மார்கழி, தை..
மார்கழி மற்றும் தை மாதம் இந்த இரண்டு மாதங்களுமே எனக்கு பிடித்தமான மாதங்கள் பனிப் பொழிவை எங்கள் ஊரான மதுராந்தகத்தில் ரசித்திருக்கிறேன். டெல்லி, காஷ்மீர், பத்ரி, நேபால், முசௌரி இங்கெல்லாம் அனுபவித்திருக்கிறேன்.
சிறுவயதில் மார்கழி மாதம் எனக்குப் பிடித்தமானதாக இருக்க காரணம்... காலையில் பெருமாள் கோயிலில் கிடைக்கும் சூடான வெண்பொங்கல். அப்போதெல்லாம் பல் தேய்த்துவிட்டு நேராக கோயிலுக்குச் சென்று, வெண்பொங்கல் வாங்கி சாப்பிட்டுவிட்டு தான் காபி குடிப்பது பழக்கமாக இருந்தது, அது ஒரு சுகானுபவம். அப்போதெல்லாம் குளிராமல் இருக்க, சட்டைக்குள் ஒரு பழைய சட்டையை போட்டுக்கொள்வோம். அதுதான் ஸ்வெட்டர்.
ஆண்டாளின் திருப்பாவை எனக்குப் பிடிக்கும். எளிய நடையில், புரிகின்ற சொற்கள் உண்மையில் ஆண்டாள் மிகப்பெரிய தமிழ் பண்டிதர். மார்கழிகளில் நாம் கடவுளாக கொண்டாடப்படுகிற ஆண்டாளின் தமிழ், கொண்டாடப்படுகிறதாக எனக்கு தெரியவில்லை. இரண்டு மூன்று முறை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட நந்தவனத்தை நான் சேவித்து இருக்கிறேன். எனக்கு வசதி வந்த காலத்தில் ஒரு சிறிய டேப்ரிக்கார்டர் வாங்கினேன். அதில் ஆண்டாளின் திருப்பாவை எம்.எல். வசந்தகுமாரி பாடியது. அதிகாலை நாலு மணிக்கு போர்வை போர்த்திக்கொண்டு திருப்பாவையை சுகமாக ரசிப்பேன், அது எனக்கு பிடிக்கும். இதற்கு மார்கழி மாதம்தான் என்றில்லை... சித்திரை மாதம் கூட நான் ஆண்டாளின் திருப்பாவை அதிகாலை கேட்டு ரசித்து இருக்கேன்.
அந்த காலத்தில் வைகுண்ட ஏகாதேசி இரவு கண் விழித்து, பரமபதம் விளையாடுவோம். சம்பாதித்த வயதில், வைகுண்ட ஏகாதேசி சிறப்பு காட்சிகள் என்று தொடர்ந்து 3 சினிமா போடுவார்கள். தியேட்டரில் சென்று அதைப்பார்த்து வைகுண்ட ஏகாதேசி விரதம் இருந்த நாட்களும் உண்டு. மறுநாள் துவாதசியன்று சீக்கிரமே சாப்பிடலாம். சினிமா பார்த்துவிட்டு வந்து, நேராக பல் தேய்த்து குளித்து நேரடியாக சாப்பிட்ட அனுபவம் உண்டு. அவியல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை, அகத்திக்கீரை, நெல்லிக்காய் தயிர் பச்சடி, சுண்டைக்காய் வத்தல் என்று ஒரு பிடி பிடித்துவிட்டு விளையாட போய்விடுவோம் தூக்கம் எல்லாம் வராது.
தை மாதம் பொங்கல் திருநாளும் எனக்கு கொண்டாட்டம் தான். போகிப் பண்டிகை முதலே என் சந்தோஷம் துவங்கும். என் அம்மாவும் சரி, என் மனைவியும் சரி போளி நன்றாக செய்வார்கள். பெரும்பாலும் மாலை தான் சுட சுட போளி தயாராகும். போளியின் மீது இரண்டு முன்று ஸ்புன் நெய் விட்டு தருவாள் என் மனைவி. சற்றே அசரும்போது, நான் இரண்டு ஸ்பூன் நெய் போளியின் மீது விடுவேன். ஆனால் எப்படியும் என் மனைவி கண்டு பிடித்து விடுவாள், போதும்... உடம்புக்கு ஆகாது என்று என்னை சமையலறையிலிருந்து விரட்டி விடுவாள். ஆனால், என் அம்மா கண்டு கொள்ள மாட்டாள்.
