தொடர்கள்
தொடர்கள்
சுப்புசாமியின் சபதம்...! புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன். 3.

20240326210044315.jpeg


சுப்புசாமி, வரவேற்பறை சோபா செட்டில் வாய்பிளந்து நித்திரை மேற்கொண்டிருந்தார்.


46 வயது ஆன்ட்டி ஒருத்தி, 18 வயது உடையைச் சிக்கென அணிந்து, கையில் ஆட்டோகிராப் நோட்டும் பேனாவுமாக சுப்புசாமியை ஆலிங்கனம் செய்யாத குறையாக நெட்டித்தள்ளி நெருங்கியிருந்தாள்.
கை நடுக்கத்துடன் ஏதோ கோடு போட்டதை அவரின் கையெழுத்தாக எண்ணி, நோட்புக்கை தனது இரு மடிப்பு இடுப்பில் செருகிக் கொண்டாள். அவள் மிகவும் வாசத்துடன் இருந்ததால் வாசத்தை ஆவலாக இழுத்தார் சுப்புசாமி. பின்னர் கண்களைத் திறந்து அவளது அழகை தரிசிக்கத் தயாரானார்.

கண்களைத் திறந்தவர், திடுக்கிட்டார்.
"நீ ஏன் என் மூஞ்சிகிட்டே குனிஞ்சு பார்க்கிறாய்?" என்றார்.


"மூச்சு இருக்கிறதா என்று பார்த்தேன்!" என்றாள் கோமுபாட்டி.


"பகல் கனவோ?"


"பகல் கனவா! ஐயாவுக்கு இனிமேல் எல்லாமே நிஜக்கனவுதான்! ஆமா, ஏன் உன் முகம் வாடியிருக்கு...?"


"வாட்டமா? எனக்கா?" சமாளித்தாள் பாட்டி.


"இல்லை, உன் முகத்தில் அடிக்குமே... ஒரு டால்... அது மிஸ்ஸிங்!"


"நிஜமாவா சொல்றீங்க?"


"ஆமாம்!"


"பரவாயில்லையே, நல்ல கணவராக மனைவியின் மன வாட்டத்தைச் சரியாகக் கணித்துவிட்டீர்கள்! சமயத்தில் நீங்களும் சரியாகத்தான் நடந்து கொள்கிறீர்கள்!"


"என்ன பிரச்சனை சொல்லு, கோமு. பா.மு.கழகத்தினர் உன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டு விட்டார்களா? நிதிச் சுமையா? யாரும் ஏமாறவில்லையா? உன் பாடகன் ஶ்ரீராம் சித்து விழாவுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டானா?"


"சே,சே...!" என்றவள், 'கணவரிடம் அபிஷியல் விஷயங்களைப் பகிர்வது தவறு' என்று முடிவு எடுத்தவளாக, "அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே! நான் ஏன் கலங்கப் போகிறேன்? எஸ்... எல்லா புகழும் இறைவனுக்கே...!" என்றாள்.


"இந்த வார்த்தையை ரகுமான் தம்பி இன்னைக்கு காலையில பேசுறப்போ அடிக்கடி சொன்னார்...!"


"எந்த ரகுமான்?"


"ஏ.ஆர். ரகுமான்...!" என்றார் தாத்தா சாதாரணமாக.

*****
ஸ்ரீமதி கண்ணாம்பாள் வழக்கத்தைவிட சற்று மேக்கப்பை அதிகமாகவே அப்பியிருந்தாள்.


"நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்...!" என்று டன் ஐஸ் கட்டியை அப்படியே தலையில் வைத்தாள் அகல்யா.


"பொய் சொல்லாதீங்க, அகல்யா. எனக்கு வெட்கமா இருக்கு...!"


"நீங்க ஏற்கனவே சிவந்த நிறம்தான். இப்போ குங்குமப்பூ நிறமா மாறிட்டீங்க. பர்தாவை இழுத்து மூடிட்டா, அச்சு அசல் ஆப்கானிஸ்தான் பீபி மாதிரியே இருப்பீங்கோ...!"


