தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 5     பித்தன் வெங்கட்ராஜ்

20240320092611821.jpg

‘ஒரு துப்பாக்கிக் குண்டைவிட ஒரு வாக்குச்சீட்டு வலிமையானது. ('The ballot is stronger than the bullet')

-ஆபிரகாம் லிங்கன்.

இது தேர்தல் காலம். இந்தக் கட்டுரையைத் தாங்கள் படிக்கும்போது, இவ்வுலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடான நம் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களித்து முடித்து தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பீர்கள்.

20240320092629991.jpg

தாம் விரும்பும் தம்மில் ஒருவரைத் தம்மை ஆளத் தேர்ந்தெடுப்பதுதான் தற்போதைய மக்களாட்சியின் தேர்தல் நடைமுறை என்பதை நாம் அறிவோம். இந்தத் தேர்தலின் ஆரம்பத்தை நாம் தேடிப் போனால் அது கிமு.500களில் கிரேக்கத்தில் இருக்கிறது. ஆனால், அது இப்போதுள்ள நடைமுறை போலல்லாமல், எதிர்மறை வாக்களிப்பாக இருந்துள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். அதன்படி, அக்கால கிரேக்கர்கள் தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களின் பெயர்களைப் பானை ஓட்டினால் செய்யப்பட்ட துண்டுகளில் எழுதி வாக்குப் பெட்டியில் செலுத்தியிருக்கிறார்கள். எந்த ஆட்சியாளர் 6000 வாக்குகளுக்கு மேல் பெற்றாரோ அவர் அடுத்த பத்தாண்டுகளுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கிறார். இத்தகவல்களை கிரேக்கத் தலைநகர் ஏதென்சில் 1960இல் தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 8500 வாக்குப்பெட்டிகளின் புதைபடிமங்களின் மீது நடத்திய ஆய்வின்படி சொல்கின்றனர் வரலாற்றாளர்கள்.

20240320092649414.jpg

போலவே, நம் தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வில் சென்னையை அடுத்த உத்திரமேரூரில் கிடைத்த கல்வெட்டுகளில் 9ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் தேர்தல் நடந்ததைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. அத்தேர்தல் முறைக்குக் குடவோலை முறை என்று வரலாற்றாளர்கள் பெயர் குறித்துள்ளனர். அக்கல்வெட்டுகளில், உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்துக்கான 30 குடும்புகளுக்கான (வார்டுகளுக்கான) சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள், நடைமுறைகள், போட்டியிடுவோர்க்கான தகுதிகள், போட்டியிடத் தகுதியற்றவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவிக்காலம், குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் பதவி நீக்கம் என்று அனைத்து நெறிமுறைகளும் அக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தோடு இல்லாமல் இந்தக் குடவோலை முறைத் தேர்தலை நடத்தியவர்களின் பெயர்களும்கூட அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன என்ற தகவல் நமக்கு இன்னும் வியப்பைத் தருகிறது!.

20240320092714126.jpg

கல்வெட்டுகள், புதைபடிமங்கள் தொல்லியல் எச்சங்கள் மட்டுமல்லாது நம் இலக்கியத்திலும் தேர்தல் பற்றிய விவரங்கள் உள்ளன என்பதை நாம் கீழே உள்ள அகநானூற்றுப் பாடலில் காணலாம்.

20240320092734344.jpg

...இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்

குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்

கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்

பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்

உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த

தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர…

-அகநானூறு – களிற்றியானைநிறை - வரிகள்: 5-10

20240320092753315.png

பிட்டன் என்னும் சேரர் படைத்தலைவன் பொருள் தேடித் தன் தலைவியைப் பிரிய நேரும்போது தன் தலைவியின் நிலைகண்டு தான் போவதை நிறுத்திக்கொள்வதாகச் சொல்லும் இப்பாட்டில், பாலை நில வருணனைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில், இடி இடித்து மழை பெய்யும் வானம் இல்லாமல்போனதால், எங்குப் பார்த்தாலும் குடிமக்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்துகொண்டுள்ளனர் என்கிறார் மருதன் இளநாகனார். தொடர்ந்து, கயிறுபோட்டுக் கட்டிய பானையிலிருந்து ஓலையை எடுத்து ஆராயும் ஆவணமாக்களைப் போன்று, போரில் இறந்த வீரனின் வயிற்றிலிருந்து அவன் குடலை ஒரு கழுகு இழுத்து வெளியே போடுகிறது என்று ஒப்பிடுகிறார். என்ன ஒரு வித்தியாசமான உவமை!

கயிறுபோட்டுக்கட்டிய பானையிலிருந்து ஓலையை எடுப்பது என்பது குடவோலை முறையைத்தான் குறிக்கிறது. இப்போது நாம் EVM இல் வாக்களித்தாலும், முன்னர் இருந்தது இதுபோன்ற வாக்குச் சீட்டு முறைதானே. மருதன் இளநாகனார் பெரும்பாலும் முற்காலப் பாண்டியர்களைப் பாடியிருப்பதால் அவரது காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நாம் கருதலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடவோலை முறை என்னும் தேர்தல் நடந்திருப்பதை இலக்கியம் வழி நமக்கு அறியத் தந்த மருதன் இளநாகனார்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

எங்கும் எதிலும் எப்போதும் சிறந்த தேர்வாக விளங்கும் நம் தமிழுக்கு இஃது ஐந்தாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்.

20240320092812983.jpg

-பித்தன் வெங்கட்ராஜ் ✍️