கடந்த நான்கு மாதங்கள் ஒரு சுகவீனத்தால் தாளம் படுமோ தறி படுமோன்னு என்று அல்லல் பட்டேன். ‘எதுக்கு அழுகாச்சி?’ என்று அதுபற்றி எழுதுவதைத் தவிர்த்தேன். இப்போது உடல்நிலை ஸ்திரப்பட்டு விட்டதால் அது பற்றி வேண்டாம். தேவைப்பட்டால் வரும் நாட்களில் அதையே கொஞ்சம் ஜாலியாக எழுதலாம் தான்!
ஒரு மாறுதலுக்காக எங்கேனும் போய் வரலாம் என்று என் மகன் கேட்க, குடும்பத்தோடு லண்டன் போயிட்டு வருவோமே என்று வீட்டில் முடிவு கட்டினார்கள்.
ஏர் இண்டியாவில் டிக்கெட் போட்டாயிற்று. அடுத்த நாளே அகமதாபாதில் விமானம் விழுந்த விபத்து நேர்ந்த படியால்,
‘நான் வரலப்பா!’ என்று பின்வாங்க, விடாமல் டிக்கெட்டுகள் நட்டத்துடன் கேன்சல் செய்யப் பட்டன. எமிரேட்ஸில் துபாய் வழியாக லண்டனுக்கு மீண்டும் டிக்கெட்டுகள் எடுக்கப் பட்டு கடந்த ஞாயிறு அதிகாலை மும்பையிலிருந்து கிளம்பினோம்.
என் இருக்கை அப்கிரேட் செய்யப்பட்டு கொஞ்சும் சொகுசாக அமரவைக்கப் பட்டேன். சிகப்புக் குல்லாய் விமானப் பணிப்பெண்கள் விருந்தோம்பலில் அக்கறை இருந்தது. போர்ட்சுகல் தேசத்து பார்பரா என்ற இளம் விமான பணிப்பெண் விசேஷமாக கவனித்துக் கொண்டாள். அவர்கள் ஊரைப் பற்றி பெருமை பொங்கக் கூறினாள்.
‘எங்க ஊரு கூடத் தான்…’ என்று நான் கடலூரைப் பற்றி ஆரம்பிக்கும் முன்பே துபாய் வந்து விட்டது.
‘ஹோ’ என்று பரந்து மிரட்டும் துபாய் விமான நிலயத்தில், கள்ளழகர் வந்து பாலைவனத்தில் இறங்கிவிட்டாரோ என்று நினக்க வைத்த கூட்டம் அலை மோதியது.
லண்டன் விமானம் ஏற அக்கூட்டத்தில் கோவிந்தா போட்டபடி முன்னேறினோம்.
என்னை மீண்டும் வஸ்த்ராபகரணம் பண்ணி பரிசோதித்து அனுமதித்தார்கள். திரும்பவிட்டு முதுகில் தடவின பரிசோதகனிடம் ‘அங்க தாண்டா… ஒரு இன்ச் மேலே சொறிஞ்சு விடு..’ என்று முணகினேன். ‘எஜ்?’ என்று கேட்டான். அது ‘எஸ்’ஸாமாம். புன்னகையை உதிர்த்து விட்டு நடந்தேன்.
லண்டன் எமிரேட்ஸ் பயணமும் இனிதாக அமைந்தது.
ராட்சத ஏர்பஸ் அலுங்காமல் தரையிறங்கியது. நகரின் நடுவில் வசதியான சமையலறையுடன் ஒரு பெரிய வீடு ‘ஏர் பி என்பி’யில் புக் செய்யப் பட்டிருந்தது.
லண்டன் மாநகருக்கு இது எனது மூன்றாவது பயணம்.
லண்டன் என்று சொல்லவேண்டுமா இலண்டன் என்று சொல்ல வேண்டுமா என்றொரு வாதம்.
ராசிபுரம் இராசிபுரம் ஆதல் சரியே. லண்டன் தமிழ் பெயரில்லையாதலால் இகரத்தை இடவேண்டாம் என்பது என் துணிபு.
இந்த நகரம் உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத நகரம்.
அடுத்தடுத்த பதிவுகளில் இந்த நகரத்தைப் பற்றிய செய்திகளையும் பார்த்த இடங்களையும் சொல்கிறேன்.
‘’ஒரு மனிதனுக்கு லண்டன் நகரம் அலுத்து விட்டது என்றால், அவனுக்கு வாழ்க்கையே அலுத்து விட்டது என்றுதான் அர்த்தம்.
ஏனெனில், லண்டனில் மட்டுமே வாழ்க்கை அளிக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளின் சாத்தியக் கூறுகளும் உள்ளன.’’ என்றார் சாமுவல் ஜான்ஸன்.
உக்கும்… இந்தாளு எங்க ஊரைப் பாக்காமலேயே லண்டன் தான் ஒசத்தின்னு எழுதிட்டாரு! போகட்டும்…
அடுத்த வாரம், புது வாரம், இன்னும் புது விவரங்களுடன்…
Leave a comment
Upload