கடந்த 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சபீனா என்ற நர்சுக்கு வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின் .
நர்ஸ் சபீனா கடந்த மாதம் கேரளா வயநாடு சூரல் மலை முண்டக்கை கிராமத்தில் நடந்த மிக பெரிய நிலச்சரிவில் சிக்கி தவித்தவர்களுக்கு துணிந்து சிப் ரோப்பில் தொங்கியவண்ணம் காட்டாற்றை கடந்து சென்று முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்கியுள்ளார் .இவர் செய்த மிக பெரிய மனிதாபிமான செயலுக்கு தான் தமிழக அரசு இந்த உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது .
நாம் விகடகவிக்காக சபீனாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கூறி பேசினோம் .
" எனக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன அதே சமயம் நான் அங்கு சென்று அவர்களுக்கு சிகிச்சை செய்தது முழுக்க மனிதாபிமான செயல் . அந்த இடத்தை நினைத்தாலே இன்னும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது .
நான் ஒரு மனித நேய மையத்தில் பணிபுரியும் ஒரு நர்ஸ் .Shihab thangal center for humanity டிரஸ்ட் என்பது எங்கள் மையம் .
கூடலூரில் வீடுகளில் இருக்கும் கேன்சர் , ஸ்ட்ரோக் நோயாளிகளுக்கு பேலியட்டிக் சிகிச்சை கொடுத்து வருகிறோம் .அதில் பெரும்பாலானோர் நாட்களை எண்ணி கொண்டிருப்பவர்கள் நான் தினமும் பதினெட்டு பேரை விசிட் செய்து அவர்களுக்கு மெடிக்கல் உதவி செய்து வருகிறேன் என்று கூற ...
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு எப்பொழுது சென்றிர்கள் ? என்று கேட்க,
" அந்த கொடூர நிலச்சரிவு 29 ஆம் தேதி இரவு மற்றும் 30ஆம் தேதி அதிகாலை நடக்க எங்க டிரஸ்ட் சார் நௌபில் பதாரிக்கு தகவல் வர இரண்டு சிஸ்டர்களுடன் அவர் ஸ்பாட்டுக்கு சென்று விட்டு அங்கு நிலைமை மிக மோசமாக இருக்க மெட்டீரியல் பத்தவில்லை என்று எனக்கு போன் பண்ண நானே ஆம்புலன்சை எடுத்து கொண்டு எழுபது கிலோமீட்டர் ஓட்டி பயணித்து சென்றேன் .
வண்டியை விட்டு இறங்க சேரும் சகதியுமாகவும் பாறைகள் மர கட்டைகள் குவிந்து இருந்தன .
எங்கு பார்த்தாலும் உடல்கள் மிக மோசமான நிலையில் கிடந்தது .என் கால் அருகில் உடல்கள் நிறைய... தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஆயிரம் கணக்கில் உதவி கரம் நீட்டிக்கொண்டிருந்தனர்
அப்பொழுது ரெஸ்கியூ டீம் எங்களிடம் வந்து ஆண் நர்ஸ் இருக்கிறார்களா இறவஞ்சிப்புழா ஆற்றின் மறுபுறம் சிப் ரோப்பில் தொங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று கூற ஆண் நர்ஸ் இல்லை பெண் நர்ஸ் தான் இருக்கிறோம் என்று கூற சரி வரமுடியுமா என்று கேட்க எங்கள் கூட இருந்தவர்கள் சிப் ரோப்பில் தொங்கி செல்ல பயந்து முடியாது என்று கூறிவிட்டனர் .
உடனே நான் ரெடி வருகிறேன் என்று கூற அனைவருக்கும் அதிர்ச்சி தான் .
எனக்கு அந்த ரோப்பில் பெல்ட் அணிவித்து இறுக்கி கட்டிவிட எனக்கு முடியவில்லை நானே அதை கட்டினேன் .நான் தொங்கி கொண்டு மெடிக்கல் கிட்டை பிடித்து கொண்டு கடக்க ரெடியாக நௌபில் சாரிடம் ஒரு வீடியோ எடுக்க சொன்னேன் அவரும் தொங்கிக்கொண்டு கடந்து செல்வதை வீடியோ எடுத்தார் .
சூரல் மலையில் இருந்து முண்ட க்கை சென்று இறங்க .
மிக பரிதாபமாக இருந்தது உடல்கள் சிதறி கிடக்க தப்பித்தவர்கள் பிரம்மை பிடித்தவர்கள் போல இருந்தனர் . அடிபட்டவர்களுக்கு மருந்து போட்டு கட்டு கட்டி சிலருக்கு பிளாஸ்டர் போட்டு பின் பிபி மற்றும் சுகர் டெஸ்ட் எடுத்து மாத்திரை கொடுத்தேன் .
ஒருவருக்கு ட்ரீட்மெண்ட் செய்ய பதினைந்து நிமிடமானது .
