பூவரசங்குப்பம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலாகும். தட்சிண அஹோபிலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அஹோபிலத்தில் நரசிம்மரைத் தரிசனம் செய்ய முடியாதவர்கள், பூவரசங்குப்பத்தில் உள்ள இந்த கோயிலுக்குச் சென்று புண்ணியம் பெறலாம். இத்திருக்கோவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக லட்சுமி நரசிம்ம கோயில்களில் லட்சுமி மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு. இங்குச் சப்த ரிஷிகளுக்கு மகாலட்சுமியுடன் நரசிம்மர் சாந்த சொரூபமாகக் காட்சி கொடுத்த தலமாகப் பூவரசங்குப்பம் திகழ்கிறது.
தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் ஸ்தலங்களின் நடுவில் இருப்பது பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில். இக்கோயிலே தமிழ்நாட்டில் முதன்மையானது. இந்த கோயிலைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோயில் நரசிம்மர், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன.
ஸ்தல புராணம்:
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே மிகவும் குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பு என்னவென்றால் பக்தனின் குறை தீர்க்கவும், ஹிரண்யகசிபுவை வதம் செய்யவும், பக்தன் பிரகலாதன் வேண்டியவுடன் நொடிப்பொழுதில் மனித உடலும் சிங்க தலையுடன் அவதரித்து ஹிரண்யகசிபுவை அழித்து பிரகலாதனைக் காத்தவர் நரசிம்மர். மகாவிஷ்ணுவிடம் ஹிரண்ய வதத்திற்குப்பின் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று சப்த ரிஷிகளான அத்ரி, பரத்வாஜர், ஜமதக்னி, வசிஷ்டர், கௌதமர், கௌசிகர், காச்யபர் ஆகியவர்கள் விரும்பி தவம் இருந்தனர். கோபக்கனலில் இருந்த நரசிம்மரைத் தரிசிக்க முடியாமல் சப்த ரிஷிகள் வருந்திய சமயத்தில், நரசிம்மரின் உக்கிரத்தினை குறைக்கும் பொருட்டு, சப்த ரிஷிகளும் மகாலட்சுமியை வேண்டினார்கள். நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க எண்ணிய மகாலட்சுமி, நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த ரிஷிகளையும் பார்த்த போது நரசிம்மர் கோபம் தணிந்து, இப்பூவுலகில் வேறு எங்கும் காணாதக் காட்சியாக லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபமாக பூவரசங்குப்பத்தில் காட்சியளித்தார். சப்த ரிஷிகளும் ஆனந்தம் அடைந்து அவரை மனமார தரிசித்தார்கள். அது முதல் நரசிம்மர் அதே கோலத்தில் இருந்தபடி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் என்று ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸ்தல வரலாறு:
தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்த காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த பல்லவ மன்னன் தன் நாட்டு மக்களைக் கொடுமை செய்து வந்தார். இதனை எதிர்த்து நரஹரி முனிவரும் குரல் கொடுத்ததால் அவரைக் கொல்ல ஆணையிட்டார் பல்லவ மன்னர். என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உன் உடலும் அழுகட்டும் என்று சாபமிட்டுக் காற்றோடு கரைந்தார் நரஹரி. ஒரு சில நாட்களிலேயே மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து, உடல் வேதனையால் அவதிப்பட நேர்ந்தது. பின், நாட்டை விட்டே வெளியேறிய மன்னன் ஒரு நாள் தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் படுத்திருந்தார். அவர் ஆணவம் அழிந்து ஆதிக்க வெறியில் தான் செய்த பாவங்களுக்காகக் கண்ணீர் விட்டுக் கலங்கிச் சோர்ந்து அப்படியே தூங்கி விட்டார். திடீரென்று விழித்தபோது, அவர் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது. கீழே விழுந்த அந்த இலையின் அதிர்வைக்கூட அவரால் தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தார். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு வேண்டினார். அப்போது ஒலித்த அசரீரி இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்குக் கோவில் கட்ட வேண்டும் எனக் கூறியது. மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்த போது நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார். அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார். அந்த முனிவரின் விருப்பத்தின்படி அரசனும் பூவரசங்குப்பத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோயில் எழுப்பினார். அங்கு முனிவர் நரஹரியும் பகவானின் ஒரு அம்சமாகவுள்ளார்.
