தொடர்கள்
ஆன்மீகம்
திருமணத் தடை நீக்கும் உப்பூர் வெயிலுகந்த விநாயகர்!! - ஆரூர் சுந்தரசேகர்.

  Uppur Veilukanda Ganesha will remove the ban on marriage!!


தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் உப்பூர் கிராமத்தில் வெயிலுக்கு உகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. முன்பு இந்த கிராமம் லவணபுரம் என அழைக்கப்பட்டது. லவனம் என்பதற்குத் தமிழில் உப்பு என்று பொருள். இதிலிருந்து உப்பூர் எனப் பெயர் வந்தது.
சூரியபகவானால் வணங்கப்பட்டதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவவிமோசனபுரம் ஆகிய பெயர்களும் வந்தன. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் இங்கு இருந்ததால் வன்னிமந்தாராவனம் எனவும் அழைக்கப்பட்டது.

ஸ்தல வரலாறு:
தட்சன், தன்னை வணங்காத சிவபெருமானை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து தேவர்களையும் அழைத்து யாகத்தை நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்ட சூரிய பகவான் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார். தன் தவற்றுக்குப் பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், அலைந்து திரிந்து, திருப்புனவாயில், தேவிபுரம் (இன்றைய தேவிபட்டினம்) வன்னி மற்றும் மந்தார மரங்களின் காடாக இருந்த கடலுக்கு அருகில் உள்ள இந்த இடத்தை அடைந்து, தவமிருந்தார். சூரியனின் தவத்தை கண்டு மகிழ்ந்த விநாயகர் அவருடைய பாவம் போக்க அருளினார். சூரியன் தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு, தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார். அதன்படி, வருடத்தின் ஒவ்வொரு நாளும் தட்சிணாயனத்தின் போது தெற்கிலிருந்தும் உத்தராயணத்தின் போது வடக்கிலிருந்தும் இவர் மீது சூரிய ஒளி படுகிறது. இதனால் இவருக்கு வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

ஸ்தல அமைப்பு:

  Uppur Veilukanda Ganesha will remove the ban on marriage!!


கோயில் நுழைவாயில் மண்டபத்தின் மேலே ஒரு வரவேற்பு வளைவு கடந்ததும் ஒரு துவஜஸ்தம்பம் உள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு பலி பீடம் மற்றும் மூஷிகம், பின்னர் மகா மண்டபத்தில் மூலவராக விநாயகர் உள்ளார். ஆண்டு முழுவதும் மூலவர் சிலை மீது சூரிய கதிர் படும் வகையில் இங்கு சந்நிதி அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் உள்ள குபேர மூலையில் சித்தி, புத்தி சமேத விநாயகர் சந்நிதி உள்ளன. பிரகாரத்தில் தனி விநாயகர், விசாலாட்சி அம்மனுடன் விஸ்வநாதர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், பைரவர், சனீஸ்வரன், சூரியன் ஆகியோருடன் சிவபெருமானுக்குத் தனி சந்நிதி உள்ளது.
ஸ்தல தீர்த்தமாகச் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், லெட்சுமி தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்தல சிறப்பு:

  Uppur Veilukanda Ganesha will remove the ban on marriage!!


ஆஞ்சநேயர் மூலம் சீதை சிறைபிடிக்கப்பட்ட இடத்தை இராமர் அறிந்ததும், அவர் தனது வானரப் படையுடன் பிரச்ரவண மலையிலிருந்து கிழக்குக் கடற்கரை வழியாக வன்னியக்காடுகளுக்குப் புறப்பட்டார். அமைதியான சூழலில் வெயில் உகந்த விநாயகரை வணங்கி, தனது முயற்சியில் வெற்றிபெற அருள்பாலித்து, சேதுக்கரை நோக்கிச் சென்றார்.
தமிழகத்தில் விநாயகர் என்றால் பிரம்மச்சாரி, ஆனால் இங்கு உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் தனது மனைவிகளான சித்தி, புத்தியுடன் காட்சி தருகிறார். இவரது திருமணக்கோலத்தைத் தரிசித்தால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்:
இந்த கோயிலில் விநாயக சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் , காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விநாயக சதுர்த்திக்குப் பின்னர், சித்தி, புத்தி ஆகியோருடன் விநாயகருக்கு இத்தலத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

  Uppur Veilukanda Ganesha will remove the ban on marriage!!

பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
திருமணத்தடை நீங்க, குழந்தைப் பேறு பெற, கல்வியில் சிறந்து விளங்கப் பக்தர்கள் வெயிலுகந்த விநாயகரை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்தும், வஸ்திரங்களை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கோவில் திறந்திருக்கும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
தொண்டியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 20 கிமீ தொலைவிலும், இராமநாதபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள உப்பூர் அமைந்துள்ளது
இராமநாதபுரத்தில் இருந்து தொண்டி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளில் சென்று தேவிபட்டினம் தாண்டி உப்பூர் என்ற ஊரில் இறங்கவேண்டும்

திருமணத் தடை நீக்கும் உப்பூர் வெயிலுகந்த விநாயகரைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!