பலருக்கு சிகிச்சை அளித்து அவர்களை கேம்புக்கு ஷிபிட் செய்தனர் .
நான் உயிர் தப்பித்தவர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து கொண்டிருக்க அதற்குள் ஒரு மர பாலம் அமைத்தனர் அதன் மேல் தப்பி பிழைத்தவர்களை கேம்புக்கு கூட்டி சென்றனர் பேரிடர் மேலாண்மையினர் .
இரவு ஆனவுடன் இருட்டிவிட்டது லைட் போட்டிருந்தார்கள் .அதனால் மரபலத்தில் நடந்து மறுபுறம் வந்து விட்டேன் .
இப்படி ஐந்து நாள் சென்று வந்தேன் .முதல் நாள் கூடலூர் வர இரவு 12.30 ஆனது .
என் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்று வந்தேன் .
அடுத்த நாள் சென்ற பொழுதே ஸ்மெல் வந்து விட்டது .காரணம் பல உடல்கள் சிதைந்து மூளை வெளியே வந்து கிடந்ததை பார்க்க தலை சுற்றிவிட்டது .
ஒரு அம்மா என்னிடம் என் ஒரு வயதுகுழந்தையை பார்த்தீர்களா என்று கேட்டது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது .
ஒரு அம்மாவும் அப்பாவும் கண் தெரியவில்லை என்று கூறி அழுதனர் அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினேன் ." எல்லாமே போச்சு என்று சிரித்தனர் அது உடைந்து போய் எல்லாவற்றையும் இழந்த சோக சிரிப்பு என் கண்முன்னே .
ஒரு நாள் காத்து அடிக்க துவங்க மழை பெய்ய மீண்டும் உருள் பொட்டல் வருகிறது" என்று கூற எல்லோரும் திடீர் என்று ஓட ஏகப்பட்ட நெரிசலில் சிக்கி தப்பித்தேன் .
ஏகப்பட்ட சோகத்தினுள் ஐந்து நாள் பயணித்தேன் .
ஏற்கனவே பல கேன்சர் நோயளிகளுடன் சென்று வருவதால் எனக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை .
என்னை ஒரு டிவி சேனல் நிருபர் பேட்டி எடுத்து செல்ல அதை பார்த்த சமூக நல துறை அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள் .
பின் மாவட்ட ஆட்சியர் நேரில் என்னை அழைத்து விருது வழங்குவதை பற்றி கூறினார் .
நான் சென்னை சென்று முதல்வர் கரத்தால் விருதை பெற்று வந்தேன் என்றார் கூலாக கூறினார் .
முதல்வர் என்ன கூறினார் என்று கேட்க
அவர் தான் எதுவமே பேசுவது இல்லையே .
முந்தின நாள் ரிகர்சல் கொடுத்து ஒரு வட்டத்தினுள் நின்று விருதை வாங்க கூறினார்கள் அப்படியே முதல்வரிடமிருந்து விருதை பெற்றேன் .
நான் ஒரு மனு எழுதி கொண்டுபோயிருந்தேன் அதை கூட கொடுக்க முடியவில்லை .
ஒரு பாராட்டு சான்றிதழ் தங்க முலாம் பூசின வெள்ளி ஆபரண மெடல் மற்றும் ஐந்து லட்சத்திக்கான காசோலை கொடுத்தார் .
இந்த விருது ஒரு ஆச்சிரியமான ஒன்று அதே வேளை ஒரு பெரிய சோகத்தின் மூலம் கிடைத்துள்ளது .
நிறைய பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்க சிலர் கூறினார்கள் 'ஏற்கனவே நான் செய்து கொண்டிருக்கும் பணிக்கு கிடைத்த விருது ' என்று கூறுகிறார்கள் .
சபீனா பிளஸ் டூ முடித்து நர்சிங் டிப்ளமோ முடித்துள்ளார் .
மகள் ஷிபானா கோவையில் பி எஸ் சி நர்சிங் படித்து கொண்டிருக்கிறார் .
என் பணி கேன்சர் நோய்யாளிகளுடன் தொடர்கிறது .
தூங்கி எழுந்தவுடன் சூரல் மலை முண்டக்கை இறவஞ்சிப்புழா ஆற்றின் இரைச்சல் பாறைகள் சேற்றினுள் கிடக்கும் உடல்கள் மற்றும் என் குழந்தையை பார்த்தீர்களா என்ற குரல் தான் கேட்டுக்கொண்டிருக்கிறது ...என்று அதிர்ச்சியில் கூறினார் .
நான் அந்த பயங்கர இடத்திற்கு சென்று சிகிச்சை அளித்தது ஒரு நர்ஸ் என்ற முறையில் அல்ல மனிதாபிமானத்தின் பேரில் தான் என்று கூறினார்
விருது பெற்ற சபீனா.
Leave a comment
Upload