தொடர்கள்
கதை
புட்டா புடவை - பி.பிரபாவதி

20250520222049508.jpeg

தெரு முழுவதும் கலர் கோலங்கள் பிரமாதமாக காட்சி அளித்தது. சன்னதி தெரு என்பதால் எல்லோரும் அதிகாலையில் கலர்க் கோலம் போட்டு குளித்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு கிளம்பியாச்சு.

“என்னோட கோலம் பாத்தாச்சா? ஒங்களத்தான்”.

“பாத்தேன் பாத்தேன், அழகா நாலு பக்கமும் பெரிய பெரிய பூ.... மாதி... ரி”

“என்ன இழுக்கறீங்க? அது பூ இல்ல, பொங்கல் பானை. பொங்கல் பொங்கி வர மாதிரி போட்டு இருக்கேன், தெரியலயா? எதுதான் ஒங்கக் கண்ணுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு? ஒங்கள கட்டிக்கிட்டு” கடைசியில் எப்போதும் போல் முடித்தாள்.

“சரி சரி போய் புதுப்பொடவைய கட்டிட்டு வா” என்றார் மனோகரன்.

உடனே முகமெல்லாம் பிரகாசம். அந்தப் புடவையை அவள் அம்பூட்டு நேரம் பாத்து பாத்து கடைக்காரன் இவளுக்கு ஒரு ஜூஸ் ஆர்டர் செய்து, அவன் இரண்டு டீ குடித்து பின்னர் செலக்ட் பண்ணி வாங்கியதாச்சே!

பிளவுஸ் டிசைனாக மேட்ச்சாக வாங்கி தைக்க குடுத்திருந்தாள். நேற்று காலையே வாங்கி வந்தாச்சு.

“புடவை விலையை விட பிளவுஸ் தையல் கூலி அதிகம்” – முனகிய கணவரை முறைத்தாள்.

புடவையை பிரித்து உள்பக்கம் சொருகும்போதே என்னவோ போல் இருந்தது.

அவசரப்பட்டு விட்டோமோ? எதிர்த்த வீட்டு புவனாகிட்டயும் மாடிவீட்டு மல்லிகா கிட்டயும் வேற பீற்றிக் கொண்டாயிற்று.

சர்ப்ரைஸாக சூஊஊஊப்பரா கட்டிக்கொள்ள நினைத்திருந்தாள்.

புடவையை சுற்றிக்கொண்டு வர வர மனசு ஜிவ்வென்றானது.

புடவை முழுவதும் ஜரிகை புட்டாக்கள் இருக்கும். தக தக தகவென மின்னப்போகிறோம், எல்லோர் கண்ணும் தன் மீதே இருக்கும், கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் சுற்றிப்போட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

புடவையை சுற்றி கொண்டு வந்து தலைப்புப் பக்கம் மடிப்பு வைக்க ஆரம்பித்தாள்.

அப்போதுதான் கவனித்தாள். தலைப்பு பகுதியும், கொஞ்சம் தூரம் முன் பக்கமும் ஜரிகைப் புட்டாக்கள்.அப்படியே ஆடிப்போனாள்.முகம் முழுதும் கொப்பளிக்கும் கோபம்.

“ஏங்க இங்க வாங்க” கிட்டத்தட்ட கத்தினாள்.

மனோகரன் பதறிக்கொண்டே ஓடி வந்தார். என்ன ஆச்சோ? கரப்பான் பூச்சியா? மரப்பல்லியா?

எது வந்து பயமுறுத்தி இருக்கும்? எதற்கும் இருக்கட்டுமென்று துடைப்பக்கட்டையுடன் சென்றார்.

அங்கே அவர் பார்த்தது கிட்டத்தட்ட ஒரு மகா காளி அவதார கோலம்.

புடவை கட்டியதும் கட்டாததுமாக, ஏசி போட்டிருந்தும் வேர்த்து கொட்ட, கோபம் கொப்பளிக்க காட்சி தந்தாள்.

பயத்தில் துடைப்பக்கட்டையை கீழே போட்டார்.

“எதுக்கு தொடைப்பம் எடுத்துட்டு வந்தீங்க”?

“இல்ல அது வந்து கரப்பு, பல்லி வந்து வந்து” இழுத்தார்.

“அதெல்லாம் தேவலை, அந்தக் கடைக்காரன் என்னை ஏமாத்திட்டான். ----காரன், ----- பய, ----போக”, இன்னும் என்னென்னவோ!

பதறிவிட்டார். “நல்ல நாளும் அதுவுமா அப்பிடி எல்லாம் சொல்லாதமா. நீ புடிச்சு தானே பொடவை எடுத்த. இப்ப என்னாச்சு?”

“பிரிச்சு காட்டவே இல்லை. அப்படியே என் தலைல கட்டிட்டான். நல்லாயிருப்பானா?” கொஞ்சம் மூச்சு வாங்கினாள்.

பொடவ பூராம் ஜரிகை புட்டா இருக்கும்னு வாங்கினேன். ஆனா இந்தோ இங்க கொஞ்சம்தான் இருக்கு”.

“மல்லிகா, புவனா முன்னாடிலாம் எப்படி கட்டிட்டு போவேன்” சொல்லி முடிப்பதற்குள் ஒரு நாற்காலியை நகற்றி போட்டு “நீ மொதல்ல ஒக்காருமா, கொஞ்சம் தண்ணி குடி, இப்ப என்ன ஆச்சு? புட்டா பத்தில்லாம் எனக்கு தெரியல. இந்தப் பொடவையில அப்படியே தேவதை மாதிரி இருக்க. அந்த அம்மனையே பாக்கற மாதிரி இருக்கு” பில்டிங் கட்டி முடித்தார்.

“நிஜமாவா சொல்றீங்க”, கொஞ்சம் வெட்கம் வேறு.

“இருங்க கட்டி முடிக்கிறேன். கீழ ஒக்காந்து மடிப்பெல்லாம் சரி பண்ணி விடுங்க” என்றாள்.

எப்போதும் செய்வது தானே. செய்து முடித்து, முகச்சாயங்கள், சிகை அலங்காரம் முடித்து கோவிலுக்கு அழைத்துப் போவதற்குள் போதும் போதுமென்றானது.

இவருக்கு வாங்கிய சட்டையை பற்றி கேட்கவே இல்லை. இவருக்கு இரண்டு சைஸ் சின்னதாக வாங்கி வந்திருந்தாள். இப்போது ‘மூச்’ என்றிருந்தார்.

கோயிலுக்கு போய் தரிசனம் ஆச்சோ இல்லையோ, புடவையை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் முகம் போகும் போக்கில் புடவைக்கு மார்க் போட்டு அலுத்துப் போய் வீடு வந்து சேர்ந்தாள்.

புவனாவும் மல்லிகாவும் எதுவும் சொல்லாதது மனதை நெருடியது.

“ஏங்க ஒங்களுக்கு அந்த புளூ கலர்ல சட்டை வாங்கியிருந்தேனே, ஏன் போட்டுட்டு வரல”? நினைவு வந்தவளாக கேட்டாள்.

அவர் அளவு மிகவும் சின்னதாக இருப்பதைச் சொல்ல மீண்டும் கடைக்காரனுக்கு வசவுகள் மானசீகமாக போய்க் கொண்டிருந்தது.

தொடர்புக்கு:வி.பிரபாவதி,எஃஃப்3,மணிகண்டன் ஃஃபிளாட்ஸ், 3ஆம் மைன் ரோட்,ராகவ நகர், மடிப்பாக்கம்,சென்னை 91,9445401126,prabagiri239@gmail.com