பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இது. இந்த வார முடிவில் யாருக்கு வெற்றி என தெரிந்து விடும். இந்த போட்டியில் மக்களின் ஆதரவு பெருமளவில் இருப்பது என்னவோ நடிகர் ஆரிக்கு தான். ஆனால் இது நாள் வரையிலும் அடாவடியாக அவருடன் வாய்ச்சண்டையிட்டு வந்த தடாலடி போட்டியாளர் பாலா எனும் பாலாஜி வெற்றி பெறக்கூடுமோ எனும் பதற்றமும் அச்சமும் இன்று உலகம் முழுதிலும் உள்ள ரசிகர்களுக்கு வந்து விட்டது. காரணம், எப்போதுமே கடைசி நேர விறுவிறுப்புக்காக விஜய் டிவி ஏதாவது ஏடாகூடமாக செய்யக்கூடும் எனும் அச்சம் தான்! சென்ற முறை உலமே எதிர்பார்த்த போட்டியாளர் தர்ஷனை திடீரென இறுதிப் போட்டிக்கு கூட அனுப்பாமல் தூக்கியடித்தது சேனல். இந்த முறை அத்தனை மோசமில்லை. ஆரி இறுதி வார ஃபைனலிஸ்ட்டாக வந்து விட்டார். இருப்பினும் திக்திக் மனசோடே மக்கள்!
மக்கள் பயந்தாற் போலவே வாரத்தின் முதல் நாளன்றே கலகக்கார போட்டியாளராகவும் குரூப்பிஸ தலைவியாகவும் இருந்து வெளியேற்றப்பட்ட தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் மறு எண்ட்ரி ஆகியிருக்கிறார். இவருடன் நடிகை ரேகா, காமெடி நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ். இதில் அர்ச்சனாவைக் கண்டு அதிகமாக குதூகலித்த ரியோ, ஸோம், கேப்ரியல்லா தங்களது தேவதா விசுவாசத்தை அர்ச்சனாவைப் பார்த்து குஷியாக கத்துவதிலும், அணைப்பதிலும் காட்ட...இவர்களுடன் சரிக்கு சமமான மகிழ்ச்சியை ரம்யாவும் பாலாவும் கூட காட்டினார்கள். மீண்டும் ஆரி தனித்து விடப்பட்டு ஒதுக்கப்பட்டார். இவரிடம் போய் சகஜமாக பேசிய ஒரே ஜீவன் நிஷா தான். அது கூட வெளியே தனக்கு ஆரியால் ஏற்பட்டுப் போன டாமேஜ் இமேஜை சரிக்கட்டிக் கொள்ளவே என்பது அப்பட்டமாக தெரிகிறது.
ரேகா நடுநிலையாகவே இருந்தார். ஆரியை “யூ ஆர் ராக்கிங்” என அணைத்து பாராட்டியவர் பாலாவிடம் சென்று “ நீ இந்த போட்டில நல்லா விளையாடுறே...ஆனா கோவத்தை கட்டுப்படுத்த தவறிட்டே. போட்டின்னா ஒரு ஹீரோ, ஒரு வில்லன் வேணும். நீயே ரெண்டுமா இருக்கே” என பாலாவை குழப்பி விட்டார்.
ஜித்தன் ரமேஷும், அர்ச்சனாவும் எத்தனை முறை அவர்கள் மீது கறை படிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள் என தெரிந்து விட்டது. வீட்டுக்குள் திரும்பி வந்ததே ஆரியை ஜெயிக்க விடாமல் செய்வதற்கு தான் எனும் கங்கணத்தோடு களம் இறங்கி விட்டனர் இருவரும். இதனால் ரம்யா மற்றும் பாலாவைக் கூட தன் அணியில் சேர்த்துக் கொண்டு விட்டார், அர்ச்சனா. ‘எனக்கு ரெண்டு கண்களும் போனாக் கூட பரவாயில்லை. எதிராளிக்கு ஒன்னாவது போகணும்’ எனும் வெறித்தனமான அஜெண்டா அவரது உடல் மற்றும் வாய் மொழியில் அப்பட்டமாக தெரிகிறது. மக்கள் மத்தியில் எப்பேர்ப்பட்ட கெட்ட பேருக்கும் அவர் தயாராகி விட்டதால் அர்ச்சனா தான் ஆரிக்கு எதிராக அத்தனை காய்களையும் திட்டம் போட்டு நகர்த்துவார் என புரிந்து விட்டது.
