ஆசியா
சீனாவில் இரண்டாவது அலை…
கோவிட்-19 சீனாவில் அடங்கியிருந்தது போல இருந்தது மீண்டும் இரண்டாவது அலையாக உருவெடுத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கைச் சுற்றிலும் விரைவாக பரவுவதாக தகவல் வெளியானதில் சீன நகரங்கள் சில மீண்டும் லாக் டவுனில் சென்றுள்ளன.
ஹூபே மாகாணத்தில் மீண்டும் தொற்று ஏற்பட்டது ஒரு புறம் இருக்க, ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் புதிய தொற்று ஏற்பட்டிருக்கிறது.
ஹார்பின் என்ற இடத்தில் பனிப்பாறைகளைக் கொண்டு கலைச் சிற்பங்கள் செய்து பிரம்மாண்ட பொருட்காட்சி அமையும் என்று இரண்டு வாரங்கள் முன்பு பார்த்தோம். அந்த மாகாணத்தில் உள்ள சியூஹுவா என்ற ஊரில் சுமார் 52 லட்சம் பேர் லாக்டவுனில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மிக மிக பெரிய மனித இடமாற்றம் என்பது சீனப் புத்தாண்டின் போது நடக்கும். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த முறை அதை கட்டுப்படுத்த நினைக்கிறது சீன அரசு.
இந்த சீனப் புத்தாண்டு பயணங்களை அனுமதித்தால் தொற்று மீண்டும் நாடு முழுவதும் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதே அது.
ஒரு கேள்வி வரலாம். அது தான் தடுப்பூசி வந்து விட்டதே இனி என்ன என்று ??
சுருக்கமாக மூன்று கட்டங்களை நாம் கடக்க வேண்டும்.
முதலாவது நாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து முன்னர் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தோமோ அது தொடர வேண்டும்.
இரண்டாவது நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம் ஊருக்கே அல்லது நாட்டுக்கே அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
தொடர்ந்து முன்னர் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தோமோ அது தொடர வேண்டும்.
மூன்றாவது உலகம் முழுவதும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து முன்னர் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தோமோ அது தொடர வேண்டும்.
இதெல்லாம் முடிந்த பின்னர் தான் அதான் தடுப்பூசி போட்டாச்சே இனி பிரச்சினையில்ல என்று கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம். இதற்கு எப்படியும் இந்த வருடம் முழுவதும் ஆகி விடும்.
எப்படியும் இந்த ஆண்டு கரோனாவை ஜெயிக்க வேண்டும். (சிலர் எனக்கு தனிப்பட்ட செய்தியில் அது கரோனா அல்ல கொரோனா என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா என்றால் கொஞ்சம் கொடூரமாக படுகிறது. மேலும் ஒரு கொம்பு போட்டால் அது போய் விடும் என்றால் போடத் தயாராக இருக்கிறேன்.)
ரஷ்யா
மாஸ்கோ
நம்மூரில் மார்கழி மாதத்தில் அருண் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவதையே நாம் சாகசமாக நினைக்க, ரஷ்யாவில் ஒரு பெண் சத்தமில்லாமல் ஐஸ் கட்டிக்கடியில் ஒரு கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்.
யெகடேரினா நெக்ராசோவா, என்ற பெண், சொல்வதற்கு கஷ்டமாக இருக்கிறதல்லவா ? அவர் செய்தது அதை விட கஷ்டம். 40 வயதான அவர் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் உறைந்து போய் இருக்கும் பனிக்கட்டிக்குள்ளே குதித்து, பனிக்கட்டிக்கு அடியில், நீரில் உள்நீச்சல் போட்டு 280 அடி தூரத்தை ஒரு நிமிடம் 12 செகண்டில் கடந்து புதிய கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்.
கின்னஸ் விதிகளின் படி அவர் பிரத்யேக உடைகளை அணியக் கூடாது. சாதாரண நீச்சல் உடை மட்டுமே அணிய வேண்டும்.
விதிகளின் படியே நீந்தி முந்தைய சாதனையான 230 அடியை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் யெகடேரினா.
