தொடர்கள்
அழகு
ஒரு தற்கொலை - மோகன் ஜி

20250517172443475.jpg

சிவப்பிரகாச சுவாமிகளின் ஒப்பற்ற ஆக்கம் ‘பிரபு லிங்கலீலை’.

இன்று இந்நூலிலிருந்து அழகிய கவிநயம் மிக்க வரிகளைக் காண்போம்.

எனது சிறு புனைவையோட்டி அந்த அருங்கவிதையின் நயம் கோர்க்கிறேன்….

தந்தத்தில் கடைந்த சிலை போலும் ஒரு பேரழகி நிற்கின்றாள். முத்தழகு அவள் பெயர். அவளுடைய காதலன் குமரனுக்காகக் காத்திருக்கிறாள்.

காக்க வைத்துவிட்டோமே என்ற பதைப்புடன் காதலன் மூச்சிறைக்க ஓடி வருகிறான்.

அவளோ அவன் முகம் பாராமல் சினந்து ஊடி நிற்கிறாள்.

ஏதேதோ சமாதானங்கள்… கொஞ்சல்கள்… கெஞ்சல்கள்… காதலனை சற்று நேரம் தவிக்கவிட்டு இயல்புக்குத் திரும்புவது அவள் வாடிக்கை.

முத்தழகின் தோழியைப் போல் கீச்சுக் குரலில் பேசிக்காட்டி அங்கதம் செய்கிறான் குமரன். அந்தக் குறும்பை ரசித்து, தன் பொய்க்கோபம் மறந்து கலகலவென நகைக்கிறாள். அந்தச் சிரிப்பினூடே அவளின் அழகிய பல்வரிசை பளீரிடுகிறது.

முத்தழுகு தன் எடுப்பான நாசியில் அணிந்திருந்த ஒற்றை முத்து பூட்டிய புல்லாக்கு அழகுற அசைகிறது.

குமரன் சொன்னான், “அழகி! உன் பல்லழகுக்கு முன் இந்த புல்லாக்கின் முத்து ஒளிமங்கிக் கிடக்கிறதடி!”

இனி களத்தை சிவப்பிரகாசருக்கு விட்டுவிடுகிறேன்.

புல்லாக்கின் முத்து, தன் அழகுப் பொலிவைவிட இவளின் வெண்பல்வரிசையின் நகைப்பு மேலானதாக உள்ளதே என்று

வேதனையுற்றதாம்.

‘தான் இனி வாழ்ந்தென்ன!’ என்று குமைந்ததாம்.

தன்னிலும் மேலான இப்பற்களுக்கே பழி சாரட்டும் என்று தற்கொலை செய்துகொள்ள துணிந்தும் விட்டதாம்.

அதுவும், ‘அந்த அழகிய வெண்பற்கள் உறைகின்ற இதழ்களின் முன்னேயே தூக்கிலாடுவேன்’ என்று அவள் வாயெதிரில் நாசியிலே புல்லாக்காக நாண்டு கொண்டு தொங்குகிறதாம்!

அவ்வளவு அழகிய பற்களுடன் முத்துப் புல்லாக்கு (மூக்கணி) அணிந்து ஒருத்தி நிற்கிறாள் என்கிறார் சிவப்பிரகாசர்.

என்ன நயம்?

இனி பாடல் :

தன்னை நிந்தைசெய் வெண்நகைமேல் பழிசார

மன்னி அங்கது வாழ்மனை வாய்தன்

முன்னிறந் திடுவேன் எனஞான்று கொள்முறைமை

என்ன வெண்மணி மூக்கணி ஒருத்தி நின்றிட்டாள்