தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 65 "சிவாஜி வாயிலே ஜிலேபி" - பரணீதரன்

20240319140250720.jpg

20240319135949164.jpg 20240319140029320.jpg

பாக்களைப் பார்ப்போம் அடுத்தவாரம் என்று சென்ற வாரம் சொன்ன பரணீதரன் தயாராகிவிட்டார் தமது வாக்கை நிறைவேற்ற........

நள வெண்பா, நீதி வெண்பா போன்றவையில் வெண்பா என்ற பெயர் வெளிப்படையாக வருகிறது. திருக்குறள் போன்ற நூல்களின் வெண்பாவின் பெயர் மறைந்து வருகிறது (குறள் வெண்பா என்பது வெண்பாவின் ஒரு வகை) என்று ஆரம்பித்தவர் தொடர்கிறார்

பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவையே. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, மணிமேகலை, விநாயகர் அகவல் போன்ற நூல்கள் ஆசிரியப்பாவாகும். அகவல் என்பது ஆசிரியப்பாவின் ஓசை.

இப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நூல்களில் கலித்தொகை மட்டுமே கலிப்பா உள்ளது. கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் கடவுள் வாழ்த்தில் கலிப்பா வருகிறது.

பட்டினப்பாலை மற்றும் சில தனிப்பாடல்களில் மட்டுமே வஞ்சிப்பா வந்துள்ளது.

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

சயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

அந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

வசைபாடக் காள மேகம்

பண்பாகப் பகர்சந்தம் படிக்காச

லாலொருவர் பகரொ ணாதே

- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

அதாவது வெண்பாவிற்கு புகழேந்தி, பரணிக்கு ஜெயங்கொண்டார், விருத்தத்திற்கு கம்பர், கோவை, உலா மற்றும் அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர், கலம்பகத்திற்கு இரட்டைப் புலவர்கள், வசை செய்யுள்களுக்கு (நிந்தா ஸ்துதி) காளமேகப் புலவர், சந்தப் பாடல்களுக்கு படிக்காசுப் புலவர் இவர்களுக்கு நிகர் இவர்களே என்று இந்த பாடல் கூறுகிறது.

இதில் வெண்பா என்பது நளவெண்பாவை குறிக்கிறது. பரணி என்பது கலிங்கத்துப் பரணியை குறிக்கிறது. விருத்தம் என்பது கம்பராமாயணத்தை குறிக்கிறது. கோவை என்பது காங்கேயன் நாலாயிரக் கோவை, நாலாயிரக் கோவை போன்றவையையும், உலா என்பது மூவர் உலாவையும், இவருடைய அந்தாதி நூல்கள் கிடைக்கவில்லை ஆனால் அந்தாதி பாடுவதில் வல்லவர் என்று தெரிகிறது. கலம்பகம் என்பது தில்லைக் கலம்பகம், திரு ஆமாத்துர்க் கலம்பகம் மற்றும் கச்சிக் கலம்பகம் ஆகும். வசை பாடல்கள் அனைத்தும் காளமேகப் புலவரின் பாடல் திரட்டில் உள்ளது. சந்தம் என்பது தொண்டை மண்டல சதகம், தண்டலையார் சதகம், வேலூர்க் கலம்பகம் போன்ற நூல்களில் உள்ள சந்த நடையாகும்.

பொதுவாக யாப்பிலக்கணம் சற்று கடுமையாகவே இருக்கும்.

யாப்பிலக்கணத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உறுப்பையும் நாம் பார்ப்பதற்கு முன்னால் யாப்பிலக்கணத்தில் உள்ள எளிமையான பகுதிகளை முதலில் பார்த்துவிடலாம். அதன் பிறகு பல புலவர்களின் பாடல்களையும் அவற்றில் பொதிந்துள்ள சுவையான செய்திகளையும் பார்ப்போம். அதன் பிறகு நாம் யாப்பிலக்கணத்தின் கடினமான பகுதிகளை பார்க்கலாம்.

யாப்பிலக்கணத்தில் வண்ணம் என்று ஒரு தனி பகுதி உள்ளது. அவற்றை நாம் பொதுவாக கவி என்று கூறுவோம். இந்த கவிகள் நான்கு வகைப்படும். அவை :

ஆசுகவி - கொடுக்கப்பட்ட தலைப்பில் மடைதிறந்த வெள்ளம் போல உடனடியாக பாடக்கூடிய கவி. இவற்றிற்கு பெயர் போனவர் காளமேகப் புலவர். நிறைய புலவர்கள் (திருமங்கை ஆழ்வார், திருஞானசம்பந்தர்) ஆசுகவியில் சிறந்தவர்களாக இருந்தாலும் நமக்கு காளமேக புலவரின் பாடல்கள் மிகுதியாக கிடைத்துள்ளன.

