
மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே பசுமை போர்த்தி, ‘தெய்வத்தின்றே சொந்த பூமி’ (கடவுளின் தேசம்) எனும் சிறப்புமிக்க கேரள மாநிலத்தில், இயற்கை எழில் கொஞ்சும் வயநாடு, பம்பா நதி மற்றும் ஓடைகள், அடர்ந்த காடுகள் நிரம்பிய சபரிமலை, தென்னை மரங்கள் நிறைந்த கோவளம் கடற்கரை, உப்பங்கழி கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி, தீவுக்கூட்டங்கள் போல் நிலப்பகுதி சிதறி கிடக்கும் குமரகம் உள்ளிட்டவை சர்வதேச சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை.
இதில், நீரோடைகளுக்கு இடையே பசுமை போர்த்திய சோலைகளுடன் காட்சியளிக்கும் ஆலப்புழா மாவட்டம். கோயில்கள், அரண்மனைகள் நிறைந்த, ‘கதகளி’ நடனம் உருவான கொட்டாரக்கரா. அற்புத மூலிகைகள் மற்றும் தேன் சொட்டும் தேன்மலா. காட்டு மிருகங்கள் வசிக்கும் சரணாலயம் என கலாசார அடையாளங்களுடன் விளங்கும் கொல்லம். இப்படிக் கேரளாவின் பல்வேறு சுற்றுலா தலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில், சர்வதேச சுற்றுலா சொர்க்கபுரியான கேரளா, இன்று கொரோனா நோய்தொற்று பரவல் மற்றும் பாதிப்பினால் பலகோடி மதிப்பிலான சுற்றுலா வருவாயை இழந்துள்ளது. கடந்த ஆண்டு கேரளாவுக்கு ₹1.98 கோடி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 17 சதவிகிதம் அதிகம். இதன்மூலம் கேரள அரசுக்கு ₹45 கோடி சுற்றுலா வருவாய் கிடைத்துள்ளது.
கேரளாவில் கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நின்றுபோனது. எனினும், கேரள சுற்றுலா துறைக்கு வருமானம் குறையவில்லை. ஆனால், இந்த ஆண்டு எல்லாமே தலைகீழ்… கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பினால் கேரளாவின் சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து நிற்கிறது. ஏனெனில், அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி தவிக்கின்றனர்.
கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், ஆலப்புழா மற்றும் கோட்டயம் குமரகத்தில் உள்ள படகு இல்லம் மிகப் பிரசித்தி பெற்றது. காஷ்மீர் மாநிலத்தில் படகு சுற்றுலாவுக்கு பிறகு, இங்குள்ள படகு இல்ல சவாரிதான் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் படகு இல்லங்களில் பயணம் செய்ய ஏராளமான மக்கள் குவிவது வழக்கம்.
ஆலப்புழா, குமரகத்தில் சுமார் 1,500 சொகுசு படகுகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு படுக்கையறை துவங்கி 10 படுக்கையறை வசதிகளுடன் கூடிய படகுகள் உள்ளன. ஒரு படுக்கையறை கொண்ட படகுக்கு ஒரு நாள் உணவு உள்பட வாடகை ₹6 ஆயிரம் (வரி நீங்கலாக) கட்டணமாகும். முதல் நாள் காலை 11 மணி முதல் மறுநாள் காலை 9 மணிவரை படகில் நாம் ஜாலியாக பயணிக்கலாம்.
இப்படகுகளில் காலை குளிர்பானத்தில் துவங்கி, மதியம் நமக்கு விருப்பமான சிக்கன், மீன், காய்கறி உள்பட கேரள பாரம்பரிய உணவு, மாலையில் டீ அல்லது காபி மற்றும் நொறுக்குத்தீனிகளும் கிடைக்கும். இரவில் சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. மறுநாள் காலை சிற்றுண்டியுடன் படகு சுற்றுலா இனிதே முடிவுபெறும். நமக்கு உணவு சமைத்து தர, படகிலேயே ஒரு சமையல்காரர் இருக்கிறார்.
முதல் நாள் காலை சொகுசு படகு ஓடத் துவங்கினால், மாலை 6 மணிவரை நாம் படகுக்குள் சுற்றிக்கொண்டு இருக்கலாம். இரவில் ஏதாவதொரு இடத்தில் படகை கட்டிப் போட்டுவிடுவர். படகுக்குள் ஏசி, டிவி வசதிகளும் உண்டு. பகலில் மட்டும் படகு சவாரி செய்வோருக்கு கட்டணம் குறைவு. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்ததால், இங்கு ஆண்டு முழுவதும் மக்கள் குவிகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஆலப்புழா, குமரகத்தில் படகு சுற்றுலா பெரிதும் முடங்கியிருக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் இன்றி படகுகள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் சுற்றுலா படகு இல்லங்கள் செயல்படாததால், சுமார் ₹100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 10-க்கும் மேற்பட்ட சொகுசு படகு உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலை என்று மாறுமோ? கடவுளுக்கே வெளிச்சம்!

Leave a comment
Upload