பொங்கலன்று... சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் வடை, அவியல் என்று அமர்க்களப்படும். மறுநாள் தேங்காய் சாதம், புளியோதரை, கதம்ப சாதம், தயிர் சாதம், வத்தல், சிப்ஸ் என்று கொண்டாட்டம்தான்.
ஒரு காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது, சேப்பாக்கத்தில் கிரிக்கெட் மேட்ச் நடக்கும். என் சகோதரியின் கணவரான எனது நான்காவது மாமா, அப்போது ஐஸ்ஹவுசில் குடியிருந்தார். டிக்கெட்டு விற்பனை நாளன்று, முன்னிறவே போர்வை எல்லாம் எடுத்துக்கொண்டு போய், கியூ வரிசையில் உட்கார்ந்துகொண்டு எங்கள் எல்லோருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்குவார். அவர் நினைத்தால், பவுலியன் மற்றும் விஐபி டிக்கெட் வாங்கலாம். ஆனால், கேலரியில் அங்குள்ள ரசிகர்களுடன் சேர்ந்து ரசித்து கிரிக்கெட் பார்ப்பது ஒரு அலாதி சுகம் என்பார். அது உண்மைதான். உட்லண்ட்ஸ் ஓட்டல் அதிபர் ஆனந்த ராவ், டோனி கோ சியர் போன்றவர்கள் வர்ணனை புரியும்படி இருக்கும். பிறகு தமிழில் கிரிக்கெட் வர்ணனை கூத்தபிரான் சொல்லத் தொடங்கினார். ஆங்கில வர்ணனையில் good Ball indeed என்ற வார்த்தையை வர்ணனையாளர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஆனால் எனக்கு அப்போது indeed என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் தயக்கம். என் மாமா வீட்டிற்கு சென்று, அவர் வைத்திருந்த தமிழ் ஆங்கில அகராதியில் indeed என்பதற்கு என்ன அர்த்தம் என்று தேடி, really என்று தெரிந்து கொண்டேன். கூத்தபிரான் இதை... இது ஒரு நல்ல பந்து என்று அழகாக தமிழ்ப்படுத்தி சொல்வார்.
அன்று மாலை ஆட்டம் முடிந்து மாமா வீட்டுக்கு வந்ததும் அன்றைய ஆட்டம் பற்றிய ஒரு அலசல் விவாதம் நடக்கும். அது சற்று காரசாரமாக கூட இருக்கும். சந்திரசேகர் ஸ்பின், சலீம் தூரானி அடித்த சிக்ஸர், இன்ஜினியர் ஸ்ட்டம்ப் அவுட், மதன்லால் பவுலிங் என்றெல்லாம் பேசுவார்கள். என் சகோதரி அந்த சமயத்தில், சூடாக பஜ்ஜி, போண்டா, பகோடா என்று ஏதாவது ஒன்றை தருவாள். இது தவிர... மறுநாள்ம் இந்து பத்திரிகையில் ராஜன் பாலா அன்றைய கிரிக்கெட் ஆட்டம் பற்றி எழுதிய கட்டுரையும் படித்துவிட்டு, அதுவும் விவாதப்பொருளாக இருக்கும்.
பொங்கலன்று ஆனந்த ராவ் வர்ணனையை தொடங்கும்போது... today is sankaranthi. in Tami we called pongal என்று நமது பண்டிகையை உலகம் முழுக்க ஒலிபரப்பினார். இடைவேளையின்போது, என் சகோதரி அதிகாலை எழுந்து தயார் செய்திருந்த சக்கரை பொங்கல், பொங்கல் எல்லாம் நாங்கள் சாப்பிட்டு மகிழ்வோம். சேப்பாக்கத்தில் பொங்கல் கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை. அந்தக் கால கிரிக்கெட் தந்த சந்தோஷம் இந்த காலத்தில் கிடைக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த நாட்கள் இனியவை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.
நான் தொலைக்காட்சியில் சேர்ந்த காலத்தில் இலவசமாகவே சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு பலமுறை எனக்கு கிடைத்தது. ஆனால், கேலரியில் நான் பார்க்கும்போது கிடைத்த ஒரு மகிழ்ச்சி கிடைத்ததா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கு பிறகு, பார்வையாளர்கள் கூட்டம் சற்று குறைவுதான். ஆனால் மைதானத்தில் நேரடியாக பார்ப்பதில் உள்ள திரில், தொலைக்காட்சியில் பார்க்கும்போது கிடைக்காது என்று இப்போதும் மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சேப்பாக்கம் மைதானம், பொங்கல், கிரிக்கெட் இவை மூன்றும் என்னுடைய நிரந்தர மலரும் நினைவுகள்...
Leave a comment
Upload