தொடர்கள்
follow-up
வெளிநாட்டு விலங்குகளை கடத்த முயன்ற காவலர் கைது - ப ஒப்பிலி

20240326182523681.jpg


இந்த மாதம் பன்னிரண்டாம் தேதி சென்னை ஏர்போர்ட்டில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காக்கிலிருந்து வந்த முஹம்மது முபீன் என்ற பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது சிவப்புக் கண் ஆமைகள் மற்றும் கொல்கத்தா ஆமைகளை கடத்தி வந்துள்ளது தெரியவந்தது. அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றனர். அந்த சமயத்தில் முபீன் நண்பர் எஸ் ரவிக்குமார் என்பவரும் உடன் இருந்ததால் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த கூட்டிச்சென்றனர். விசாரணையில் ரவிக்குமார் தமிழக சிறப்பு காவல் படையின் மதுரையில் உள்ள ஆறாவது பட்டாலியனில் பணி புரிபவர் என்றும், அவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்தது.


மத்திய அரசின் வன விலங்குகள் குற்ற தடுப்பு பிரிவின் தென் மண்டல துணை இயக்குநர் ம கிருபா சங்கர் இது பற்றி கூறுகையில் எங்களது ஆரம்பக்கட்ட விசாரணையில் இந்த காவலர் இதற்கு முன் இரண்டு முறை இந்த மாதிரியான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிறை தண்டனை பெற்றுள்ளார். அதனால் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முபீன் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர். அவர் இந்த மாதிரியான வெளிநாட்டு வன விலங்குகள் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தியதே குமார்தான் என்று தெரிய வந்தது.

மொத்தம் 484 சிவப்பு கண் ஆமைகளும், ஒன்பது கொல்கத்தா ஆமைகளும் பிடிபட்ட இருவரிடமும் இருந்து கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. குமாரின் கைது, இந்த கடத்தல் தொழிலில் ஈடுபடும் ஓரு பெரிய கும்பலின் நெட்ஒர்க்கை கண்டறிய பேருதவியாக இருக்கும், என்கிறார் கிருபா சங்கர். குமாரின் முக்கிய தொழில் குருவிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி அவர்கள் மூலம் உயிருள்ள வெளிநாட்டு பறவைகள், ஊர்வன, மற்றும் பாலூட்டிகளை கடத்தி வருவதே.

ஏற்கனவே இதே மாதிரியான இரண்டு வழக்குகளில் ஆந்திர பிரதேச வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார் ரவிக்குமார். ரவிக்குமாரை பிடித்ததில் ஓரு பெரும் திருப்பம். இதுவரை குருவிகளாக செயல்படும் நபர்களை சுங்கத்துறையிடமோ அல்லது வன துறையிடமோ பிடிபட்டுள்ளனர். குருவிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஒரு நடுத்தர ஏஜென்ட் ரவிக்குமார். அவன் மூலம் இது மாதிரி குருவிகள் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் என்னென்ன கொண்டு வந்தனர். உயிருடன் உள்ள விலங்குகள் தவிர தங்கம் போன்றவற்றை கடத்தி வந்தனரா? போன்றவை குறித்து ரவிகுமாரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அது தவிர முஹம்மது முபீன் எத்தனை முறை வெளி நாடுகளுக்கு சென்று வந்தார். ஒவ்வொரு முறையும் விலங்குகள் தவிர வேறு ஏதும் கடத்தி வந்தாரா. யாரிடமிருந்து விலங்குகளை வாங்குகிறார், ஆகியவை குறித்து இந்த பயணியிடம் விசாரித்து வருகின்றனர் அதிகாரிகள். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தமிழக காவல் துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் ரவி மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள வன அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த மூன்று/நான்கு வருடங்களாகவே உயிருள்ள வெளிநாட்டு பறவைகள், ஊர்வனங்கள், மற்றும் பாலூட்டிகள் கடத்தப்பட்டு சென்னை விமான நிலையத்தின் வழியாக பல ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் சோதனைகள் அதிகப்படுத்தியும் இந்த நிலை தொடர்கிறது. இந்த மாதிரியான கடத்தல் தொழிலில் கடத்தப்படும் விலங்கினங்கள் பல சமயங்களில் இறப்பது என்பது ஒரு வாடிக்கையான விஷயமாகிவிட்டது.

கடந்த மாதம் டெல்லியில் உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்று சிபிஐ தலைமையில் கூட்டப்பட்டது. இதில் இன்டர்போல் பிரதிநிதிகள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற அயல் நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். அது தவிர டீஆர்ஐ, கஸ்டம்ஸ், என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கடத்தல்கள் குறித்த தகவல் பரிமாற்றம், உயிருடன் உள்ள விலங்குகளை பத்திரமாக அவை வந்த ஊர்களுக்கே திருப்பி அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.