முந்தைய சாதனை நார்வேயில் 2020ல் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆம்பர் ஃபில்லாரி என்பவர் செய்தது.
இது பெரிய விஷயமா என்றால் எனக்கு மிகப் பெரிய விஷயம் தான். ஐஸ் தண்ணீரை விடுங்கள், சாதா நீச்சல் குளத்திலேயே எனக்கு கடப்பாரை நீச்சல் தான் தெரியும்.
இந்தோனேசியா
ரிச்சர்ட் முல்ஜாடி என்பவர் இந்தோனேஷியாவில் ஒரு பெரிய வியாபார காந்தம்.
அவரும் அவரின் மனைவியும் சமீபத்தில் பதிக் ஏர் விமானதில் ஜகார்தா முதல் பாலி வரை சென்றார்கள். இதில் என்ன செய்தி என்றால் அவர் மொத்த விமான டிக்கட்டுகளையும் வாங்கி விட்டு அவர்கள் இருவர் மட்டுமே சென்றிருக்கிறார்கள்.
இதை அவர் சமூக வலைதளத்தில் பதிந்திருக்கிறார்.
விசாரித்ததில் விமானத்தை சார்ட்டர் செய்து, அதாவது குத்தகை எடுத்து பறப்பதை விட இப்படி பறப்பது சல்லிசாக இருந்ததாம். எல்லாம் கோவிட் பயம் தான். தொற்று ஏற்படக்கூடாது என்று முன் ஜாக்கிரதையாம்.
விமானக் கம்பெனியில் ஊடகங்கள் விசாரித்த போது அவர்கள் இருவரும் இந்த விமானத்தில் டிக்கெட் எடுத்தது உண்மை ஆனால் மற்ற டிக்கெட்டுகளையெல்லாம் அவர்களே எடுத்தார்களா என்ற தரவுகள் தரவில்லையாம்.
விபத்து
விமானம் என்றது வருத்தத்துடன் நினைவுக்கு வருவது சென்ற வாரம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய ஶ்ரீவிஜயா ஏர் விமானம் 182 தான்.
தற்போது அதன் ப்ளாக் பாக்ஸ் என்று சொல்லப்படும் கறுப்புப் பெட்டி கிடைத்திருக்கிறது.
அந்த விமானத்தில் பறந்த 62 பேரும் பிழைத்திருக்க வாய்ப்பேயில்லை என்ற நிலையில் கடலுக்கடியில் கடற்படை வீரர்கள் குதித்து இந்த ப்ளாக் பாக்ஸை எடுத்திருக்கிறார்கள்.
அது போக பயணிகளின் உடல் உறுப்புகளும் கிடைத்திருக்கின்றன. அதில் நால்வர அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள்.
ஜகார்த்தாவிலிருந்து பாண்டியானக் என்ற ஊருக்கு கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்ன காரணம் என்றெல்லாம் இந்த ப்ளாக் பாக்ஸை ஆராய்ந்தால் தகவல் கிடைக்கும்.
என்ன தகவல் கிடைத்து என்ன, அநியாயமாக போன உயிர்கள் திரும்ப வருமா ??
அமெரிக்கா
டிரம்ப் கைது செய்யப்படுவாரா ??
சென்ற வாரம் அமெரிக்காவில் வாஷிங்டனில் நடந்த ஜனநாயக தலைகுனிவு ஒரு புறம். அந்த பாராளுமன்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் ஐந்து பேர் இது ஒரு புறம்.
இதெற்கெல்லாம் காரணமாக இருந்தார் என்று சொல்லப்படும் டிரம்ப் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அவர் போராட்டக்காரர்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பேசினார் என்பது உண்மை. ஆனல் போய் தாக்குங்கள் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடியுங்கள் என்றெல்லாம் சொல்ல வில்லை.