தனது பெரிய பற்களை காட்டிச் சிரித்த ஸ்ரீமதி சொன்னாள்: "நான் 18 வருஷம் ஆப்கானிஸ்தானில் இருந்தவள். பாஷையும் அத்துப்படி...!"


"அங்கே கஞ்சா செடிங்க வயல் இருக்குமாமே?" என்று அப்பாவியாகக் கேட்டாள் அகல்யா.


"ரஹ்மான் சாரை இம்ப்ரஸ் பண்றதுக்கு இந்த ஆப்கன் முன்னாள் தூதர் வேஷம் தவறில்லை. எதையும் சாதிக்கத் தலைவர்களின் தந்திரங்களில் இந்த ஆள்மாறாட்ட வித்தையும் ஒன்று. நினைத்ததை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்...!"


"இது ஒன்றே போதும், நீங்க பா.மு. க.வின் தலைவியாக ஆவதற்கு...!" - அகல்யா ஜிங்க் சக் ஜால்ரா அடிக்காத குறைதான்...!

*****
அன்பு மகன் அல்லா ரக்கா அமீன் ஒரு ராகத்தை கீபோர்டில் வாசித்துக் காட்ட, அப்பா ரஹ்மான் அனுபவித்து ரசித்தார். ராகத்தைவிட, மகன் வாசிப்பது மேல் அல்லவா? இருப்பினும் சிறு நெருடல் இருந்தது. அதனைச் சரி செய்ய கீபோர்ட்டில் ஒரு பாயிண்ட்டை அதிகமாக்கி, அதனை வெளிப்படுத்த உதவினார்.


"இல்லை அத்தா! இந்த இடம் ஸ்லோ பேத்தாஸ் சாங். அங்க திடீர்னு ஒலியை உயர்த்தினால், அச்சா... நஹி...!"


"வழக்கத்தை மீறுதல்தான் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கும். நெருப்பிலே சமைத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று எண்ணையை உணவில் ஊற்றி எரிய வைத்து சமைப்பது மாதிரி! எனிவே, யுவர்ஸ் ரிதம் ஈஸ் ரிமார்கபிள்! கீப் கன்டினியூ..." என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.


பி. ஏ. அவசரமாக ஓடி வந்தார்.


"சார் ஒரு சின்ன தவறு நடந்து விட்டது. ஆப்கான் முன்னாள் தூதர்க்கு இன்றைய தேதியில் இந்த நேரத்தில் சந்திக்க அப்பாயிட்மெண்ட் கொடுத்து இருந்தீர்கள். நான் அதை நினைவுப்படுத்த மறந்துட்டேன். மன்னிக்கணும்..."


"இப்போ என்ன வேணும் சொல்லுங்க? எனக்கு பத்து முப்பதுக்கு கமல் சாரோடு ஒரு சின்ன டிகாஷன் சாரி டிஸ்கஷன் இருக்கு...!"


"இப்போ மணி 10.05...! அந்த அம்மாவை ஐந்து நிமிடம் நீங்க சந்திக்கலாமா?"


"சரி உடனே வர சொல்லுங்க. இல்லை, நானே வந்து வரவேற்கிறேன்...!"
ரஹ்மான் பின்னால் ஓடினார் பி. ஏ .


ஸ்ரீமதி கண்ணாம்பாள் சற்று படபடப்பாகவே இருந்தாள். புதிய ஆப்கான் தூதர் அவதாரம்!


"அஸ்ஸலாமு அலைக்கும் சுதூர் மஸ்தா ரஹ்மான் சாஹிப்...!" என்று சலாமிட்டாள் ஆப்ரூ ஆராஷ் - ஶ்ரீமதியின் புதிய நாமகரணம்.


"சலாம் க யாம் டா சங்கர் ராஸ். எப்படி இருக்கீங்க...?"


"ரொம்ப நல்லா இருக்கேன் ரஹ்மான் அவர்களே..!" என்ற அந்த புர்கா போர்த்திய பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தார் இசைப் புயல்.


இ.பு.: அட தமிழ் அருமையா பேசுறீங்களே?