இக்கோயிலில் கி.பி 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. மேலும், நரசிம்ம பல்லவரின் ஆட்சியின் போது (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) கட்டுமானம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தக் கோவிலுக்குக் கிருஷ்ண தேவராயரின் வருகையைக் குறிக்கும் கல்வெட்டுகளும் உள்ளன. நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் வாரத்தில் இக்கோயிலின் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்தல அமைப்பு:
கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கருவறைக்கு முன்னால் கொடிமரமும் அதன் முன் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சந்நிதி கருவறையை நோக்கிய வண்ணம் இருக்கிறது.
இந்த ஸ்தலத்தின் விஷேசம் என்னவென்றால் மற்ற இடங்களில் உக்கிர உருவத் தோற்றத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்குத் தம்பதியர் சமேதராக நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரையும், மற்றோர் கண் பக்தர்களையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த கோயிலில் லட்சுமியும் நரசிம்மரும் ஒரே உயரத்தில் காட்சியளிக்கின்றனர். பிரதான சந்நிதியில் நரசிம்மர் மற்றும் லட்சுமி இருவரின் உற்சவமூர்த்தியும் உள்ளது.
வடகிழக்கு மூலையில் லட்சுமி தேவிக்கு (அமிர்தவல்லி தாயார்) தனி சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகர் சந்நிதியும் இருக்கிறது. பிரகாரத்தின் வாயு மூலையில் அனுமன் சந்நிதியும், வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே தும்பிக்கை ஆண்டவர் (விநாயகர்) தனித்தனி சந்நிதிகளில் அருளுகின்றனர்.
இங்கு ஆதிகாலத்தில் நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்குக் கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து அந்த தூண் ஹோம மண்டபம் பகுதியில் வைத்துள்ளனர்.
இக்கோயிலின் ஸ்தலவிருட்சம் நெல்லி மரம்.
ஸ்தல தீர்த்தம் சக்கர தீர்த்தம்.
ஸ்தல சிறப்புகள்:
விழுப்புரத்தைச் சுற்றியுள்ள சதுர் (நான்கு) நரசிம்மர் கோயில்களில் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் ஒன்றாகும். மற்றவை அந்திலி, பரிக்கல் மற்றும் சிங்கிரி ஆகிய இடங்களில் உள்ளது. இந்த மூன்று நரசிம்மர் கோவில்களுக்குச் செல்வது மிகவும் மங்களகரமானதாகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது.
ஜோதிட சக்கரவர்த்தி திரு.ஏ.எம். இராஜகோபாலன் அவர்கள் சொல்லியபடி பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில், சிங்கிரி உக்ரநரசிம்மர்கோயில், மற்றும் பரிக்கல் ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்மத்தலங்களும் ஒரே நேர்கோட்டில் பூவரசங்குப்பம் நரசிம்மரை நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும்.
பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் லட்சுமி மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்குத் தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது.
ஹிரண்ய சம்ஹாரத்திற்குப் பிறகு இதுவே முதல் தோற்றம் என்பதால் தட்சிண அஹோபிலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயிலுக்குச் சென்று 48 நாள் பிரார்த்தனை செய்தால் கடன்களும், சத்துருக்களும் தீரும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்:
வைகுண்ட ஏகாதசி, சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, வைகாசி விசாகம் கருட சேவை, தமிழ் வருடப் பிறப்பு, நவராத்திரி, தை மாத தீர்த்தவாரி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இதைத்தவிர மாத சுவாதி நட்சத்திரம், புரட்டாசி சனிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெறுகின்றது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், கடன் தொல்லைகள் தீரும். மற்றும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பும், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும். இதைத்தவிர எதிரிகள் எல்லாம் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்..
பிரார்த்தனை நிறைவேறியதும் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். திருவிழா நாட்களிலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களிலும் கோயில் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
விழுப்புரம் பண்ருட்டி சாலை வழியே வருபவர்கள், கள்ளிப்பட்டி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த கோயிலை அடையலாம். இந்த கோயில் விழுப்புரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்து நேரடி பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதிகளும் எளிய முறையில் உள்ளது.
பூர்வ ஜென்ம பாவங்களைப் போக்கும் பூவரசங்குப்பம்
ஶ்ரீ லட்சுமி நரசிம்மரைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload