நல்ல யோசனை...
அரசியலமைப்பு சாசன தின விழாவில் பிரதமர் காணொளி மூலம் பேசும்போது “நமது ஜனநாயகத்தை வலிமைப் படுத்துவதாக தேர்தல் இருக்கும்போது, நாட்டு நலனை கருத்தில் கொண்டு அவற்றில் சில சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டியது அவசியம். இந்தியாவில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஏதேனும் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது.. இதனால் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது. இது மக்களை நேரடியாக பாதிக்கிறது. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டிய அவசியம். அதாவது நாடாளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்து தேர்தல் என அனைத்தும் ஒரே வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். இது விவாதம் செய்ய வேண்டிய விஷயம் அல்ல... இந்தியாவுக்கு உடனடியாக தேவைப்படுகின்ற அம்சம் என்பதை நாம் உணர வேண்டும். இது தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க உதவும்” என்று கூறியுள்ளார்.
1971 வரை நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே சமயத்தில்தான் தேர்தல் நடந்தது. மாநில ஆட்சிக் கவிழ்ப்பு, மாநில ஆட்சி டிஸ்மிஸ் போன்ற சில அரசியல் காரணங்களால் தான் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாமல் போனது. இதற்குக் காரணம் மக்கள் அல்ல... அரசியல் தலைவர்கள் தான்.
இந்தியாவைப் பொருத்தவரை தேர்தல் என்பது பணம் சம்பந்தப்பட்டது, செல்வாக்கு சம்பந்தப்பட்டது என்றாகிவிட்டது. ஜனநாயகம் இதன்மூலம் பின்னுக்கு தள்ளப்படுகிறது. கட்சித் தலைமையே கூட ‘உங்களை வேட்பாளர் ஆக்கினால் எவ்வளவு செலவு செய்ய முடியும்?’ என்று விருப்ப மனுவில் ஒரு கேள்வியாகவே வைத்திருக்கிறது. ஓட்டுக்கு பணம் என்பது இப்போது பழக்க வழக்கம் ஆகி விட்டது. இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நல்ல விஷயம் தான்.
எல்லா தேர்தலும், ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடந்தால், தேசிய தலைவர்கள் எல்லாம் மாநிலங்கள் மீதும் அக்கறை காட்டி, அவர்கள் தேர்தல் வாக்குறுதி இருக்கும், மாநில கட்சிகளின் பார்வையும் தேசிய அளவில் விரிவடையும். இதன் மூலம் ஒரு கட்சி ஆட்சி என்பது போய், கூட்டணி ஆட்சி என்பது மத்திய, மாநில, பஞ்சாயத்து அளவில் கூட தவிர்க்க முடியாதது என்று ஆகிவிடும். எனவே எந்தக் கட்சியும், தங்கள் இஷ்டம் போல் ஆட்சி செய்ய முடியாது. இதன் மூலம் தேர்தல் செலவுகளும் பெருமளவில் மிச்சமாகும்.
ஆக, இது நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டிய நல்ல யோசனையே!.
Leave a comment
Upload