அமெரிக்கா
இந்த வாரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபர் ஜோ பைடன் தன்னுடைய நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது லேசாக சறுக்கி விட்டு காலில் மயிரிழை எலும்பு முறிவு ஆனது சாதாரண செய்தியல்ல.
இதற்குப் பின் ஒரு சரித்திரமே இருக்கிறது.
(அதிபர் பைடன் நாய்களுடன்......)
எப்படி ??
டிரம்ப் அதிபராகும் போது 100 ஆண்டுகளுக்கு பின் வெள்ளை மாளிகையில் நாயில்லாமல் குடியேறிய முதல் அதிபர் டிரம்ப் தானாம். ஒபாமா வரை அத்தனை அதிபர்களும் நாய் வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
டிரம்பிடம் அவரது ஆதரவாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் ஒரு வளர்ப்பு நாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று. அதற்கு டிரம்ப் ஏன் என்று கேட்க அப்போது தான் மக்களுக்கு உங்கள் மேல் ஒரு இமேஜ் வரும் அரசியல் ரீதியாக அது ஒரு பிம்பம் தரும் என்றார்களாம்.
அதற்கு டிரம்ப் நான் என் மக்களுடன் வைத்துக் கொண்டிருக்கும் உறவு இதையெல்லாம் தாண்டியது. தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் இந்த முறை தேர்தல் பரப்புரையின் போது பைடனுடன் அவரது நாயையும் புகைப்படத்தில் போட்டு விளம்பரப்படுத்தியவர்கள் இப்படி எழுதியிருந்தார்கள். வெள்ளை மாளிகைக்கு மனிதத்தன்மை உள்ள ஒருவரை தேர்ந்தெடுங்கள். எப்படி ?? நாய் தான் அரசியல் தலைவரயும் தீர்மானிக்கிறது.
அமெரிக்க வெள்ளை மாளிகை மட்டுமல்ல.. உலகத் தலைவர்களே நாய் பிரியர்கள் தான்.
பின்லாந்து அதிபர் சவூலி
ரஷ்ய அதிபர் புடின்...
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் 2002ல்...
இளவரசர் பிரின்ஸ் ஐயர்லாந்து அதிபரை சந்திக்கும் போது...
மிஷேல் ஒபாமா நாய்களுடன்.....
பத்திரிகைகள் இப்படி எழுதுகின்றன. அதென்னவோ தெரியவில்லை நாய்களுடன் இருக்கும் போது தலைவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். அவர்களின் கடின முகம் மாறுகிறது.
அட வெளியூர் தலைவர்களை விடுங்கள்.
நம்ம கழக உடன்பிறப்புக்கள் இப்போது கேட்டால் பைடனால் ஒரு நாயைக் கூட ஒழுங்காக கொஞ்ச முடியவில்லை. எங்க தலைவர் கடைசி வரை நாயுடன் இருந்தாலும் அடிகிடி பட்டுக்காமல் வைத்துக் கொள்ளவில்லையா என்று பெருமையுடன் கேட்பார்கள்.
( இதில் நமக்கு என்ன பெருமை என்னவென்றால் இந்த புகைப்பட பேட்டி எடுத்தது இன்றைய விகடகவியின் துணையாசிரியர் சுபா வெங்கட். கேமரா நமது ஒளிப்பதிவாளர் கோ.சிவபெருமாள். மாப்பிள்ளை இவரு தான் சட்டை என்னுது மாதிரி கருணாநிதி கையில் இருக்கும் காமிரா மேப்ஸுடையது)
இப்போது புரிகிறதா ? கட்சிக்காரர் ஒருவரை ஏதோ ‘நாய்’ என்று திட்டி விட்டதால் யாருமே ஏன் பொங்கவில்லை என்று கேட்பவர்களுக்கு அதை விட அன்பாகவும் செல்லமாகவும் யாரும் தமது தொண்டரை அழைக்க முடியாது என்று ????
ஆசியா
இந்தோனேஷியா
கடந்த செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவில் லயன் ஏர் ஒன்று விமானம் தரையிறங்கும் போது ஓடு தளத்தை விட்டு விலகி சரலென பக்கவாட்டில் சென்று நின்றது.
நல்ல வேளையாக பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்ததில் இந்த வாரம் அதன் அறிக்கை வெளி வந்திருக்கிறது.
விமானத்தில் கோளாறு எதுவும் இல்லையாம்.
என்ன காரணம் என்று ஆராயந்தால் 307 பயணிகள் மற்றும் 11 விமான சிப்பந்திகளுடன் பறந்த அந்த விமானத்தை ஓட்டிய விமானி கடந்த 90 நாட்களில் வெறும் மூன்று மணி நேரங்கள் தான் விமானத்தை இயக்கியிருந்தாரம்.
கரோனா காலத்தில் இது ஒரு பிரச்சினை தான்.
அதாவது பாடப் பாட ராகம் என்பது போல விமானிகள் எத்தனை மணி நேரம் விமானம் இயக்கும் நேரத்தை பதிவு செய்கிறார்களோ அத்தனை நேரம் அவர் அனுபவசாலி என்று கொள்ளலாம்.
