
சென்னையில் ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் புதிய உச்சத்தை அடைந்து, சாதனை படைத்துள்ளது தெற்கு ரயில்வே.
‘கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை ரயில்வே கோட்டம் எப்போதும் இல்லாத வகையில், ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் முதன்முறையாக, கடந்த மாதம் 1-ம் தேதி நவீன வடிவமைப்பு கொண்ட 35 பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் போக்குவரத்து துவங்கியது.
இந்த சரக்கு ரயில் வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் இருந்து அரியானா மாநிலம், பரூக்கா நகர் ரயில் நிலையம் வரை சென்றது. இந்த சரக்கு பெட்டிகள் மூலம் கூடுதலாக பொருட்களை ஏற்றிச் செல்ல முடிகிறது. இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 58 சதவிகித சரக்கு ரயில் போக்குவரத்து சேவை அதிகரித்துள்ளது. ஒரு சரக்கு ரயிலில் 27 பெட்டிகள் வீதம், ஒரு பெட்டிக்குள் 11 அல்லது 12 கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. அவ்வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டு உள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்கப்பட்ட 35 சரக்கு ரயில்கள் மூலமாக, சுமார் ₹10 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெற்கு ரயில்வே. குறிப்பாக ஒரு சரக்கு ரயில் மூலமாக மட்டுமே ₹29 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு ரயில் மூலமாக வந்த வருவாய் ₹6.40 கோடி மட்டுமே.
“தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதனால் சரக்கு ரயில் போக்குவரத்து மூலமாக இரட்டிப்பு வருவாய் கிடைக்கிறது” என ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

Leave a comment
Upload