பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இது நடந்தது 2017. அப்போதே மலையாள சினிமாவில் பாலியல் அச்சுறுத்தல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. பட வாய்ப்பு காரணமாக பல நடிகைகள் மௌனம் சாதிக்கிறார்கள் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் மலையாள சினிமாவில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் பாலியல் சமத்துவமின்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் 2019-ல் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியும் இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அதன் பிறகு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் சில தினங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 233 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த அறிக்கையின் முதல் வரியே நீங்கள் பார்ப்பதை அப்படியே நம்பாதீர்கள் உப்பு கூட சர்க்கரை போல் தெரியும் என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். மலையாளத் திரை உலகம் மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி ஹேமா அறிக்கையில் முக்கியமாக 17 பிரச்சனைகளை நடிகைகள் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
1. நல்ல வேடம் வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதிக்க வேண்டும்.
2. பயணங்கள் மற்றும் தங்குமிடங்களில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை நடிகைகள் எதிர்கொள்கிறார்கள்.
3. சம்மதிக்க மறுத்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அவர்களை அவமானப்படுத்துவது மனரீதியாக துன்புறுத்தப்படுவது போன்றவை நடக்கும்.
4. கழிவறை உடைமாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகளை பெண்களுக்கு அளிக்காமல் அவர்களை அடிமை போல் நடத்துகிறார்கள்.
5. தங்குமிடங்களில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
6. சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் மறைமுகமாக மலையாளத் திரை உலகில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
7. தங்களுக்கு உடன்படாத நடிகைகளை மிரட்டி அவர்களை பணிய வைக்கிறார்கள். இது பற்றி வெளியே பேச விடாமல் தடுத்து விடுகிறார்கள்.
8. மலையாள சினிமா இன்று வரை ஆணாதிக்க துறையாக தான் இருக்கிறது. அதனால் பெண்கள் பெரிய அளவு பலவீனப்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கான ஆதரவு குரல் இல்லை.
9. போதைப்பொருள் மது அருந்துவது படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் சகஜம். ஒழுக்கக்கேடான திரை உலகமாகத்தான் மலையாள சினிமாத்துறை இருக்கிறது.
10. படப்பிடிப்பின் போது பொது இடத்தில் நடிகைகளை அநாகரிகமாக பேசுவது தொலைபேசியில் கூட வரம்பு மீறி பேசுவது மலையாளத் திரை உலகில் சகஜம்.
11. கால்ஷீட் மற்றும் படப்பிடிப்பில் பெண் நடிகைகளுக்கு முறையான ஒப்பந்தம் எல்லாம் கிடையாது.
12. நடிகர்களுக்கு அதிக சம்பளம் மிகுந்த மரியாதை, இதெல்லாம் நடிகைகளுக்கு கிடையாது. அதுவும் சம்பள விஷயத்தில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம்.
13. நிறைய விருதுகள் வாங்கும் படங்களை மலையாள சினிமா எடுத்தாலும் பெண் தொழில்நுட்ப கலைஞர்களை அவர்கள் ஊக்குவிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களை வெளிப்படையாக எதிர்க்கிறார்கள்.
14. அதையும் மீறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது சைபர் தாக்குதல் செய்வது தொடரும்.
15. இதே போல் நடிகைகளுக்கு முதலில் ஒப்புக்கொண்ட சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றும் பழக்கம் உண்டு.
16. பெண்களுக்கும் தங்களது உரிமை குறித்த சரியான புரிதல் இல்லை. புரிந்து கொண்டவர்கள் பட வாய்ப்பு போய்விடுமோ என்று மௌனம் சாதிக்கிறார்கள்.
17. பெண்களின் குறைகளை தீர்க்க சட்டரீதியான எந்த அமைப்பும் கேரளாவில் கிடையாது.
இந்த அறிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கேரளா டிஜிபி லோக்நாத் போக்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது தான் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. கிரிமினல்களை பாதுகாக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்தது என்ற விமர்சனமும் தற்போது எழுந்திருக்கிறது. அதே சமயம் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மலையாள சினிமா உலகில் கடும் அதிர்வை ஏற்படுத்தினாலும் இது பற்றி எந்த ஆண் மலையாள நடிகர்களும் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக இதுவரை இருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில் பாலியல் வன்கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தாலும் உடனடியாக அந்த நடிகைக்கு வேறு விதமான தொல்லைகள் கொடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
போலீசில் புகார் அளித்தால் உயிருக்கு உத்திரவாதம் இருக்காது. குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இருக்காது. புகார் கொடுத்த நடிகையின் படத்தை சமூக வலைதளத்தில் பாலியல் ரீதியாக சித்தரித்து வெளியிடுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நடிகர்கள் சிறந்த நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் வெற்றி பெற்றவர்கள். செல்வாக்குள்ள நபர்கள் என்பதால் பாதிக்கப்பட்டவர் மௌனம் சாதிக்கிறார்கள். இல்லையென்றால் அவர்கள் மலையாளத் திரை உலகை விட்டு துரத்தப்படுவார்கள் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.
Leave a comment
Upload