இப்போது விமானங்கள் அனைத்தும் தரையிறங்கியிருக்கும் நேரத்தில் விமானிகளுக்கு போதிய பறக்கும் நேரம் இல்லாமை ஒரு குறைதான்.
விமானம் மட்டுமல்ல விமானிகளும் பறக்காமல் இருந்தால் துருப்பிடித்துப் போய் விடுவார்கள் என்கிறார்கள் விற்பன்னர்கள்.
பறக்கமால் இருப்பது, வேலை பற்றிய கவலை, பொருளாதார நெருக்கடி, போதிய பயிற்சியின்மை இவையெல்லாமும் கூட தற்போதைய விமான தொழிலில் விமானிகளைச் சார்ந்த ஒரு பெருங்கவலை.
கரோனாவெல்லாம் ஒழிந்து விட்டாலும் ஒரு ஆறு மாதம் அத்தனை பேரையும் பறக்க விட்டு அதற்குப் பின் தான் விமானம் ஏற வேண்டும் போல…..
ஆப்பிரிக்கா
ஜாம்பியா
சி.எஸ்.ஆர் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதன் படி ( கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி ) பல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களால் ஆன பொதுச் சேவையை செய்து வருகின்றன.
இதில் எத்தனை நிறுவனங்கள் கணக்கு காட்டுவதற்காக செய்கிறார்கள் என்பதெல்லாம் விவாதமல்ல.
ஆப்பிள் ஆப்பிரிக்காவின் ஜாம்பியா சுகாதார அமைச்சகத்திற்கு லட்சக்கணக்கான பாதுகாப்பு கவசங்களை நன்கொடையாக கொடுத்திருக்கிறது.
2006 பிராடக்ட் ரெட் என்ற விஷயத்தை துவக்கியது ஆப்பிள் நிறுவனம். ஒரு சில குறிப்பிட்ட சாதனங்களை சிவப்பு வண்ணத்தில் வெளியிட்டு அதை பிராடக்ட் ரெட் என்று அறிமுகப்படுத்தியது. அதில் வரும் லாபத்தை இது போன்ற பொது சமூகத் தேவைகளுக்காக செலவிடுவது ஆப்பிளின் திட்டம்.
அதன் படி இது வரை உலக ஏய்ட்ஸ் தொண்டிற்காக 250 மில்லியன் டாலர்களை நன்கொடையாக சேர்த்துள்ளது ஆப்பிள்.
ஆப்பிள் வடிவமைத்த முகக் கவசம் மற்றும் தருவித்த முகமூடிகளையும் தான் தற்போது ஜாம்பியா நாட்டிற்கு கொடுத்துள்ளது அந்நிறுவனம்.
சரி நம்ம சம்பாத்தியத்தில் பாதியை ஆப்பிள் உருவறாய்ங்களே என்று ஒரு பக்கம் வருத்தப்பட்டாலும் இது போன்ற சமூக சேவையில் கடலில் ஒரு துளி போல நம்ம பங்கும் இருக்கிறது என்று ஆப்பிள் ரசிகர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
ஐரோப்பா
கால்பந்து உலகம்
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு மதம்.
நமக்கெல்லாம் கால்பந்து ஆவறதில்லை. ஆனாலும் என்னைப் போன்ற பெரும்பாலான பேர்வழிகளுக்கு நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரும் கால்பந்து உலகக் கோப்பை சமயத்தில் மட்டும் கால்பந்து பேல் ஒரு காதல் வரும்.
கால்பந்து பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த விளையாட்டு வீரர்களை விட அவர்கள் கூடவே ஓடும் நடுவர்கள் மீது தான் ஆச்சரியம் வரும்.
நம்மாளுங்க கிரிக்கெட்டில் பின்னே கைகட்டிக் கொண்டு ஒய்யார சுவரூபமாய் நடுவ வேலை செய்து கொண்டிருக்க பாவம் கால்பந்து நடுவர்கள் இந்த ஓட்டம் ஓட வேண்டியிருக்கிறதே எப்படி முடிகிறது என்று ஒவ்வொரு கால்பந்து போட்டியும் நடுவர்கள் மீது ஆச்சரியத்தை வரவழைக்கும்.
இன்று செய்தி என்னவெனில் ஆண்கள் கால்பந்தாட்ட போட்டியில் பெண் நடுவர்கள் இது வரை இல்லை.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஸ்டிஃபனி ஃப்ரப்பார்ட் என்பவர் ஆண்களின் சாம்பியன் லீக் போட்டியில் முதல் முறையாக நடுவராக இருக்கப் (ஓடப்) போகிறார்.
36 வயதான ஸ்டிஃபனி 2019லேயெ சூப்பர் கப் போட்டியில் நடுவராக வந்து விட்டார். லிவர்பூலுக்கும் செல்சீக்கும் நடந்த போட்டியில் நடுவராக களம் இறங்கிய ஸ்டிஃபனி அப்போதே ஐரோப்பா கப்பிலும் நடுவராக இருந்தார்.
இப்போது சாம்பியன் லீக்.
