தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

டெலிபோன்..... தொலைபேசி...... செல்பேசி......

20201101174051272.jpeg

“ஏங்க என் செல்போனை எங்கேயோ மறதியாக வெச்சுட்டேன், எங்கனு பாருங்க..” - இது என் மனைவி தினந்தோறும் செய்யச் சொல்லும் பணிகளில் ஒன்று. இது கட்டளை இல்ல... ஆனா, கட்டளை தான். காரணம், “நீ எங்கே வெச்சே காணமே” என்று நான் அலுக்கும் குரலில் சொன்னா...” இது ஒரு பதிலா... உங்க போன்ல இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால், அது இருக்கிற இடம் தெரியப்போகிறது” என்பாள். நானும் உடனே மிஸ்டு கால் விட்டவுடன், செல்பேசி அவள் பின்னாலிருந்து குரல் கொடுக்கும். எனக்கு முன்பு அவள் முந்திக்கொண்டு “பின்னாலேதான் இருக்கு... இதுக்கு எதுக்கு ரூம் ரூமா அலைஞ்சிங்க” என்று அலுத்துக் கொள்வாள். இது அடிக்கடி நடக்கும். நானும் மிஸ்டு கால் விடாமல், அவள் செல்பேசியை கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போய்க்கொண்டே இருக்கேன். மிஸ்டு கால் தான் அவள் செல்பேசி இருக்கும் இடத்தை காட்டித்தரும்.

அறுபதுகளில், டெலிபோன் பணக்காரர்களுக்கு உரிய சாதனம். நாலு தெருவுக்கு ஒரு டெலிபோன் இருந்தால் அது அபூர்வம். அப்போதெல்லாம் டெலிபோன் இணைப்புக்கு விண்ணப்பித்தால், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. கிராமங்களில் மிகப்பெரிய நிலச்சுவான்தார் வீட்டில் தான் இருக்கும். அது அந்த கிராமத்தின் அதிசயம்.

அப்போது தபால் துறையும், தொலைபேசி இலாகாவும் ஒரே துறை தான்.

டெலிபோன் வைத்திருப்பவர் யாருடனாவது தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், டெலிபோன் எக்சேஞ்ச் எனப்படும் டெலிபோன் இணைப்பகததற்கு தொடர்புகொண்டு நாம் பேச விரும்பும் டெலிபோன் எண்ணை சொல்லவேண்டும். சிறிது நேரம் கழித்து ட்ரிங் ட்ரிங் என்று நமது டெலிபோன் ஒலிக்கும், தொலைபேசி இணைப்பு அதிலிருந்து ஒரு ஊழியர் நீங்கள் கேட்ட டெலிபோன் எண்ணுடன் இணைத்து இருக்கிறேன், பேசுங்கள் என்பார். மூன்று நிமிடம் கழித்து, மூன்று நிமிடம் ஆகிவிட்டது என்று குறிக்கிட்டு சொல்வார். நாம் தொடர்ந்து பேச விரும்புகிறோம் என்று சொன்னால், இணைப்பு தொடரும். இதில் லைட்னிங் கால் என்று ஒரு வசதியும் உண்டு, அதற்கு சேவை கட்டணம் ஜாஸ்தி.

அதன் பிறகு நாமே நாம் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணுக்கு நேரடியாக தொடர்புகொண்டு பேசும் வசதி அறிமுகமானது. கார்ட்லஸ் போன் எனப்படும், நடந்து கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு, படுத்துக்கொண்டு பேசும் தொலைபேசி சாதனம் வந்தது. கூடவே போனை எடுக்காமல், ஸ்பீக்கர் போட்டு பேசும் வசதியுள்ள நவீன டெலிபோன் அறிமுகமானது. இதில் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மனைவிக்குப் பிடிக்காத யாருடனாவது நாம் பேசினால் சிக்கிக் கொள்வோம். தொலைபேசி இணைப்பு மாதக்கணக்கில் என்பது போய், வாரக்கணக்கில் இணைப்பு கிடைக்கும் வசதி வந்தது. தற்போது விண்ணப்பித்த அன்றே இணைப்பு கிடைக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

அதன் பிறகு தெருவுக்குத் தெரு எஸ்டிடி பூத் என்று தொலைபேசி சாதனம் ஒரு சிறு தொழில் என்று ஆனது. சில வீடுகளில் கூட இந்த வசதி மூலம் பணம் பண்ணினார்கள்.

