தொடர்கள்
Daily Articles
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - 15 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்!

20201104065650217.jpeg

கண்ணபிரான் இடையனாய் வளர்ந்து வெண்ணெயிலே ஆசை கொண்டு, அதையும் களவுசெய்து, உண்டான் என்பதையும் அதற்காக அவன் பட்ட பாடுகளையும் பல விதங்களில் அனுபவித்தோம். உண்மையில் அவனுக்கு வெண்ணெயில்தான் விருப்பம் என்றால் அதற்காக அவன் இவ்வளவு பாடுபட வேண்டுமா? அல்லது களவு செய்துதான் உண்ண வேண்டுமா? அதுவல்ல அவனுடைய திருவுள்ளம்; அவன் களவு செய்து உண்டால் தானே அவனுடைய தாயான யசோதை கோபம் கொண்டு அவனைக் கட்டுவாள்! அப்படிக் கட்டினால்தானே அவனுடைய எளிமைக் குணம் வெளிப்படும். அப்போது தானே ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அந்த எளிமைக் குணத்தில் ஈடுபடுவார்கள்! இதனால்தான் கண்ணபிரான் ஸாமர்த்யம் உடையவனாயிருந்தபோதும், தன் ஸாமர்த்யத்தையெல்லாம் மறைத்துக் கொண்டு தன் களவு நன்கு வெளிப்படும்படி நடந்து கொண்டான். இதைத் தான் பொய்கை ஆழ்வாரும் ‘உறிவெண்ணெய் தோன்ற உண்டான்’ (முதல் திருவந்தாதி - 18) - தன்னுடைய களவு நன்கு வெளிப்படும்படி உண்டான் - என்றருளிச் செய்கிறார்.

களவு வெளிப்பட்டவாறே யசோதை கோபம் கொண்டாள். அவனை ஓர் உரலோடு கட்டி வைத்தாள். கண்ணபிரானைக் களவு செய்யாமல் தடுக்க வேண்டுமானால் அவனைக் கட்டித்தான் போட வேண்டும். ஆனால் அவனை ஒரு கம்பத்தில் கட்டி வைக்கக்கூடாதோ! ஏன் உரலோடு கட்டினாள் யசோதை?

இதற்கு ஒரு அழகான விடை கேண்மின்.
கண்ணபிரானுடைய கைக்கு எட்டக் கூடாது என்று பால், வெண்ணெய் முதலியவற்றை உறிகளிலே சேமித்து மிக உயரத்திலே தொங்கவிட்டு வைப்பாளாம் யசோதை. இவன் பலமுறை முயன்றும் அது கைக்கு எட்டாதபடி இருக்கவே, ஒரு வழி கண்டு பிடித்தான். ஓட்டையாகிப் போய், ஒருவருக்கும் பயன்படாத மரவுரலொன்று முலையில் கிடந்தது. அதை உருட்டிக் கொண்டு வந்து உறியின் கீழே கவிழ்த்துப் போட்டான். அதன் மேலே ஏறி நின்று உறியிலிருந்து வெண்ணெயைக் களவு கண்டான்; வயிராற விழுங்கினான் என்கிறார் பெரியாழ்வார்:
பொத்தவுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆரவிழுங்கிய
அத்தன்...
(பெரியாழ்வார்திருமொழி 1-9-7)

