தொடர்கள்
பொது
சனாதன தர்மம் "இதில் அதிக சடங்குகள் இருக்கா" - இறுதி வாரம். ஆர் சங்கரன்

20240319132223663.jpg

சநாதன தர்மத்தின் இரு பெரும் குற்றங்களாகச் சொல்லப்படும் ஆசிரம தர்மம் வர்ணதர்மம் இரண்டையும் ஓரளவு விரிவாகப் பார்த்தோம். போன பகுதியில் இன்றைய உலகிலும் நாளைய உலகிலும் கூட ஆசிரம தர்மம் அர்த்தமுள்ளது பயனுள்ளது என்றும் பார்த்தோம் என்றவாரே ஆரம்பித்த நமது சங்கரன் தொடர்ந்து சில நம்மிடையே சுற்றிவரும் கேள்விகளைத் தொடுக்கிறார்.

வர்ண தர்மம் இன்றும் மக்களுக்குப் பயனுள்ளதா? இல்லை அது பழையன கழிதலும் என்ற நிலையில் களையப் படவேண்டியதா? சுருக்கமாக இந்தக் கேள்விகளுக்கு விடையைப் பார்ப்போமா?

பண்டைய பாரதத்தின் வர்ணங்கள் இன்று இல்லை, அவற்றிற்கு பதிலாக புதிய வர்ணங்கள் ஏற்பட்டுள்ளன என்று பார்த்தோம். ஆனால் அவற்றிற்கு வரைமுறைகளும் சமூக நிலைபாடுகளும் ஏற்படவில்லை. பொதுவாக அறியப்படும் எல்லைகள் மீறப்பட்டால் அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ ஒரு அமைப்பு இல்லை. அவ்விதம் ஏற்படுத்தப் பட்ட அமைப்புகளே அந்த புதிய வர்ணங்களில் சிக்கித் தவிக்கின்றன. மனித வளம், உலகியல் அமைதி, ஒருங்கிணைந்த மனித குல முன்னேற்றம் என்றெல்லாம் பேசுபவர்கள் இந்த வரைமுறைகள் நிலைபாடுகள் மிக அவசியமானவை என்பதைச் சொல்கிறார்கள்.

சநாதனத்தின் வர்ணங்களின் பிரிவு இன்று மாறியிருந்தாலும் அவற்றின் கோட்பாடுகள், சமூகக் கட்டுப் பாடுகள் இன்றும் பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன. அந்த கட்டமைப்புகள் இந்தக் கால வர்ணங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டால் இன்றைய மனித குலத்தின் பல பிரச்சினைககுத் தீர்வு காணமுடியும்.

உதாரணமாக ஆசிரியப் பணி மற்றும் மருத்துவப் பணி செய்பவர் தம் கல்வியை விற்கக் கூடாது, அரசாங்கத்தில் உள்ளவர் நாட்டு நலனையே மனதில் கொள்ள வேண்டும் என்பது போன்ற கட்டுப் பாடுகள் பொது நல நோக்கில் கொண்டுவரப் படவேண்டும். அதை மீறுபவர்க்கு சமூக அந்தஸ்து மறுக்கப் படவேண்டும். இதுபோன்ற அறம் சார்ந்த கட்டுப்பாடுகள் மட்டுமே ஒரு சமுதாயத்தில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

எல்லையில்லாமல் பரந்து விரிந்த இந்தப் ப்ரபஞ்சத்தில் நாம் வாழும் பூமி என்பது ஒரு மிகச் சிறிய துகள். இதில் நாம் பெருமை கொள்ளும் விஞ்ஞான தொழில் நுட்ப வாணிக முன்னேற்றங்களும் நம் சிந்தனையின் விரிவுகளும் அந்தத் துகளில் ஒரு சிறிய மாற்றத்தைச் சிலகாலம் செய்ய முடியும். இந்தப் ப்ரபஞ்சத்தில் அவை என்ற மாறுதலையும் செய்வதில்லை. உபனிடதம் கூறுவதுபோல சூரியன் உதித்து மறைவது, காற்று வீசுவதும், நெருப்பு எரிவதும் சுடுவதும், ஜனன மரணங்கள் ஏற்படுவதும் இந்த ப்ரபஞ்சத்தை இயக்கும் ஒரு மாபெரும் சக்திக்குக் கட்டுப்பட்டே. அப்படியிருக்கும் இந்த துகளில் ஒருசில நொடிகள் (ப்ரபஞ்ச அளவுகோலில்) வாழும் நாம் இதை வென்றோம் அதை வென்றோம் என்று சொல்வது சிறுபிள்ளைத் தனம். இந்த அடக்கத்தைப் பணிவைச் சொல்வது பயிற்றுவிப்பது சநாதன தர்மம், குறிப்பாக வர்ண ஆசிரம தர்மங்கள்.