ஃபைட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார். ஆனால் அவரே கடைசியாக அமைதியான முறையில் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் என்று சொல்லி விட்டுத்தான் வெள்ளை மாளிகைக்கு சென்று டிவியில் கிரிக்கெட் மாட்ச பார்ப்பது போல போராட்டங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
சட்ட வல்லுனர்கள் சொல்லும் போது டிரம்ப் ஒரு வேளை காபிடல் கட்டிடத்திற்கருகே நின்று கொண்டு மெகா ஃபோனி வெட்டு குத்து என்று கத்தியிருந்தால் அது வன்முறை தூண்டும் பேச்சு என்று சொல்லலாம். ஆனால் அவர் பேசியது பேச்சுரிமை வகையில் தான் வரும். பேச்சுரிமை தான் அமெரிக்காவின் பலமே என்று சட்ட வல்லுனர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இதனிடையே டிரம்புக்கு எதிராக இம்பீச்மெண்ட் என்று சொல்லப்படும் பதவி நீக்கமும் முன்னெடுத்திருக்கிறது பாராளுமன்றம். இதற்கு இறுதியாக செனெட் அனுமதி வேண்டும்.
சரி பதவி போகும் நேரத்தில் எதற்கு இம்பீச்மெண்ட் என்று கேட்டால் அது தற்போதைய பதவிக்காக இல்லையாம். 2024ல் ஒரு வேளை மீண்டும் டிரம்ப் போட்டியிடக் கூடாது என்பதற்காகவாம்.
நம்மூர் கவுன்சிலர் தேர்தல் கூட கொஞ்சம் டீசண்டாக நடக்கும் போல.
பதவி போகுமுன் டிரம்ப் கடைசி கடைசியாக மெக்சிகோ எல்லையில் கட்டிக் கொண்டிருக்கும் சுவரைப் போய் பார்க்கப் போயிருக்கிறார்.
ஏதோ சீனப் பெருஞ்சுவரை மீண்டும் கட்டி விட்ட பெருமிதம் டிரம்புக்கு. அவர் வாக்கு கொடுத்தது ஆயிரம் மைல் சுவர் கட்டுவதாக.
டிரம்ப் பதவியில் இருந்த போது எவ்வளவு தான் கட்டினார் ?? 453 மைல்கள் கட்டியிருக்கிறாராம் இது வரை. ஆனால் அது எல்லாமே புதிதாக கட்டியதல்ல. ஏற்கனவே இருக்கும் தடுப்பு வேலிகளை, கட்டிடங்களையும் கணக்கெடுத்துத்தான் இந்த அளவு. ஒரு கணக்கு படி பார்த்தால் சுமார் முன்னூறு மைல்களுக்கு மேலாக கட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த சுவர் கட்டும் காசை மெக்சிகோதான் தரும் என்று சொல்லியிருந்தார் டிரம்ப். ஆனால் அத்தனையும் அமெரிக்காதான் கொடுத்திருக்கிறது.
சரி இவ்வளவாவது கட்டினாரே. கூவத்தை தூர்வாருகிறோம் என்று ஆட்டையா போட்டது போலில்லாமல் ஓரளவுக்காவது சுவர் கட்டியிருக்கிறார் என்று ஒப்புக் கொள்ளலாம்.
அடுத்ததாக வரும் பிடன் இந்த சுவரை தொடர்வாரா என்றால் ஒரு செங்கல் கூட வைக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் டிஜிட்டல் முறையில் எல்லையை பாதுக்காக்கலாம் சுவரெல்லாம் வேண்டாம் என்பது ஜோபிடனின் வாதம்.
ஐரோப்பா
இத்தாலி
வானுக்கு சென்ற சமோசா.
இங்கிலாந்திலுள்ள ஒரு இந்திய உணவகம்.
சாய் வாலா என்ற அந்த உணவக உரிமையாளர் நிராஜ் கதாருக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஆசை. வானிலை அறிய பயன்படுத்தப்படும் பலூன்களை கொண்டு விண்ணுக்கு சமோசாவை கட்டி அனுப்ப வேண்டும்.
