தொடர்கள்
ஆன்மீகம்
அட்சய திருதியை மகிமை!! - ஆரூர் சுந்தரசேகர்.

Glory to Akshaya Trithi!!


அட்சயா” என்றால் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது என்று பொருள், மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் அற்புத நாளாகும்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை ‘அட்சயதிருதியை’ திருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.
இந்தாண்டு மே 10ம் தேதி காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திருதியை திதி உள்ளது. மகாலட்சுமிக்கு உகந்த மங்களகரமான வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது. திருதியை திதியில் என்ன செய்தாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம். அதனால் தான் தங்கம் அதிகமாகச் சேர வேண்டும் என்பதற்காக இந்த நாளில் மக்கள் தங்கத்தை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதோடு தங்கம், வெள்ளி மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது.

புராணத்தில் அட்சய திருதியை:
பிரம்மா படைக்கும் தொழிலை ஆரம்பித்ததும், திருமாலின் அவதாரமான பரசுராமர் அவதரித்ததும், ஸ்ரீ அன்னபூரணியிடம் சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு பிட்சைப் பெற்றதும் அட்சய திருதியையில்தான்.
கிருஷ்ணனுக்கு, அவல் கொடுத்து குசேலன் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றது, பஞ்ச பாண்டவர்கள் சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தைப் பெற்றது, திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் ஆடையை வளரச் செய்ததும் இந்த அட்சய திருதியை நாளன்றுதான்.
திரேதா யுகம் தொடங்கிய நாள், குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம், பகீரதன் தவம் செய்து கங்கையைப் பூமிக்கு வரவழைத்ததும் இந்நாளில்தான்.
வேத வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்ததும், ஆதி சங்கரர் செல்வத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஸ்லோகமாகிய கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றியதும் இந்த திருநாளில்தான்.

வடமாநிலங்களில் அட்சய திருதியை:
வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்வார்கள். ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்டச் சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. பீகார், உத்தரப்பிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தான் தொடங்குவார்கள். ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். சமணர்கள் இந்த நாளை “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.

வழிபாடுகள்:

Glory to Akshaya Trithi!!


அட்சய திருதியை அன்று லட்சுமி பூஜை மற்றும் குபேர பூஜையைச் செய்ய ஐஸ்வர்யம் பெருகும் என்றும் அதை செய்ய இயலாதவர்கள், “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:” என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர். அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, சுவாமி படத்தின் முன்பாக சிறிய தொகையை வைத்து வழிபாடு செய்யலாம். அட்சய திருதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். வசதி உள்ளவர்கள் வாங்கலாம். வசதி இல்லாதவர்கள் உப்பு, மஞ்சள், நெல், அரிசி ஆகியவற்றை வாங்கி லட்சுமி படத்திற்கு முன் வைத்து வழிபடலாம். மேலும் அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

நீரின்றி அமையாது உலகு: அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறையத் தண்ணீரைப் பூஜையறையில் வைத்து நம் எல்லோருக்கும் குறைவில்லாத தண்ணீர் கிடைக்கவும் நல்ல மழை பொழிந்து ஆறு குளம் குட்டை ஏரி எல்லாம் நீர் நிரம்பி விவசாயம் செழிக்கப் பிரார்த்தனை செய்யலாம்.

Glory to Akshaya Trithi!!

அட்சய திருதியை நாளில் செய்யக் கூடியவை:
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்று பண்டைய தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்நாளில் படிப்பைத் தொடங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்ல பலனளிக்கும் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, வைர நகைகள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்கவும் உகந்த நாளாகும். இதைத் தவிரப் பூமி பூஜை போடுவதற்கும் புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற நாள். தொட்டதெல்லாம் துலங்கும் இந்த நன்னாளில், வெறும் பொருள் சேர்க்கையை மட்டும் மனதில் கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் வசதியற்றவர்களுக்கும் நம்மால் முடிந்த தான தர்மங்களைச் செய்வது தான் உண்மையான அட்சய திருதியை.

இந்நன்னாளில் நம் அனைவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கப் பிரார்த்தனை செய்வோம்.!!