வெண்ணெயைக் களவு காண்பதற்கு உரலைப் பயன்படுத்தினான் என்றால், அது ஒருவர்க்கும் பயன்படாத ஓட்டை உரலாகத் தான் இருக்க வேணுமோ! நல்ல உரலானால் கண்ணனுக்கு ஆகாதோ? என்ற கேள்வி எழலாம். இதற்கு விடையை மணவாளமாமுனிகள் ஸாதிக்கிறார்.
“நல்ல உரலானால் நடுவே தேடுவார் உண்டாயிருக்குமென்றாய்த்து பொத்தவுரலைத் தேடியிட்டுக் கொண்டது”
என்று மணவாளமாமுனிகள் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளது மிகவும் ரஸமானது. இவன் களவு செய்வதற்காக உரலை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் அந்த உரலைத் தேடிக் கொண்டு வந்து இவனைப் பிடித்துவிட்டால் களவு வெளிப்பட்டுவிடுமே! எனவே ஒருவரும் தேடாத ஓட்டை உரலைத் தேடிப் பிடித்து அதன் துணை கொண்டு களவு செய்தானாம்! அப்படியும், எப்படியோ இவனுடைய களவு வெளிப்பட்டு விட்டது; அகப்பட்டுக் கொண்டான். உடனே யசோதை இவனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் கிடைத்ததொரு தாம்பைக் கொண்டு இவனை அந்த உரலிலேயே கட்டினாள். திருடனுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் திருடனோடு கூடவே விலங்கிட்டுச் சிறை வைப்பது போலக் கண்ணனுடைய களவுக்கு உடந்தையாக இருந்த உரலோடு சேர்த்துக் கண்ணனைக் கட்டினாள் யசோதை. அவள் கண்ணனைக் கட்டியதை மற்றையாழ்வார்களைக் காட்டிலும் மிக அழகாக விவரித்தவர் மதுரகவி ஆழ்வாரே!

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்
என்கிற அவருடைய பாசுரத்திற்கு ஆசாரியர்கள் அருளிச் செய்துள்ள வ்யாக்யானங்கள் மிக மிக ரஸமானவை.

எப்படிப்பட்ட கயிற்றால் யசோதை கண்ணனைக் கட்டினாள் என்றால், கண்ணி-பலபல முடிச்சுகளை உடையதான, நுண்-மிகவும் மெல்லியதான, சிறு-மிகவும் சிறியதான தாம்பினால் யசோதை அவனைக் கட்டினாள். ஏன் இவனைக் கட்டுவதற்கு வேறு நல்ல கயிறு எதுவும் கிடைக்க வில்லையோ என்றால், இவனுடைய தீம்புகளைத் தடுப்பது, இவனைப் பிடிப்பது, கட்டுவது விடுவது, பசுக்களைக் கறப்பது, தயிர் கடைவது என்று யசோதைக்கு ஓயாத பணிகள் இருக்கின்றபடியால் கண்ணனைக் கட்டுவதற்கென்று நல்ல கயிறு தேடி வைத்துக் கொள்ள அவகாசமே கிடைக்கவில்லை. அப்படியே ஏதேனும் நல்ல கயிறு கிடைத்தாலும் அதைக் கொண்டு பசுக்களையும் கன்றுகளையும் கட்டுவதற்குப் பயன் படுத்துவாள். எனவே இனிமேல் எதற்கும் பயன்படாது என்கிற அளவிற்கு இற்றுப் போய்க் கிடக்கும் கயிற்றைக் கொண்டு தான் இவனைக்கட்ட வேண்டும்.

வேறொருவர்க்கும் பயன்படாத உரல் அவன் களவு காண்பதற்குப் பயன்பட்டதுபோலவே வேறெதற்கும் பயன்படாத கயிறே அவனை கட்டுவதற்கு பயன்படுகிறது. ஆக வேறொருவர்க்கும் பயன்படாத அநந்யார்ஹமான வஸ்துவே அவனுக்குப் பயன்படும் என்கிற சாஸ்த்ரார்த்தம் இங்கு உணர்த்தப்படுகிறது.