எப்படியும் இரண்டாவது இடத்துக்கு விஜய் டிவியின் ரியோவோ, ரம்யாவோதான் வெற்றி பெறக்கூடும். ஆனால் வின்னர் இடத்துக்கு கடும் போட்டியாளராக பாலாவும், ஸோமும் களமிறங்கி ஆரிக்கு டஃப் பைட் கொடுக்கப் போவது நிச்சயம்.
இந்த முறை போட்டியில் ஆரி ஒரு வேளை ஜெயிக்கா விட்டால் விஜய் டிவி மீது மக்கள் பெருமளவில் ‘ஒருதலைபட்சமானவர்கள்’ என சந்தேகம் கொள்ளக் கூடும் எனவும் சேனல் நன்கு அறிந்திருக்கிறது. அதனால் மக்கள் போடும் ஓட்டுக்களை அது குறைத்தோ கூட்டியோ சொல்லாது எனவும் சேனல் வட்டாரத்தில் சிலர் நம்புகின்றனர்.
முன் எந்த பிக் பாஸ் ஸீஸனிலும் இல்லாமல் ஆரிக்கு மாத்திரம் மக்கள் ஆதரவு இந்த அளவு கிடைக்க ஒரே காரணம் அவரது நேர்மையான விளையாட்டு, தெளிவான அணுகுமுறை மற்றும் மெச்சூரிட்டிதான்! இதனால்தான் மற்ற எல்லா போட்டியாளர்களையும் விட அவர் தனித்துத் தெரிகிறார். சக போட்டியாளர்கள் எல்லோராலும் டார்கெட் செய்யப்பட்டு, கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி, ஒடுக்கப்படுபவனை யாருக்குத்தான் பிடிக்காது?! அந்த வகையில்தான் பெரும்பாலான மக்கள் கூட்டம் ஆரி வெற்றி பெற விரும்புகிறது. அந்த வெற்றியினை தங்களது தனிப்பட்ட வெற்றியாகவும், அப்படி நடந்தால் தான் இது ஒரு நல்ல சமூகம் எனும் அளவுக்கும் மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆரியின் மீதான மக்கள் ஆதரவுக்கு கமலின் பிரச்சார பயணமே சாட்சி!. தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊர் ஊராக பயணப்பட்டு வரும் மக்கள் மய்ய தலைவர் கமலிடம், அவரது பேச்சை கேட்பதற்கு கூடும் கூட்டத்தில் “ ஆரியை பிக் பாஸ்ல ஜெயிக்க வெய்யுங்க” என பொது மக்கள் உணர்ச்சிவசப்பட்டு உரத்து கோஷமிடுகிறார்கள். இது சேனலை சற்று ஆச்சர்யப்படுத்தி அவர்களது திட்டங்களை அப்செட்டும் செய்துள்ளது.
இந்த அளவுக்கு ஆரிக்கு பாபுலாரிட்டி வரும் என சேனல் நினைக்கவில்லை. காரணம், அவர்களுக்கு வேறு ஒரு அஜெண்டா இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் ஆண் மற்றும் பெண்னை தங்களது ‘வேலுநாச்சி’ தொடரில் நாயகன் மற்றும் நாயகியாக்க சேனல் முடிவு செய்துள்ளது. அதனால்தான் தங்களது சேனல் முகங்களான ரியோ, ரம்யா, ஷிவானி போன்றவர்களை முடிந்த வரையிலும் நல்ல விதமாகவே லைம் லைட்டில் காட்டி வந்தது. கடைசி இரண்டு வாரங்களில் ரம்யா வெளிப்படையாகவே தன்னை ஆரியின் எதிரியாக காட்டத் தொடங்கவும், மக்கள் மத்தியில் அவருக்கு எழுந்த எதிர்ப்பை கமல் கோடி காட்டி அவரை மட்டம் தட்டியும் விட்டார். இது சேனல் எதிர்பாராதது! ஆனால் கமல் தெளிவாக தான் நியாயத்தின் பக்கமே என்பதாக இது வரை உறுதிபட நின்று விட்டார். தன் மனசாட்சியையும் மக்கள் சாட்சியினையும் அவர் மீறவில்லை.
