திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலத்தில் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கே அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 8 அன்று இரவு பணியில் இருந்த முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விஷயத்தை மாநில அரசு தற்கொலை என்று முடி மறைக்கப் பார்த்தது. இறந்து போன பெண்ணின் உடலை பார்க்க கூட பெற்றோர்களை அனுமதிக்காமல் இழுத்தடித்ததுடன் அவர்களை இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று மாநகர காவல் துறை ஆணையரே பேரம் பேசி இருக்கிறார். ஆனால், பெற்றோர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் தேசிய அளவில் மருத்துவர்கள் பெரிய அளவு போராட்டம் பணி புறக்கணிப்பு கருப்பு தினம் என்று தங்கள் எதிர்ப்பை இன்று வரை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண் முதல்வர் மம்தா பானர்ஜி கடும் நடவடிக்கை எடுப்பதற்கு பதில் நானும் போராடுகிறேன் என்று ஊர்வலம் நடத்திய கேலிக்கூத்தும் கொல்கத்தாவில் நடந்தது. நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வரே ஊர்வலம் போனது கடும் விமர்சனம் ஆனது.
இதன் நடுவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வாரம் செவ்வாய் அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு மாநில அரசு மீது தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது. மாணவியின் புகைப்படம் பெயர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளத்தில் எப்படி வெளியானது. இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அவர்கள் மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என்ற கேள்வியை முன் வைத்தார்கள். சம்பவம் நடந்த போது பெற்றோர்கள் மருத்துவமனையில் இல்லை. வழக்குப்பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு மருத்துவமனை மற்றும் மாநில அரசிடம் உள்ளது. இப்படி இருக்கையில் சம்பவம் நடந்த உடனே நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனமாக இருந்தது. அவர்கள் செயல்பாட்டின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. இந்த விவகாரம் கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மருத்துவர்கள் பிரச்சனையாகும். மருத்துவ மாணவி கொலை வழக்கின் புலன் அறிக்கையை ஆகஸ்ட் 22-ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதேபோல் மருத்துவமனை தாக்கப்பட்ட போது மருத்துவமனைக்கு போதிய பாதுகாப்பு காவல்துறை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், தாக்குதல் நடத்தியவர்களை கண்டதும் போலீஸ் அங்கிருந்து ஓடிவிட்டார்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஆர் ஜி கே அரசு மருத்துவமனைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க இந்த அமர்வு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின் போது மேற்குவங்க அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை கேட்டார்கள். இந்த விவகாரம் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை பற்றிய கொடூர தன்மை மட்டும் இல்லாமல் மருத்துவர்களின் பாதுகாப்பைகேள்விக்குறியாகி விட்டது. பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது என்பது அவர்களுக்கான சம உரிமை மறுக்கப்படுவதாக அர்த்தம் ஆகும். அவர்களுக்கென தனி கழிப்பிடம் கூட இல்லாத சூழல் நிலவுவதை பார்க்க முடிகின்றது. மேலும் உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி உள்ளது. இது குறித்து கொல்கத்தா காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதான் அந்த இறந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்படும் மரியாதையா? மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தேசியப் பணி குழுவை நாங்கள் அமைக்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் மீது மேற்குவங்க மாநில அரசு தங்கள் அதிகாரத்தை காட்டக்கூடாது. சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மாநில அரசு. ஆனால், மாநில அரசு அதை செய்ய தவறிவிட்டது. இது ஏன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த சில காலங்களாக மருத்துவர்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மீதான வன்முறை தொடர்கதையாக இருக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது போன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்காக நாடு காத்திருக்க முடியாது. மேலும் மருத்துவர்களை பாதுகாக்க மாநில அளவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கிடையாது. மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் விதமாக ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சுகாதார சூழ்நிலை கூட கிடையாது. பல மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் கூட மருத்துவர்களுக்கு செய்து தருவதில்லை. சிசிடிவி கேமராக்கள் கிடையாது. பாதுகாப்புக்கு இருக்கும் ஊழியர்களிடம் போதிய துப்பாக்கிகள் தோட்டாக்கள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவற்றை அவர்கள் பயன்படுத்துவதற்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் தேவைப்படுகிறது.
பெண் மருத்துவரின் மரணத்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனை தற்கொலை என்று மூடி மறைக்க முயற்சி செய்துள்ளது. இது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியதாகும் என்று நீதிபதிகள் கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
இது தவிர உச்சநீதிமன்றம் பயிற்சி மருத்துவர் இறந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள ஒன்பது மருத்துவர்கள் மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஆகியோர் கொண்ட தேசிய உயர்நிலைக் குழு அமைப்பை ஒன்றை உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. இதில் மருத்துவர்கள் இல்லாமல் ஒன்றிய அரசின் அமைச்சரவை செயலாளர் உள்துறை செயலாளர், சுகாதாரச் செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், தேசிய தேர்வாளர் குழு தலைவர் ஆகியோர்களையும் இந்த குழுவில் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
இந்தப் பணி குழுவானது பாதுகாப்பு மருத்துவத்துறை சேர்ந்தவர்களின் நல்வாழ்வு பாலின அடிப்படையிலான வன்முறையை தடுப்பது மருத்துவர்களின் கண்ணியமான பணியை உறுதி செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். கூடவே மூன்று மாதத்திற்குள் இந்தக் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
❖ பணிக்குழுவின் முக்கிய பணிகள் என்பதை கூட நீதிமன்றம் வரையறுத்து இருக்கிறது.
❖ அவசர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் பாதுகாப்பு.
❖ ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தடுப்பதற்கு தேவையான அமைப்புகள் உருவாக்க வேண்டும்
❖ தேவையற்ற நபர்கள் மருத்துவமனைக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
❖ மருத்துவமனையில் அதிக அளவு கூட்டம் கூடும்போது அதை நிர்வகிப்பதற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும்.
❖ பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரம் பதிவு செய்வதற்கான அமைப்புகளை நிர்வாகிக்க வேண்டும்.
❖ மருத்துவர்கள் ஓய்வறைகள் மற்றும் செவிலியர்கள் ஓய்வெடுப்பதற்கான அறைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும்.
❖ மருத்துவ தொழில் ஈடுபடுபவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து ஏற்பாடு செய்து தர வேண்டும்.
❖ மருத்துவமனை உட்பட அது சார்ந்த இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.
❖ நெருக்கடியான சூழலை கையாளுவதற்கான பயிற்சிகளை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
❖ நிறுவன ரீதியான பாதுகாப்பு நடவடிக்கான தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும்.
❖ அடிதடி போன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் யோசிக்காமல் காவல்துறை உதவியை உடனே கேட்க வேண்டும்.
❖ மருத்துவத் தொழில் ஈடுபடுபவர்கள் அவசர தேவைக்காக இலவச தொலை தொடர்பு எண்களை உருவாக்க வேண்டும்.
இப்படி உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டியதை பொறுப்புடன் அறிவுறுத்தி இருக்கிறது. அதே சமயம் மத்திய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் இது போன்ற பல உத்தரவுகளை செயல்படுத்தி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
Leave a comment
Upload