கோவிட் சமயத்தில் கூட்டமில்லாத காரணத்தால் நீண்ட நாள் ஆசையை செயல்படுத்து பார்த்து விடலாம் என பாத் என்ற இடத்தில் இருக்கும் அவர் கடையிலிருந்து ஜி.பி.எஸ். கருவி பொருத்தி அதில் ஒரு கோ ப்ரோ என்ற காமிராவையும் இணைத்து எங்கு தான் போகிறது நமது சமோசா என்று அறிய, வானில் செலுத்தியிருக்கிறார்கள்.
சும்மா இந்த கோவிட் சமயத்தில் மக்களை சிரிக்க வைப்பது தான் ஐடியா என்றிருக்கிறார் நிராஜ் கதார்.
மேலே போன பலூனிலிருந்து தகவலே இல்லை. சரிதான் ஏதோ கோளாறு என்று அதை மறந்தும் விட்டனர்.
ஆனால் சில நாட்கள் கழித்து ஃபிரான்சிலிருந்து பிகார்டி என்ற இடத்தில் இந்த ஜி.பி.ஸ் சமாச்சாரமும் கோ ப்ரோ காமிராவும் கிடைத்திருக்கிறது.
அங்குள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பயனாளர் அக்சல் மாதேன் என்பவர் அதை ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் போது கண்டெடுத்தார். அவர் அதை நிராஜுக்கு தெரியப்படுத்த எல்லோருக்கும் ஏக குஷி.
சமோசா ??
அதைக் காணோமாம்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் வடக்கே இருக்கும் டார்வின் சதுப்பு நில காடுகளில் கெவின் ஜாய்னர் மற்றும் காம் ஃபாஸ்ட் என்ற இருவரும் படகில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே துணிமணி இல்லாமல் சேறும் சகதியுமாக இருந்த ஒரு ஆளைப் பார்த்திருக்கின்றனர்.
ஏராள முதலைகள் இருக்கும் இந்த இடத்தில் இந்த ஆள் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவரைக் காப்பாற்றி குளிக்க வைத்து துணிமணிகள் கொடுத்து குடிக்க பீரும் கடிக்க சாண்ட்விச்செல்லாம் கொடுத்து காப்பாற்றி விட்டனர்.
விசாரித்ததில் ஏதோ வழி தவறி வந்து விட்டதாகவும் துணிமணியெல்லாம் போய் விட்டது என்றும் சொல்லியிருக்கிறார். (கவனிக்கவும் இது வரை “ர்” தான்)
ஊருக்குள் அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் விட்டனர்.
பின்னர் உள்ளூர் உடகங்கள் விசாரிக்கும் போது தான் தெரிந்தது பல விதமான குற்றச் செயல்களுக்கு தண்டனை பெற்ற ஆளாம் அவன். அவனைத்தான் உள்ளூர் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறதாம்.
பாவம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆள் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதாக இருந்தனர் அந்த நண்பர்கள் இருவரும். தப்பித்து ஓடிய ஆள் என்று தெரிந்ததும் இருக்கட்டும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று முடிவை மாற்றிக் கொண்டனர்.
ஆப்பிரிக்கா
சமீபத்தில் ஒரு பள்ளியில் 300 மாணவர்கள் கடத்தப்பட்ட போது அதற்கு தாங்கள் தான் பின்னணியில் இருக்கிறோம் என்று போகோ ஹாராம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.
இதை துருவிப் பார்த்ததில் ஊடகங்களின் தவறான செய்திகள் ஒரு வகையில் காரணமாக இருக்கிறது என்று தெரிய வருகிறது.
விகடகவியில் கூட இந்த கடத்தலுக்குப் பின் போகோ ஹாரம் இருப்பதாகவே எழுதியிருந்தோம்.
ஆனால் அது உள்ளூர் தாதாக்கள் கடத்தியது என்றும் ஒரு பைசா செலவில்லாமல் அந்த மாணவர்களை விடுவித்து விட்டது அரசாங்கம் என்றும் தெரிய வந்ததையும் எழுதியிருந்தோம்.
