தொடர்கள்
follow-up
பத்துக் கட்டளைகள் - சுபா வெங்கட்

20240724083314700.jpeg

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. இது இந்த இந்திய சமூகம் எந்த அளவுக்கு சீரழிவை நோக்கி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இந்த சீரழிவிலிருந்து நம்மையும் நம் குடும்பங்களையும் எப்படி பாதுகாத்துக்கொள்வது?! மீண்டும் மீண்டும் இது போன்ற தருணங்களில் நம் முன்பாக வைக்கப்படும் பத்து பயனுள்ள கருத்துக்களை விகடகவி முன் வைக்க விரும்புகிறது. இதை மேம்போக்காக படித்து விட்டு நகராமல் பத்து கட்டளைகளாகவே நம் மனதில் நாம் ஆழமாக பதித்துக் கொண்டால் சமூகத்தின் சீரழிவு குறைந்தபட்சம் நம் வீட்டுக் கதவை தட்டாமலாவது பார்த்துக் கொள்ள முடியும்.

அந்த 10 இதோ:

1. சி.சி.டி.விக்களை சாலைகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் பொருத்துவதோடு நம் வேலைகள்

முடிந்துவிடவில்லை. அதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது அங்கே குடியிருக்கும் நமது தலையாயக் கடமை. அசோசியேஷன் சண்டைகள் அல்லது தெருவில் வண்டி பார்க்கிங் சண்டைகளை விட நமக்கு இது மிக முக்கியம்.

2. தாய், தந்தை என இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளிலும் சரி...போகாத வீடுகளிலும் சரி! தினசரி அரை மணி நேரமாவது குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுவோம். படிப்பு அல்லது வேலை சம்பந்தமான சம்பிரதாய பேச்சுக்களாக அவை நிச்சயம் இருக்கக்கூடாது. டி.வி. பார்த்தபடியே பேசுவதாகவும் இருக்கக்கூடாது. நிஜமான.. ஜாலியான.. பொதுவான.. ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளக்கூடிய பயனுள்ள பேச்சாக அது இருக்கட்டும்.

3. வீட்டுக்கு வரும் உதவியாளரோ அல்லது உறவினரோ... யாராக இருந்தாலும் அவர்களை குழந்தைகளுடன் தனியாக விடாமல் இருப்போம். அப்படி விட்டே ஆக வேண்டிய அவசியம் இருப்பின் அவ்வப்போது ‘சர்ப்ரைஸ் செக்கிங்’ செய்வோம்.

4. குழந்தைகளுக்கு ’குட் டச் பேட் டச்” சொல்லித்தர நமக்கு கூச்சமாக இருக்கிறதா? இதற்கென்று படித்த சைக்யாட்ரிஸ்ட்டுகள் மற்றும் மன நல வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நம் குழந்தைகளை தாராளமாக அழைத்துச் செல்வோம். இது ஆபத்து நிறைந்த உலகம்தான் என புரிய வைக்கும் அதே சமயத்தில் அதிலிருந்து நம் குழந்தை எப்படி தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதையும் அவசியம் சொல்லிக் கொடுப்போம்.

5. இதுபோன்ற கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று மட்டுமே இந்த வன்கொடுமையினை வேதனையோடு பார்க்கும் அடிப்படை மனசாட்சி நம்மிடம் இருக்கட்டும். அநாவசியமாக சம்பந்தப்பட்ட பெற்றோர் மீதோ அல்லது ‘குடியிருப்புவாசிகள் ஒருவருக்குமா இது தெரியவில்லை?’ என மற்றவர் மீதோ விமர்சனங்கள் வைக்காமல் இருப்போம். வம்பு பேசும் தொனி இதில் நிச்சயம் தவறு.