ஐரோப்பிய கிளப் போட்டிகளில் ஒரு பெண் நடுவராக தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறையாம்.
அப்படியே அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபராகும் நாளும் வெகு தூரத்தில் இல்லை.
அடுத்த முறை கால்பந்து போட்டிகள் ஏதேனும் பார்க்க நேர்ந்தால் அந்த நடுவர்களையும் ஒரு விசை கவனியுங்கள். வீரர்களுக்கு நிகரான உடல்வலிமை அவர்களுக்கும் வேண்டும்.
ஆஸ்திரேலியா / நியூசிலாந்து
சென்ற வருடம் நியூசிலாந்தில் இருக்கும் வெள்ளை தீவு எரிமலையை சுற்றிப் பார்க்க சென்றவர்களில் 22 பேர் எரிமலைக் குழம்பில் மாட்டி இறந்து போனார்கள்.
இன்னும் பலர் ஏராள தீக்காயத்துடன் இன்னமும் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்த விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
(இந்த வட்டத்திற்குள் ஜூம் செய்து பார்த்தால் சுற்றுலாப் பயணிகல் எரிமலையின்
மீது உலாவுவது தெரிகிறது. எரிமலை வெடிக்குமுன் எடுத்தது)
சுமார் பத்து சுற்றுலா நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எரிமலை வெடிக்கும் அபாயம் இருந்தால், வழக்கமாக அதற்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்படும்
அந்த எச்சரிக்கையை மீறி அதைப் பொருட்படுத்தாமல் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றவர்கள் இந்த விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்திருக்கிறார்.
பத்து நிறுவனங்களில் இரண்டு அரசு துறைகளும் அடக்கம். இது போக மூன்று தனிப்பட்ட மனிதர்கள் மீதும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு சிறையில்லையாம். ஆனால் நிறுவனங்களுக்கு 1 மில்லியன் நியூசிலாந்து டாலர் வரையும் தனிப்பட்டவர்களுக்கு மூன்று லட்சம் டாலர்கள் வரையும் அபராதம் வருமாம்.
நியூசிலாந்தை பொறுத்தவரை அட்ரலீனை அதிகரிக்கச் செய்யும் அபாய சுற்றுலா விஷயங்கள் அதிகம்.
அந்த ஒட்டு மொத்த அபாயகரமான சுற்றுலாத் துறை நடவடிக்கைகளையே இந்த வெள்ளை தீவு மரணங்கள் ஸ்தம்பித்துப் போக வைத்துள்ளது.
உதாரணத்திற்கு பஞ்சி ஜம்பிங் என்று சொல்லப்படும் உயரத்திலிருந்து கயிறு கட்டிக் கொண்டு குதிப்பது, ஜெட் போட் என்ற அதிவேக படகு, இது போன்ற மயிற்கூச்சரியும் சாகசங்கள் அதிகம்.
நியூசிலாந்துக்குப் இது வரை போகாததன் ஒரே காரணம் இது தான்.
தென்னமெரிக்கா
பிரேசில்
பிரேசிலில் இந்த வாரத்தில் இரண்டு முறை வங்கிகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை க்ரிக்யூமா என்ற இடத்தில் ஒரு வங்கியில் துப்பாக்கி சகிதம் புகுந்த கொள்ளையர்கள் வங்கியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றார்கள்.
நேற்றைய இரவு கமேட்டா என்ற இடத்தில் அதே போல துப்பாக்கி நாட்டு வெடிகுண்டுகள் சகிதம் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் பணயக்கைதிகளாக பலரையும் பிடித்து கொண்டு சென்று விட்டனர்.
ஒருவரை தலையிலேயே சுட்டுக் கொன்றும் இருக்கிறார்கள் பண வெறி பிடித்த கொள்ளையர்கள்.
பிரேசில் போல ஆபத்தான நாடு எதுவும் இல்லை.
2019ல் மட்டும் சுமார் 21 வங்கிக் கொள்ளைகள் நடந்திருக்கின்றன.
பிரேசில் பத்திரிகைகள் இது பற்றி எழுதும் போது 1920களில் 30களில் இது போன்ற கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்குமாம்.
சின்ன சின்ன ஊர்களை மையமாகக் கொண்டு நடந்த இந்த கொள்ளைகள் இப்போது மீண்டும் திரும்பியிருக்கிறது என்று மக்கள் பீதி கொண்டிருக்கின்றனர்.
இந்த வருடத்தின் முதல் பாதியில் இது வரை 14 வங்கிக் கொள்ளைகள் நடந்து முடிந்து விட்டன.
எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரங்கள் வரவில்லை. ஆனால் இது பிரேசிலின் சாபக்கேடு என்று மட்டும் புரிகிறது.
இதுக்குத் தான் டிஜிட்டல் பணம் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ! ஆனால் என்ன செய்ய அங்கேயும் சைபர் கிரைம் திருடர்கள் இருக்கிறார்களே....??
இதற்கு ஒரே வழி பட்டுக்கோட்டையார் சொன்னது தான்.
திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!
ராம்
Leave a comment
Upload