ஏன் போகோஹாராம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஏனெனில் 2017ல் சிபோக் என்ற இடத்தில் மாணவிகளை கடத்தியது போகோ ஹாரம். அதன் பின்னர் அடுத்த வருடம் சில பல கடத்தல்களையும் தற்கொலைத் தாக்குதல்களையும் செய்திருந்தாலும் அதன் தலைவன் அபுபக்கர் செக்காவு பதவி அல்லது அதிகார வெறி பிடித்து அலைபவன் அவனது கூட்டத்தை ஓரளவு அரசு கட்டுப் படுத்தி விட்டதாம்.
அந்த மாணவிகள் கடத்தலே, திட்டமிட்டு செய்யப்பட்டது இல்லையாம். ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் திருட வந்தது பள்ளியில் உள்ள உணவைத் தான். அதை திருடியதும் அவர்களுள் பேசிக் கொண்டார்களாம்.
இந்த மாணவிகளை என்ன செய்யலாம். ஒருத்தன் பூட்டி விட்டு போகலாம் என்று சொல்ல, இன்னொருவன் இல்லையில்லை அனைவரையும் கொளுத்தி விடலாம் என்று சொல்ல, கடைசியில் ஒருவன் வேண்டாம். எல்லாரையும் செக்காவு விடம் கொண்டு செல்லலாம். அவர் முடிவு செய்யட்டும்.
அந்த முடிவு தான் அபுபக்கர் செக்காவுக்கு உலகம் முழுவதும் மீடியா வெளிச்சம் கொடுத்து புகழ் (?) போதை அவனுக்கு தலைக்கு ஏறியது.
நீண்ட நாட்களாக அவனது பெயர் ஊடகங்களில் வராமல் இருக்க சமீபத்திய மாணவர் கடத்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் அபுபக்கர்.
அவன் வெளியிட்ட வீடியோவில் தங்கள் குழந்தைகள் இல்லை என்று சொன்ன கடத்தப்பட்ட பெற்றோர்களின் வார்த்தைகள் ஊடக வெள்ளத்தில் எடுபடவில்லை.
அபுபக்கர் செக்காவின் படத்தை இணையத்தில் தேடி இங்கே வெளியட முடியும் என்றாலும் ஒரு சின்ன துளியாக அவன் ஆசை நிறைவேறி விடும் என்ற காரணத்தினால், அது வேண்டாம்.
தென் அமெரிக்கா
கியூபா ஒரு ஆச்சரிய தேசம்.
2015 வரை கியூபாவை தீவிரவாதிகள் நாடு என்ற பட்டியலில் வைத்திருந்தது அமெரிக்கா.
அதிபர் பாரக் ஓபாமா தான் அந்த பட்டியலிலிருந்து கியூபாவை எடுத்து விட்டார்.
அதுமட்டுமல்ல 1928க்கு பிறகு கியூபா சென்ற ஒரே அதிபர் பாரக் ஓபாமா தான்.
இப்படி கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் நல்லிணக்கும் மெதுவாக உருவாக, நம்ம டிரம்ப் போகிற போக்கில் மீண்டும் கியூபாவை தீவிரவாத நாடுகள் பட்டியலில் சேர்த்து விட்டார்.
வெனீசூலா அதிபர் மதுரோவிற்கு கியூபா ஆதரவு தெரிவிப்பது தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், இது ஜோபிடனுக்கு சிக்கலை ஏற்படுத்தவே என்று சொல்கிறது கியூபா.
வட கொரியா ஈரான் இவைகளுடன் இனி கியூபாவும் இந்த பட்டியலில் இருக்கும்.
இதனால் கியூபாவிற்கு அன்னிய முதலீடு வருவது தடையாகும்.
ஜோ பிடன் வந்தாலும் தடையை நீக்க முடியும் என்றாலும் அதற்கு சில மாதங்கள் பிடிக்கலாம்.
ஒன்று மட்டும் உறுதி. !
அமெரிக்க அரசியலை தரை லோக்கலாக்கி விட்டுப் போகிறார் டிரம்ப்.
ராம்
Leave a comment
Upload