தொடர்கள்
பொது
ரவுடிகளை கட்சியில் சேர்க்கிறார்கள்!- லிவிங்ஸ்டன்

20200804135449131.jpg

ரவுடிகளை கட்சிக்குள் சேர்க்க பகீரத முயற்சி?

சமீப காலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இவர்களுக்கு இடையே கஞ்சா விற்பனை, மாமூல் வசூலித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக அடிதடி தகராறுகள், வெட்டு, குத்து, கொலைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் அடுத்தகட்டமாக, தன்னை கொல்ல எதிர்கோஷ்டியினர் முயலலாம் என்ற அச்சத்தில் ஒருசில ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளுடன் வலம் வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, இதுபோன்ற ரவுடிகளை தங்களது கட்சிக்குள் இணைக்க ஒரு சில பிரபல கட்சிகளும் முயன்று வருகின்றன. அவற்றை பார்ப்போமா?

திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி இரவு 10 மணியளவில் 2 பேர் பைக்கில் சென்றனர். பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவர் கையில் ஒரு பெரிய பை வைத்திருந்தார். அங்கு போலீசார் நிற்பதை அறிந்து, பைக்கை ஓட்டி வந்தவர் திடீரென திருப்பினார். இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால் பையில் வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் நடு ரோட்டிலேயே வெடித்துச் சிதறின. அங்கிருந்த கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர் போலீசார் பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பழைய குற்றவாளிகளான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த அசோக் (30), வல்லம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த விக்கி (எ) வினோத்குமார் (30) எனத் தெரியவந்தது. மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டை சேர்ந்த பிரபல ரவுடி சீனு (எ) குள்ளசீனு வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அசோக்குமார் 2-வது குற்றவாளி ஆவார்.

இதனால் அசோக்குமாரை கொல்வதற்கு குள்ள சீனுவின் ரவுடிக்கூட்டம் நீண்ட நாட்களாகவே காத்திருக்கிறது. இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தனது மனைவியுடன் கேளம்பாக்கம், ஜோதி நகரில் ஒரு வாடகை வீட்டில் அசோக்குமார் குடியேறினார். இவருக்கு கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டை சேர்ந்த சக ரவுடிகளுக்கு திருப்போரூர் அருகே சென்னேரி காட்டுப் பகுதியில் கடந்த 28-ம் தேதி இரவு அசோக்குமார் மது விருந்து அளித்தார்.

மது விருந்து முடிந்ததும் நள்ளிரவில் அசோக்குமாரை வீட்டில் விடுவதற்காக, மற்றொரு ரவுடி விக்கி (எ) வினோத்குமார் பைக்கில் கேளம்பாக்கத்துக்கு அழைத்து சென்றார். அப்போதுதான் வினோத்குமார் பாதுகாப்புக்காக பையில் வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் விபத்தாக வெடித்துச் சிதறியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு, வினோத்குமாரை ஸ்டான்லி மருத்துவமனையிலும், அசோக்குமாரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி மாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அசோக்குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கேளம்பாக்கம், ஜோதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அன்றிரவு 10 மணியளவில் கொண்டு சென்றனர்.
பின்னர் மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் போலீசார் அசோக்குமாரின் வீட்டை சோதனை செய்தனர். இச்சோதனையில், அவரது வீட்டில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த குண்டுகளை பாதுகாப்பாக மீட்டு, மண் நிரப்பிய வாளியில் வைத்து கீரப்பாக்கம் கல்குவாரிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு சென்றனர். பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் இந்த வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்படும் என போலீசார் கூறுகின்றனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் உள்பட, செப்டம்பர் 1-ம் தேதி காலையில் செங்கல்பட்டை சேர்ந்த அன்வர் (31), ஆரோன் (30), ஆகாஷ் (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வெடிகுண்டுகள் வைத்திருக்கும் பல்வேறு ரவுடிகளும் பிடிபடுவர் என போலீசார் கூறுகின்றனர்.

இதே போன்று கஞ்சா விற்பனை தொடர்பான மோதல் தொடர்பாக, கேளம்பாக்கம் அருகே கொளத்தூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்த லோகேஸ்வரன் (19) என்பவரின் தலைமையில், கடந்த 31-ம் தேதி மாலை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) உள்பட 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் கார்த்திக், சஞ்சய், பரமசிவம், விக்கி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விஜி என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.

இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடி கோஷ்டிகளை, ஒரு பிரபல கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க அக்கட்சி நிர்வாகிகளே முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘நெடுங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (33) மீது பீர்க்கன்காரணை, சேலையூர், ஓட்டேரி, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தலைமறைவு குற்றவாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு கட்சி விழாவில் சூர்யா கலந்து கொள்வதாக தெரியவந்தது. அவரை பிடிக்க முயற்சித்தோம். அதற்குள் அவர் அக்கட்சியின் முக்கிய பிரமுகரின் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார். அவரது காரில் சூர்யா ஏறி சென்றதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என ஆதங்கத்தை தெரிவித்தனர்.

ரவுடிகளின்றி இன்று அரசியல் இல்லை என்பதே நம் தலைவிதி!