மதுரகவி - யாப்பிலக்கணத்தின் பல்வேறு நயங்களை உள்ளே கொண்டு மிகவும் இனிமையான கவிதைகளை கொண்டது மதுரகவி. மதுரகவி பாடியவர்கள் பலர் இருந்தாலும் (திருமங்கை ஆழ்வார், திருஞான சம்பந்தர், அதிமதுர கவிராயர்) நமது நினைவில் எப்பொழுதும் நீங்காமல் இருப்பவர் மதுரகவி ஆழ்வார் ஆவார்.

சித்திரக்கவி - நாம் கூற வேண்டிய செய்யுளை உரைநடையில் கூறாமல் அதனை ஓவிய பாங்கில் கூறுவது சித்திரக் கவியாகும். திருமங்கை ஆழ்வார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்றோர் சித்திர கவிகளை உருவாக்கி உள்ளனர்.

வித்தாரக்கவி - கூற வேண்டிய ஒரு விஷயத்தை விரித்து நல்ல விரிவாக (விஸ்தாரமாக - வித்தாரமாக) இயல் இசை நாடகம் மாடல் கோவை மாலை போன்றவைகளையும் சேர்த்து பாடுவது. வித்தாரக்கவியில் சிறந்தவர் காளமேகப் புலவர் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆவார்.

ஆசுகவியில் அமைந்த ஒரு பாடலை விரிவாக்குகிறார் பரணீதரன்.

20240319140352348.jpg

தூதஞ்சு நாழிகையில் ஆறுநாழிகைதனில்

சொற்சந்த மாலை சொல்லத்

துகளிலா வந்தாதி யேழுநாழிகை தனில்

தொகைபட விரித்து ரைக்கப்

பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனில்

பரணியொரு நாண்முழுவ தும்

பாரகா வியமெலா மோரிரு தினத்திலே

பகரக்கொ டிக்கட்டி னேன்

சீதஞ்செ யுந்திங்கண் மரபினான் நீடுபுகழ்

செய்யதிரு மலைரா யன்முன்

சீறுமா றென்றுமிகு தாறுமா றுகள்செய்

திருட்டுக் கவிப் புலவரைக்

காதங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக்

கதுப்பிற் புடைத்து வெற்றிக்

கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு

கவிகாள மேகம் நானே

அதிமதுரக்‌ கவிராயர் காளமேகப் புலவரைப் பார்த்து நீ யார்? என்று கேட்ட கேள்விக்கு காளமேக புலவர் கூறிய பதில் தான் மேலே உள்ளது.

தூது என்னும்‌ வகைப்‌ இலக்கியத்தை ஐந்து நாழிகைக்கு உள்ளாகவும்‌,

சந்தமாலை என்பதனை ஆறு நாழிகைக்கு உள்ளாகவும்‌,

அந்தாதி வகைகளை ஏழு நாழிகைப்‌ பொழுதில்,

மடல்‌, கோவை ஆகியனவற்றைப்‌ பத்து நாழிகைகட்குள்ளாகவும்‌,

பரணியை ஒரு நாள்‌ முழுவதற்குள்‌ளாகவும்‌,

பெரிய காவியங்களை எல்லாம்‌ ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவும்‌

சொல்வதற்கு விருதுக்கொடி (பெரிய புலவர்களுக்கு மன்னர்கள் கொடுக்கக்கூடிய விருதுகளை மொத்தமாக கட்டி ஒரு கொடி போன்ற அமைப்பு செய்து எடுத்து வருவார்கள்) கட்டி வந்துள்ளேன்‌ நான், திருமலைராயன்‌ முன்‌ மிகுதியாகத்‌ தாறுமாறான செயல்களைச்‌ செய்து கொண்டிருக்கின்ற திருட்டுத்தனம்‌ உடைய கவிராயரான புலவர்களை காதுகளை அறுத்தும்‌, சவுக்கினாலே அடித்தும்‌, கன்னங்களிற்‌ புடைத்தும்‌, என்‌ வெற்றியாகிய சேணத்துடனே கடிவாளத்தை இட்டும்‌, அவர்கள்‌ மீது ஏறிச்செலுத்தும்‌ கவிஞனான காளமேகம் நான் என்று கூறுகிறார்.

இதில் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு தூது இலக்கியம் உருவாக்குவதற்கு காளமேகப் புலவருக்கு 120 (24X5) நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரங்களை ஆகும் என்று கூறுகிறார். இதுபோல ஒவ்வொரு இலக்கியத்திற்கும் குறைந்த நேரத்தையே அவர் கூறுகிறார். இதற்கு காரணம் அவர் ஆசுகவியில் சிறந்தவர்.

வரும் வாரம் இவருடைய ஆசிரியர்கள் பலரைப் நாம் படித்துப் பார்த்து ரசிப்போம்