6. ‘யாருக்கோ... எங்கோ நடக்கிறது.. நம் வீட்டில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. நம் குழந்தைகளும் பெண்களும் பத்திரமாகவே இருப்பார்கள்!” என்பது நம்முடைய பாசிட்டிவ்வான எண்ணமாக இருக்கலாம். ஆனால் அது உண்மைதானா என அவ்வப்போது உறுதி செய்து கொள்வது அவசியம். இதற்காக உடனே ‘கண்மூடித்தனமான கண்காணிப்பு தான் ஒரே தீர்வு’ என்கிற முடிவுக்கு வந்து பிள்ளைகளுக்கான அடிப்படை சுதந்திரங்களில் கை வைத்து விடவேண்டாம். அவர்களுக்கு நாம் சுதந்திரமும் தர வேண்டும். கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்களில் கட்டுப்படுத்தவும் வேண்டும். அதிக செல்லமும் ஆபத்து... அநாவசியத் தடைகளும் தவறு என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

7. பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் சினிமாவிலோ, சீரியலிலோ வரும்போது 'இது தேவையற்ற காட்சி...காட்டப்படுவது மிகவும் தவறான செயல்..' என அழுத்தந் திருத்தமாக நம் குழந்தைகள் மனதில் பதிய வைப்போம். அவற்றை சர்வ சாதாரணமாக தாண்டிப்போகும் மனநிலை தயவுசெய்து நமக்கு வேண்டாம். முக்கியமாக நம் வீட்டு ஆண் குழந்தைகளிடம் பெண்களை இது போன்ற வல்லுறவுகள் எந்த அளவிற்கு துயரப்படுத்தும் என புரிய வைப்போம். ஆண் குழந்தைகளிடம் முரட்டுத்தனம் கண்டால் 'நீ ஆம்பளடா' என மகிழ்ந்து அவனை ஊக்குவிப்பதோ அல்லது பெண் குழந்தைகளை 'நீ பலவீனமானவள்' என்று சொல்லி அடக்கி வளர்ப்பதோ மிக மிக மோசமான பேரண்டிங் என உணர்வோம்.

8. குழந்தைகளின் உடலையும் மனதையும் உறுதி செய்வதில் உடற்பயிற்சியும் விளையாட்டும் மிக முக்கிய காரணிகள்.. நமக்கும் அதில் ஈடுபாடு இருக்கட்டும். அடிப்படையில் நடைப் பயிற்சியாவது நமக்கு இருந்தால்தான் நம் குழந்தைகளும் அவற்றின் அவசியத்தை உணரும். அதே போல அவர்களுக்கு நல்ல இலக்கியங்களையும் புத்தகங்களையும் அறிமுகப் படுத்த வேண்டியதும் நம் கடமையே. அதை விடுத்து வேலைக்குப்போவது தவிர மற்ற நேரங்களில் டி.வி.யிலோ, ஃபேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ, பார்ட்டியிலோ நாம் மூழ்கினால் நம் குழந்தைகளுக்கு நாம் ஹீரோ இல்லை.. முழு ஜீரோ!

9. நாம், நம் குழந்தைகள் மட்டும் கொண்டதல்ல இந்த சமூகம். இதிலே நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. ஆனால் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதால் நாம் முதலில் நம் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த உதாரண மனிதராக இருப்பது அவசியம். ஆகவே நாம் முதலில் நல்லதொரு ஒழுக்கமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோமா என உறுதி செய்து கொள்வோம். நம்மிடம் ஏதேனும் ஒழுக்க ரீதியான தவறு இருந்தால் அதை முதலில் ஒப்புக்கொள்வோம். அதிலிருந்து உடனே மீள்வோம்.

10. 'பாலியல் கொடுமைகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்' என்பது போன்ற சமூகநீதிக்கான விஷயங்களில் அதிக அக்கறை கொள்வோம். தேவைப்பட்டால் ஜல்லிக்கட்டுக்கு நடந்த மக்கள் புரட்சி மாதிரி சமூக மக்கள் மொத்த பேரும் கூட கொதித்தெழுந்து இதற்காக போராட முன் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

இதெல்லாம் நடந்தால்தான் இனிவரும் சீரழிவிலிருந்தாவது நாம் நம்மை முதலில் தற்காத்து...இந்த சமூகத்தையும் ஓரளவு காக்க முடியும்!