ஆ.ஆ.: மறக்க முடியுமா இந்தியாவை? தமிழ்நாட்டை? என் மூதாதையர் இங்கேதான் வண்ணாரப்பேட்டையில்தான் குடியிருந்தாங்க. என் அப்பா, அம்மாவைக் (ஆப்கன் அழகி!) காதலிச்சு ஆப்கானிஸ்தான் போனார். அங்கேயே கிரீன் கார்டு வாங்கியாச்சு. (கஞ்சா பயிரிட்டு அஞ்சா நெஞ்சராய் வாழ்ந்ததற்கு கிரீன் கார்டு!) அப்பா தமிழை மறக்கலை. அதனாலே தனது பிள்ளைகளுக்கும் (சின்னஞ்சிறிய வீடுகளையும் சேர்த்து 17 உருப்படிகள்) தமிழைப் பாலோடு புகட்டினார்...!


இ.பு.: கேட்கவே சிலிர்ப்பாக இருக்கு அம்மா...!


ஆ. ஆ.: இன்னொன்றையும் கேட்டால் டபுள் சிலிர்ப்பு அடைவீர்கள் இசைத் தம்பி. எந்த குடும்பத்தை முன்னேற்ற கஞ்சா வளர்த்து பெரிய ஆளானாரோ - நாட்டின் தூதுவராக - அவரையே எதிர்த்து நான் போராட, ஆப்கன் அரசு உத்தரவின் பேரில் எனது 18 வது வயதில் இந்தியாவுக்கு மறைமுகமாக நாடு கடத்தப்பட்டேன்...!


இ.பு.: மிகவும் சிலிர்ப்பாகத்தான் இருக்கு! இந்த சிச்சுவேஷனுக்கு ஆப்கானிஸ்தான் ரூபாப் வாத்தியத்தோடு வயலினை இணைத்து இசை எழுப்பினால் ஒரு வருடத்தை ஓட்டலாம்...!


ஆ. ஆ.: சிறப்பு. அதன் பிறகு இந்தியாவில் எனது கல்வியை முடித்தேன்; பட்டம் பெற்றேன். பிறகு, திருமணங்கள் செய்து குழந்தைகள் பெற்றேன். எனது சமூக சிந்தனை எனது திருமணத்திற்கு பின் கூட தொடர்ந்தது. இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்தேன். பின்னர் முழுநேர சமூக சிந்தனாவாதியாகி பாடுபட்டு வருகிறேன். தற்பொழுது தமிழக பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர உறுப்பினராகி, போராட்டத்தைத் தொடர்கிறேன்.

இ.பு.: சபாஷ்...! உங்களை நான் கடவுளுக்குப் பிறகு ரொம்ப மதிக்கிறேன்...!


ஆ. ஆ.: மிகவும் நன்றி. எனக்கு தங்களிடம் ஒரு பேருதவி வேண்டும். நாங்கள் சீனியர் பாட்டிசன்ஸ் எல்லாம் சேர்ந்து எங்கள் கழக ஆண்டு விழாவில் ஒரு நல்ல காரியத்திற்காக இசை சங்கமம் ஒன்று நடத்துகிறோம். மதிப்பிற்குரிய சித் ஸ்ரீராம் வருகிறார். பாடுகிறார்! இது எங்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்வு. அவருக்கும் ஆச்சரியத்தை ஊட்டும்படி உங்கள் சர்ப்ரைஸ் வருகையும் வாழ்த்தும் தேவை. ஐந்தே நிமிடங்கள் ஒதுக்கினால் நாங்கள் இதுவரை வாழ்ந்ததின் அர்த்தத்தை உணர்வோம் ரஹ்மான் ஜீ. இதற்காக உங்கள் நல்ல காரியங்களுக்குப் பயன்படுமென்று கருதினால், என் பர்சனல் நிதியிலிருந்து இயன்ற தொகை வழங்கவும் தயாராக உள்ளேன். ஐந்தே நிமிடங்கள் போதும்...!


இ.பு.: நிச்சயமாக. தேதி?


(அட்டகாசம் தொடரும்...)