மராட்டிய மாநிலம், தானே மாவட்டம், பத்தலாபூரில் எல்கேஜி படிக்கும் நான்கு வயதுடைய சிறுமியர் இருவரை துப்புரவு தொழிலாளி பாலியல் கொடுமை செய்த சம்பவம் மராட்டிய மாநிலத்தையே உலுக்கி இருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகம் வழக்கப்படி இந்த சம்பவத்தை மூடி மறைக்க பார்த்திருக்கிறது. காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமி முதலில் இந்த விஷயத்தை தாத்தாவிடம், பள்ளியில் ஒருவர் என்னிடம் தவறான முறையில் தொடுகிறார் என்று சொல்லிக் இருக்கிறாள். இந்த சம்பவம் 16-ஆம் தேதி நடந்திருக்கிறது.
தாத்தா அந்த சிறுமியின் பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல, பாதிக்கப்பட்ட இன்னொரு சிறுமி நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன், அங்கு என்னிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று அழ அதன் பிறகு பெற்றோர்கள் பொறுமையாக இரண்டு குழந்தைகளிடம் விசாரணை செய்த போது தான் 12-ஆம் தேதி துப்புரவு தொழிலாளி தங்களை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டார் என்று சொல்லி அழுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு குழந்தைகளை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று விஷயத்தை சொல்லி மருத்துவர்கள் பரிசோதித்த போது ஒரு குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் இருந்தது. இன்னொரு குழந்தையின் பிறப்பு உறுப்பில் யாரோ அத்துமீறல் செய்ததற்கான அடையாளம் தெரிந்தது.
அன்று மதியமே பெற்றோர் சென்று பள்ளியில் போய் கேட்டபோது முதலில் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று மூடி மறைக்க பார்த்தார்கள். ஆனால், பெற்றோர்கள் பிடிவாதமாக இருந்ததால் போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. பத்தலாபூர் போலீஸ் உடனே எல்லாம் அலறி அடித்துக் கொண்டு வரவில்லை.
மூன்று மணி நேரம் கழித்து வந்தார்கள். போக்ஸோ சட்டத்தில் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் முறையிட்டபோது போலீசார் அப்படியெல்லாம் உடனே கைது செய்ய முடியாது, ஆதாரம் வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் என்றார்கள். இருந்தாலும் அந்த துப்புரவு தொழிலாளி அக்ஷய் ஷிண்டேவை விசாரணைக்காக அழைத்து சென்றார்கள். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பற்றி கேட்டபோது வழக்கப்படி சில நாட்களாக வேலை செய்யவில்லை என்று பள்ளி நிர்வாகம் மழுப்பியது. இதனால் நம்பிக்கை இழந்த பெற்றோர்கள் தானே மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் புகார் கொடுத்தனர். அவர்கள் தலையிட்டால் 17-ஆம் தேதி தான் வழக்குப்பதிவு செய்து அக்க்ஷையை கைது செய்தார்கள்
.இன்னொரு குழந்தையின் பெற்றோருக்கு இந்த விஷயம் சற்று காலதாமதமாக தெரிய அவர்கள் கூட்டமாக வந்து பள்ளியை முற்றுகையிட்டார்கள். சிலர் பள்ளியில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். அதன் பிறகு இந்த விஷயம் தீயாய் பரவி பத்தலாபூர் முழுவதும் போராட்டம் தீவிரமானது. தேசிய நெடுஞ்சாலை முற்றுகை இடப்பட்டது. ரயில் நிலையத்தையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
விரைவு ரயில்கள் மும்பைக்கு வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் பத்தலாப்பூர் ரயில் நிலையம் வந்து போராட்டக்காரர்களுடன் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். வழக்கை விரைந்து முடிக்க ஐஜி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்தார். ஆனாலும் மக்கள் சமாதானம் அடையாமல் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஊர் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போனது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் கிளம்பிய பிறகு போலீஸ்காரர்கள் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தாலும், இப்போதும் அங்கு பதட்டமான சூழ்நிலையை நிலவுகிறது.
பத்தலாப்பூர் சம்பவம் பெரிதானதும் மராட்டிய மாநிலத்தில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்து வருவது தற்சமயம் வெளிவந்திருக்கிறது. அகோலா மாவட்டத்தில் காசி கேதா என்ற இடத்தில் ஜில்லா பரிஷத் பள்ளியில் பிரமோத்சர்தார் என்ற ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தற்சமயம் வெளிவந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி துணிச்சலுடன் சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கான அவசர உதவி மையத்துக்கு தொலைபேசி மூலம் இந்த தகவலை சொல்லி இருக்கிறார். அதன் பிறகு நடந்த விசாரணையில் ஆசிரியர் பிரமோத் சர்தார் தனது செல்பேசியில் இருக்கும் ஆபாச படங்களை காட்டி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.
இந்தக் கொடுமை தொடர்ச்சியாக கடந்த நான்கு மாதமாக நடந்திருக்கிறது. தொடக்கூடாது இடங்களில் தொட்டு பேசி அடிக்கடி அந்த ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருந்திருக்கிறார். தற்சமயம் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதேபோல் இரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி தவறாக நடந்து கொண்டு இருந்த ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்ட வண்ணம் இருக்கின்றன.
பெண்களை சமமான உயிரினமாக கருதாமல் சதைகள் என கருதும் காமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
அலுவலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு செல்லும் எல்கேஜி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என்ற சூழலில் தான் இன்றைய பெண் சமூகம் இருக்கிறது என்பது ஒரு சோகமான உண்மை.
Leave a comment
Upload