அதன் பிறகு, தொலைத்தொடர்பு தனியார் மயமானது. செல்பேசி அறிமுகமானது, செல்பேசி முதலில் பணக்காரர்கள் சொத்தாகவே இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் தான் செல்பேசியை சாமானியனுக்கு கொண்டு சென்றது. ஒரு முறை இரவு ஒன்பது மணிக்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி அமர்ந்தேன். மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண் தெரியாத ஒரு தம்பதிகள் பிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்கள். ரயிலில் வந்தவர்கள் பெரும்பாலோர் களைத்துப்போய் அமைதியாக இருந்தார்கள். அப்போது திடீரென செல்பேசி ஒலித்தது, பிச்சைக்காரர் எடுத்தார்... “மீனம்பாக்கம் வந்துட்டோம், இன்னும் ரெண்டு ஸ்டேஷன் தான். ராத்திரி என்ன சாப்பாடு” என்று கேட்டார். பிறகு, “தொட்டுக்க அப்பளம் வறுத்துடு” என்று சொல்லி செல்பேசியை அணைத்தார்.

செல்பேசி வந்ததும் நமது தொடர்பு இல்லை விரிந்தது. செல்பேசி அறிமுகமாவதற்கு முன் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களுக்கு உறவினர் வீட்டுக்குச் சென்று வருவோம். செல்பேசிக்கு பிறகு தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து எல்லாம் செல்பேசி மூலமே பரிமாறிக் கொள்கிறோம்.

குட் மார்னிங், நாட்டு நடப்பு எல்லாம் செல்பேசி மூலமே நமக்கு கிடைக்கிறது.

செல்பேசியில் உள்ள யூ டியூப் மூலம்... அதிரசம் செய்வது, பொரி உருண்டை, பில்டர் காபி, சாதம் வடிப்பது, துவையல் என்று எல்லாம் என் மனைவி செய்து, கோவிட் தடுப்பு ஊசி போட்டு பரிசோதனை செய்யும் எலியைப் போல் முதலில் என்னை சாப்பிட சொல்லி கையில் கரண்டியுடன் “நல்லா இருக்கா” என்று கேட்பார். நானும் வேறுவழியின்றி நல்லா இருக்கு என்பேன். அதன்பிறகு அது ஊர் பூரா புகைப்பட ஆதாரத்துடன் பார்வேர்ட் ஆகும்.

நாம் ஏழு எட்டு வாட்ஸ்அப் குரூப்பில் இருந்தால், அவ்வளவுதான் இவர்கள் அலப்பறை தாங்க முடியாது. ஒரே மெசேஜ், எல்லா குழுவிலும் பார்வேர்ட் ஆகும். சில சமயம் ஒரே மெசேஜ் ஒரே குரூப்பில் இருப்பவர்கள் அனுப்பும் தண்டனையும், நாம் அனுபவிக்க நேரிடும். வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பார்கள் பெரும்பாலும் அந்த மெசேஜ் எதையும் படிப்பதில்லை என்பதுதான் உண்மை. சில பேர் உஷாராக எல்லா மெசேஜும் படிப்பார்கள் போலிருக்கிறது. இது ஏற்கனவே ஃபார்வேர்டு ஆனது. இது டூப் அல்லது ரொம்பவும் பழசு என்று தங்கள் கருத்தை பதிவு செய்வார்கள். நாம் வேறுவழியின்றி சாரி அல்லது கும்பிடு ஸ்டிக்கர் போட்டு அசடு வழிய வேண்டும்.

சில சமயம், ஒரு நம்பர் தவறாக போட்டுவிட்டு “ஏம்பா வரேன் வரேன்னு சொல்லிக்கிட்டு இருக்க... ஆனா வரமாட்டேங்கிற பணத்தை தர மாதிரி ஐடியா இல்லையா” எதிர்முனையில் இருந்து கோபமாக கேட்பார்கள். நாம் பொறுமையாக, அவரிடம் “ராங் நம்பர் நீங்க போட்டது” என்றதும்... “அப்படியா உங்க நம்பர் என்ன? நீங்க யாரு? எந்த ஊரு?” என்று நம்மையே சந்தேகத்துடன் விசாரிப்பார்கள். சில சமயம், அவரே மறுபடியும் போன் செய்து, அதே டயலாக்கை ஆரம்பிப்பார். “நீங்க மறுபடியும் ராங் நம்பர் தான் போட்டிருக்கீங்க” என்றதும்... “அவன் ராங் நம்பர் தந்துட்டான் போல இருக்கு” என்று அவருக்கு அவரே பேசிக்கொண்டு இணைப்பை துண்டித்துக் கொள்வார்.

வண்டி ஓட்டும் போது செல் பேசாதீர்கள் என்று ஆட்டோ பின்புறம் எழுதி வைத்துவிட்டு, ஆட்டோ ஓட்டுனர்கள் செல்பேசி பேசிக் கொண்டுதான் பெரும்பாலோர் ஆட்டோ ஓட்டுகிறார்கள். கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் ஓட்டுபவர்கள் செல்பேசி பேசக்கூடாது என்பது சட்டமே ஆகிவிட்டது. இருந்தாலும் அந்தத் தவறை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனால் மிகப்பெரிய விபத்துக்கள் நடந்தாலும், இன்றுவரை இந்த தவறு தொடர்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இந்த நவீன உலகில் வரமா, சாபமா என்பது இப்போதைக்கு விவாதத்துக்குரிய ஒரு விஷயம்.