தொடர்கள்
follow-up
உடும்பு தோல்  கஞ்சிராக்கள் பறிமுதல் - ப ஒப்பிலி  

சென்னை மாவட்ட வனத்துறை அதிகாரிகள், தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இசை கருவிகள் விற்பனை செய்யும் இரண்டு கடைகளில் சோதனை செய்தனர். அப்போது உடும்பு தோலினால் செய்யப்பட்ட கஞ்சிராக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடையில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் மொத்தம் 300 உடும்பு தோல்கள் பிடிபட்டன. அதில் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து மட்டும் 200 தோல்கள் வந்துள்ளன.மீதமுள்ள 100 தோல்களும் சென்னையிலிருந்து.

20240403143008135.jpg

சென்னை மாவட்ட வன அலுவலர் வ அ சரவணன் கூறும்பொழுது தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் உடும்புகளை பிடித்து அதன் தோலையும் உடல் உறுப்புகளையும் தனித்தனியாக வெட்டி எடுத்து விடுவார்கள். பிறகு தோலை கஞ்சிரா செய்வதற்கும், உடல் உறுப்பு மற்றும் இரத்தத்தை, மாமிசம் உண்பவர்களுக்கும் விற்றுவிடுவார்கள். பெங்களூரு போன்ற நகரங்களில் உடும்பு ரத்தத்திற்கும், அதன் மாமிசத்திற்கும் ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. அதனால் அதிக விலை கொடுத்து உடும்புக் கறியும் ரத்தமும் வாங்க ஆட்கள் உள்ளதால் பெரும்பாலும் கறியும், ரத்தமும் பெங்களூருவுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, என்றார் அவர்.

தஞ்சையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆடுதுறையை சேர்ந்த முஹம்மது முஸ்தபா என்ற 71 வயதான ஒருவர் தான் முக்கிய குற்றவாளியாக வனத்துறையால் கண்டறியப்பட்டு சிறைசெய்யப்பட்டார் . அவரிடமிருந்து மட்டும் 200 உடும்பு தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர சென்னையில் 24 கஞ்சிராக்களும், சிறிய அளவிலான உடும்பு தோல்களும் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன, என்கிறார் எஸ் கிருஷ்ணசாமி, தமிழக வனவிலங்கு குற்றங்கள் தடுப்பு பிரிவு உதவி வன பாதுகாவலர்.

20240403143046338.jpg

உடும்புகள் இந்திய வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் (1972) அட்டவணை ஒன்றின் கீழ் பாதுகாக்கப்படும் ஒரு விலங்கினம். யானை, புலிகள், சிறுத்தைகள் ஆகியவற்றை வேட்டையாடுவது அல்லது துன்புறுத்துவது எந்த அளவுக்கு கடுமையாக பார்க்கப்படுமோ, அதே அளவுகோல்தான் உடும்புக்கும் பொருந்தும்.

திருத்தப்பட்ட வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி முதல் முறை இந்த வகையிலான குற்றம் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அது தவிர ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் உண்டு. இருந்தும் இந்த வகை விலங்கினங்களின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு காரணம் வனங்களில் இந்த விலங்கினங்களின் எண்ணிக்கை எவ்வளவு, அதற்கு உகந்த இடங்கள் எவை எவை என்பது குறித்து ஒரு விதமான தரவுகளும் இல்லை. மேலும் தொடர்ந்து இந்த விலங்குகள் வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது இயற்கை சூழலியலில் ஒரு சம நிலையற்ற தன்மையை உருவாக்கும் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
உடும்பு தோலினால் செய்யப்படும் ஒரு கஞ்சிராவின் விலை ரூபாய் 1,800 மட்டுமே. சில கஞ்சிராக்களை செய்வதற்கு நூற்றுக்கணக்கான உடும்புகள் அழிக்கப்படுவது அநாகரீகத்தின் உச்சக்கட்டம், என்கின்றனர் விலங்கின ஆராய்ச்சியாளர்கள்.

20240403142930493.jpg

சில வருடங்களுக்கு முன்னர் பைபர் இழைகளைக் கொண்டு கஞ்சிராக்கள் செய்ய முடியும் என்று ஒரு சில இசை கலைஞர்கள் நிரூபித்தனர். எனவே அந்த மாதிரியான செயற்கை இழைகளை கொண்டு கஞ்சிராக்களை செய்யப்பட்டால் , உடும்புகளை வேட்டையாடுவது பெரிய அளவில் தடுக்கப்படலாம் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.