . இந்த வழக்கில் காணப்படும் விதி மீறல்களை விளாசி தள்ளி இருக்கிறார் . மருத்துவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் நாடு கலங்கி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பாக பணி ஆற்றவும் ,பாலியல் தொல்லைகளில் இருந்து விடுபடவும் விசாகா கமிட்டியின் பரிந்துரைகள் , கிரிமினல் சட்ட திருத்தம் 2013(Prevention, Prohibition and Redressal Act, 2013) போன்ற சட்டங்கள் ஆயிரம் இருந்தாலும் பணியிடங்களில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எல்லையே இல்லை .
ஒரு நாகரிகம் அடைந்த சமூகத்தில் , பெண் சமத்துவம் ,சமூக நீதி என்று நாள்தோறும் மேடை போட்டு பேசும் சமூகத்தில் இது போன்ற கொடுமைகள் தொடர்வதும், குற்றங்களைத் தடுப்பதை விட்டு ,குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிப்பதும் தொடர்கதையாகி விட்டது .
ஆணும் , பெண்ணும் இரவும் ,பகலுமாக இணைந்து பணி செய்யும் பல இடங்களில் , மருத்துவத்துறை முக்கியமானது. ஆனால் இங்குதான் பாதுகாப்பு பலவீனமாக இருக்கிறது .
கொல்கத்தாவில் மட்டும் அல்ல , இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் பணி புரியும் டாக்டர்கள் படும் துன்பங்கள் சொல்லில் எழுதி முடியாது . ஒரு சில மருத்துவர்களை , குறிப்பாக அரசு மருத்துவர்களை இந்த கட்டுரைக்காக நேர்க்காணல் செய்ய முயற்சி செய்த போது அவர்கள் எல்லாருமே எந்த விவரத்தையும் சொல்ல மறுத்து விட்டார்கள்.
பெயர் சொல்ல விரும்பாத மருத்துவர் கோபத்துடன் சொன்னவற்றின் சாரம்.
" இந்த இறப்பின் கொடுமையை விட , இது குறித்த மக்களின் மௌனம் கோபத்தைத் தருகிறது. சாதாரண விஷயங்களை ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள் இதை அமைதியாய் கடக்க பார்க்கிறது . சமூக வலைத்தளங்களில் புரட்சியாக பேசுபவர்கள் கூட வாய் மூடி வேடிக்கை பார்க்கிறார்கள். மருத்துவர்கள் என்றால் மனிதர்கள் என்ற உணர்வு இங்கு இல்லை . குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு மரியாதையும் இல்லை , பணி இடத்தில் பாதுகாப்பும் இல்லை .
ஆமாம் , இது போன்ற சூழ்நிலையில்தான் நாங்கள் வேலை செய்கிறோம். இரவுப்பணியின் போது குடித்து விட்டு போதையில் தடுமாறி வரும் நோயாளிகள் , குடித்து விட்டு அடிதடி , ரகளை , விபத்து என்று வருபவர்களை தினமும் சந்தித்து ,சிகிச்சை தருகிறோம் . இரவில் ஒரு யூனிட்டில் இருந்து மற்றொரு யூனிட்டுக்கு செல்ல தனியேதான் செல்ல வேண்டும். ICU ,Emergency என்று எங்கு போனாலும் தனியே தான் செல்ல வேண்டும் .
இரவுக் காவலாளி இல்லாத மருத்துவமனைகள் பல . ஒரு உதவியாளர் ,ஒரு பணியாளர் மட்டுமே இருக்கும் மருத்துவமனைகள் நிறைய உள்ளன .
இரவு நேரத்தில் குடித்துவிட்டு ஒரு கும்பலாக வந்து தொல்லை கொடுப்பவர்கள் உண்டு. கட்சிகாரர்கள் , அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் இவர்களின் பின்புலத்தில் இருந்துக் கொண்டு நம் புகார்களை ஒன்றுமில்லை என்று ஆக்கி விடுவார்கள் . . சக ஊழியர்கள் , சீனியர்கள் என்று திரும்பும் பக்கம் எல்லாம் மனஉளைச்சளைத் தருகிறது இந்த மருத்துவத்துறை கழிப்பறை ,ஓய்வறை எல்லாம் பெயரளவில் இருக்கும். பாதுகாப்பாக இருப்பதில்லை இதுதான் இன்று எங்கள் நிலைமை .
இப்போது மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த பின்புதான் இந்த பிரச்சனையின் மேல் கவனம் திரும்பி இருக்கிறது .இந்த பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் .குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . பொறுப்பில் இருப்பவர்கள் குற்றத்துக்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது " என்று கொதிப்புடன் பேசினார்
இறந்த பெண் மருத்துவரின் பெற்றோரும் அதைத்தான் கேட்கிறர்கள் ."நாங்கள் வசதியற்ற ஏழைகள்தான் . எங்கள் மகளை கஷ்டப்பட்டுதான் டாக்டருக்குப் படிக்க வைத்தோம். எங்களுக்கு பணம் வேண்டாம் . மகளின் கொடூர மரணத்துக்கு நீதி வேண்டும் :
எல்லோரும் கேட்பதும் அதுவே. நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் . தேசிய குழு அமைக்கப்பட்டதன் குறிக்கோள் நிறைவேற்றப்பட வேண்டும் .மருத்துவமனைகள் பெண்கள் பாதுகாப்பாக வேலை செய்யும் இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .
மருத்துவமனைகள் மட்டும் அல்ல, பெண்கள் பணி புரியும் எல்லா இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பை தர வேண்டும் . பெண்ணின் உயிரும் , உடலும் அலட்சியமாக கருதப் படும் போக்கு மாற வேண்டும் .
அரசும், நீதித்துறையும் அதற்கு துணை நிற்க வேண்டும்
இவையே இப்போதைய அவசரத் தேவை .
Leave a comment
Upload