மக்கள் மீதான அபிமானம் இது அல்ல...
தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது சற்று கரிசனம் கூடுதலாகத்தான் இருக்கும். அது மக்கள் மீதான அபிமானம் அல்ல... எல்லாம் ஆட்சி அதிகார ஆசைதான்.
சென்ற மாதம், அதிமுக நடத்திய கிறிஸ்துமஸ் தின விழாவில் ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகையை 20 ஆயிரத்திலிருந்து 37 ஆயிரத்துக்கு உயர்த்தி அறிவித்தார் முதல்வர். இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்வு. இது தவிர, கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்க்க ஒரு கோடி ரூபாயாக இருந்த தொகையை 5 கோடிக்கு உயர்த்தி அறிவித்தார், இது 5 மடங்கு உயர்வு.
பொங்கல் பரிசாக ஏற்கனவே ஆயிரம் ரூபாய் வழங்கியதை, 2500 ஆக உயர்த்தினார் முதல்வர், இது இரண்டரை மடங்கு உயர்வு. தைப்பூசம் என்பது முருகர் கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் நிகழ்வு. தற்போது தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவித்திருக்கிறார் முதல்வர். இதுவும் வாக்குவங்கி அரசியல் தான்.
இரண்டு நடிகர்கள் கோரிக்கை வைத்தார்கள் என்று திரையரங்கில் 100% பார்வையாளர்களை அனுமதித்து உத்தரவு போட்டார் முதல்வர். அதில் ஒரு நடிகர் கட்சி துவங்க இருந்து, தற்போது பின்வாங்கி விட்டார். அதற்கான சரியான ஈடாகத்தான் இது பார்க்கப்படுகிறது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு உத்தரவு விதிமீறல் என்று சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறது. பள்ளிக்கூடம் திறக்க யோசிக்கும் அரசு, திரையரங்குக்கு காட்டும் கரிசனம் ஏன் என்பது புரியவில்லை. தற்போது உயர்நீதிமன்றம் இந்த ஆணையை ரத்து செய்திருக்கிறது.
கடுமையான மழையின் போது, பல இடங்களில் சரியான சாலை வசதியின்றி சாலைகள் வெள்ளக்காடாக மாறி, மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்... இதற்கு இந்த அரசு என்ன செய்தது?
போதிய பருவ மழை பெய்தும், பல ஏரிகள் குளங்கள் முழு கொள்ளளவை எட்டவில்லை. காரணம் - சரியான பராமரிப்பு இல்லை, தூர்வாரப்படவில்லை. ஆனால் ‘முன்னெச்சரிக்கையாக தூர்வாரப்பட்டுள்ளது’ என்ற ஆளும் தரப்பு செய்தி, எந்த அளவு உண்மை என்பதற்கு இந்த நிரம்பாத குளங்கள், ஏரிகளே சாட்சி.
மக்கள் நலன் என்பது உள்ள பூர்வமாக இருக்க வேண்டும். வாக்கு வங்கியை மனதில் வைத்து செய்யும் எந்த நடவடிக்கையையும் மக்கள் ஏற்க மாட்டார்கள், புறக்கணிப்பார்கள். இதுதான் கடந்த கால வரலாறு, இதை ஆளுங்கட்சி உணர்ந்தால் நல்லது.
Leave a comment
Upload