இன்னொரு கோணத்தில் மேலே சொன்ன கேள்விகளை அணுகுவோம். கடந்த முன்னூறு ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பலவும் மனித வாழ்க்கையை, அதன் ஒழுக்கத்தை அதன் ஆரோக்கியத்தை அதன் அமைதியை மிகவும் குலைத்துவிட்டன. ரேடியோ, டெலிவிஷன், வேதியல் போதைப் பொருள்கள், சட்டென்று சமைத்தல் என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம். கம்யூனிசம் பெருநிறுவனம் (corporations) என்பவை ஒரு நல்ல இலக்கோடு தோன்றினாலும் அவை உலக சமநிலையை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. ஆனாலும் யாரும் அவற்றைக் குறைசொல்வதில்லை. அவையெல்லாம் முன்னேற்றத்தின் சுவடுகள் என்று பெருமைப் படுகிறோம்.

பாரதத்தின் பிரச்சினைகளுக்கு எல்லாம் சநாதன தர்மத்தையே குறை சொல்வது ஒரு அலங்காரமாகவும், மற்ற காரணங்களை எல்லாம் மறைக்கும் திரையாகவும் நமது நாட்டிலும் வெளி நாடுகளிலும் வழக்கமாகி விட்டது. தெளிந்த நீரோடையில் அழுக்கைக் கலந்து அதன் ஓட்டத்தையும் திசை திருப்பிவிட்டு, அந்த ஓடை தவறு என்று சொல்வது அதுவே குழப்பங்களுக்குக் காரணம் என்று ப்ரசாரம் செய்வது கண்டிக்கத் தக்கது. தமிழகத்தில் நம் கண் முன்னால் காவிரி நதிக்கு ஏற்பட்டுள்ள அவல நிலைதான் சநாதன தர்மத்திற்கும் ஏற்பட்டுள்ளது. நாமும், நம் நாட்டிற்கு வந்தவரும் சேர்ந்து செய்த தவறுகளுக்கு சநாதனத்தைக் குறைசொல்வது ஏற்புடையதல்ல.

எனது முயற்சியின்மை, சோம்பல், இயலாமை முதலான குறைபாடுகளால் என் சாதனைகள் குறையும்போது எனது முன்னோர்களைக் காரணப்படுத்துவது எவ்வளவு தவறோ அதேபோலத்தான் இதுவும். சநாதன தர்மத்தை இப்போது பின்பற்றாமல் இருக்கலாம் அது நமது நஷ்டம். ஆனால் பழங்காலத்தில் அது நமது நாட்டிற்குச் செய்த நன்மையை திரித்துக் கூறுவது அறிவுடைமை அல்ல.

கடந்த முப்பது பகுதிகளாக சனாதன தர்மத்தைப் பற்றிய ஒரு அலசலை மேற்கொண்டோம். அதில் நாம் பார்த்த முக்கிய அம்சங்கள் ஒரு சிறிய தொகுப்பாகக் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  1. சனாதன தர்மம் என்றால் என்ன?
  2. சட்டம் செய்யாததை தர்மம் செய்யுமா?
  3. தர்மமும் கர்மாவும்
  4. மறுபிறவி உண்டா?
  5. கர்மாவின் முக்கிய பிரிவுகள்
  6. சனாதனத்தில் சடங்குகள்
  7. சடங்குகளின் மூன்று தொகுப்புகள்
  8. மோட்சம் – கடவுள் – ஒரு பார்வை
  9. இல்லறத்தின் பங்கு – மன நிலை
  10. வர்ண ஆசிரம பாகுபாடு

இந்தத் தொடர் ஒரு அறிமுகமாகவே தொடங்கப் பட்டது.

அதன் பயன் இந்த நிலையில் முடிவடைந்ததாக உணரப் படுகிறது. ஆனால் இது சநாதன தர்மத்தை முழுவதுமாகச் சொன்ன ஒரு முயற்சியல்ல. ஆர்வம் உள்ளவர்க்கான ஒரு தொடக்கம், ஒரு உந்துதலே. பரந்த ஆகாயத்தைப் பாய்போலச் சுருட்டினான் என்றால் சநாதன தர்மத்தின் அங்கங்களை சிறப்பை பயன்பாட்டையும் இந்தத் தொடர் முழுவதுமாகச் சொன்னது எனலாம்.

இது கேள்விகளின் விடையாக அமையாமலும் இருக்கலாம்.

ஆனால் கேள்விகளின் தரத்தை உயர்த்துவதாக அமையும் என்று நம்புகிறேன். பொங்கி வரும் காவிரியின் புனல் நீரில் ஒரு கை நீர் எடுத்து அந்த காவிரித் தாய்க்கு அர்க்கியம் கொடுப்பது போலவே இந்த சிறு முயற்சி.

சநாதன தர்மத்தின் சிறப்பே கேள்விகள் கேட்பதும், விடைகளைத் தேடுவதும் தான். ஆம்..ஆதி தெரியாத (என்று உருவானதோ என்று) இந்த தர்மத்தில் விடைகள் நிச்சயம் உண்டு. கண்டவரிடம் கேட்காது கேள்விகளை கரை கடந்தவரைக் கேட்டால் ஒரு வழி பிறக்கும். விடை கிடைக்கும்.

பிறிதொரு சந்தர்பத்தில் சந்திப்போம்.