எனினும் கமல் இறுதி வரையிலும் இப்படியே இருப்பாரா அல்லது அதை மீறிய சூழல் ஏதேனும் ஏற்பட்டு விடுமா என்பதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகின்றன. பொதுவாகவே இது போன்ற மக்கள் ஒட்டெடுப்புக்களில் நடுவர்களாக சிலர் செயல்பட்டாக வேண்டும் என்பது விதி. ஒட்டு நிகழ்ந்ததற்கான ஆதாரங்களை பின் எவரேனும் கோர்ட்டில் காட்டச் சொன்னாலும் அதற்கு சேனலும் அந்த நிறுவனமும் தயாராக இருக்க வேண்டும். இந்த விதிப்படி மக்களை ஏமாற்றுவது கொஞ்சம் கடினம்தான் என்பதால் சேனல் இம்முறை இரு வெற்றியாளர்களை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதாவது மக்களை சமாளிக்க முடியாத சமாதானத்திற்கு ஆரிக்கு ஜனங்களின் நாயகனாக பட்டம் சூட்டப்படலாம். அதே சமயம் அவரது வெற்றிப்பணத்திற்கு பங்கும் வரலாம். அவருக்கு இணையான வெற்றியாளராக இன்னொருவரும் அறிவிக்கப்படலாம். அது பாலாவாகவோ, ஸோமாகவோ, ரியோவாகவோ இருக்கலாம். அப்படி நடக்கிற போது தாங்கள் போட்ட திட்டப்படியே வெற்றி பெறும் நபரை வேலுநாச்சி தொடரின் ஹீரோவாகவும் சேனல் அறிவிக்கலாம். ஆக...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!
இதற்கு சாத்தியமா என யோசிக்கவே வேண்டாம். ஏற்கனவே இன்னொரு மொழியில் நடந்திருக்கும் பிக் பாஸில் இப்படி இரு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட சரித்திரம் உண்டு. இதானாலேயே தங்களது அனைத்து விஜய் டிவி நாயக, நாயகிகள், மற்றும் தொகுப்பாள முகங்களுக்கு ஒரு தனிப்பட்ட கட்டளையினை பிறப்பித்துள்ளது சேனல். அது வேறொன்றுமல்ல...ரியோ மற்றும் ரம்யாவின் துதி பாடல். அதன்படி இதுவரை பொது வெளியில் பிக் பாஸ் பற்றி பேசாத விஜய் நட்சத்திரக் கூட்டம் மொத்தமும் திரண்டு சமூக வலை தளங்களில் ‘ரியோவுக்கும் ரம்யாவுக்கும் ஜெ ஜெ’ என கடந்த சில நாட்களாகவே கூப்பாடு போட்டு வருகின்றனர். இதன் மூலம் கடைசி நேரத்தில் ஒரு பெருத்த சலசலப்பினை ஏற்படுத்துவதில் குறியாக இருக்கிறது விஜய் டிவி.
“சரி.. ஆரியின் வெற்றியை விஜய் டிவி ஏன் குறைக்க அல்லது முழுவதுமாக ஜீரணிக்க முடியாமல் இருக்க வேண்டும்?” என அப்பாவித்தனமாக கேள்வி கேட்கும் தமிழர்களுக்கு கீழ்க்கண்டதே பதில்!
ஆரி வெற்றி பெறும்போது, சினிமாவில் இன்னம் முன்னுக்குப் போக மட்டுமே இந்த பிக் பாஸ் வெற்றியை பயன்படுத்துவாரே தவிர ஒரு போதும் விஜய் டிவி சீரியலில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார். தவிர, விஜய் டிவியின் ஒருவித ஜாலிலோ ஜிம்கானாத்தனமான பொழுதுபோக்கு முகத்திற்கு..ஆரியின் ஓவர் நேர்மை மற்றும் கருத்து கந்தசாமி குணம் ஒத்தே வராது. எனவேதான் ஆரி அவர்களுக்கு அலர்ஜி!
இந்த வார கிசுகிசு:
‘என்ன செய்தாலும் ஏன் டிஆர்பியில் முன்னேற்றமில்லை?’ என நிறங்களின் டிவிக்கு தலைமை ஆபீஸிலிருந்து ஏகப்பட்ட பிரஷர். இதனால் இங்கே தலையாக இருப்பவர் மீண்டும் மூட்டையை கட்டிக் கொண்டு பெங்களூர் செல்ல வேண்டியிருக்கலாம் என பேச்சு நிலவுகிறது.
Leave a comment
Upload