யசோதைப் பிராட்டி தன்னை அடிக்கடி தாம்பினால் கட்டுகிறாள் என்பதனால், கண்ணன் வீட்டிலுள்ள கயிற்றை யெல்லாம் துண்டுதுண்டாக அறுத்து வைத்து விட்டே வெண்ணெய் களவு காணப்போவான் போலும்! இவனைக் கையும் களவுமாக யசோதைப் பிராட்டி பிடித்துக் கொண்டால், ஒரு கையால் இவனைப் பற்றிக் கொண்டு மறுகையால் துண்டுக் கயிற்றையெல்லாம் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு தாம்பு வடிவமாக்கி அவனைக் கட்டுவாள். இவனை விட்டுவிட்டு, வேறு நீளமான கயிறு தேடியெடுக்கலாம் என்று பார்த்தால் இவன் காற்றில் கடியனாய் ஓடிவிடுவான். எனவே பல முடிச்சுகளையுடைய தாம்பைக் கொண்டு உரலோடு சேர்த்து இவனைக் கட்டும்போது அது ஒரு சுற்றுக்குக் கூட நீளம் போதாதிருந்தது. இன்னும் ஒரு துண்டைச் சேர்த்தாலும் அப்படியே நீளம் போதவில்லை. இப்படி எத்தனை கயிற்றைச் சேர்த்தும் நீளம் போராமல் போகவே யசோதை குறுவெயர்ப்பரும்பின முகத்துடன் தடுமாறுகிறபடியைக் கண்டான். தன்னைக் கட்ட முடியாது என்று நினைத்து இவள் ஓய்ந்து விட்டாளாகில் தன்னுடைய எளிமைக் குணத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் அவதரித்ததே வீணாகிவிடும் என்று நினைத்தான் கண்ணன். உடனே தன்னுடைய திருமேனியைச் சுருக்கிக் கொண்டு ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி ஆக்கிக் கொண்டான். இதைத்தான் மதுரகவியாழ்வார் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என்கிறார். பராத்பரனான எம்பெருமான் ஒரு பெண்ணின் கையால் கட்டுண்டு அடியுண்டு நின்றது அவனுடைய எளிமையை அன்றோ காட்டுகிறது. அந்தக் கட்டை அவிழ்த்துக் கொண்டு போக சக்தியுடையவனாக இருந்த போதும், சக்தியில்லாதவன் போல் உரலில கட்டுண்டான்.
உறியார்ந்தநறு வெண்ணெய் ஒளியால் சென்று
அங்குண்டானைக்கண்டு ஆய்ச்சி உரலோடார்க்க
தறியார்ந்த கருங்களிறே போல நின்று
தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை

என்று அருளிச் செய்கிறார் திருமங்கை ஆழ்வார் (பெரியதிருமொழி 2-10-6). இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள்.

மதித்து ஊரிலே மூலையடியே உழற்றிக் கொண்டிருந்த ஆனயானது யாத்ருச்சிகமாகப் பிடிபட்டு, ஒரு கம்பத்திலே சேர்த்துக் கட்டுண்டு நிற்குமாபோலே, தான் கண்டபடி திரிந்தவள் கட்டுண்டு, கண்ணில் பரப்படையப் பரப்பு மாறும்படி கண்ணநீர்மல்கி ப்ரதிக்ரியை அற்று நின்றவனை. (தன்மையானை) மேன்மை இடுசிவப்பு: இதுவேயாயிற்று இவனுக்கு ஸ்வபாவம்.

எல்லாரையும் நியமிக்கக் கூடிய ஸர்வேச்வரன் இப்படிக் கட்டுண்டு நின்று அஞ்சி வருந்தினான் என்றால் இது நடந்திருக்குமோ என்ற ஸந்தேகம் நமக்கு எழலாம். நமக்கென்ன! எம்பெருமானாருக்கே இந்த ஸந்தேகம் இருந்ததாம். அந்த ஸந்தேகம் தீர்ந்த விதத்தையும் ஒரு பாசுரத்தின் வ்யாக்யானத்தில் அருளிச் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை:
ஒளியா வெண்ணெயுண்டானென்று
உரலோடாய்ச்சி யொண்கயிற்றால்
விளியாவார்க்க வாப்புண்டு விம்மியழுதான்.
(பெரிய திருமொழி 6-7-4)

உடையவருடைய சீடரான வங்கிப்புரத்து நம்பி என்பவர் உடையவரைப் பலமுறை அணுகி “அடியேனுக்குத் திருவாராதனக்ரமம் பற்றி அருளிச் செய்ய வேணும்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் உடையவருக்கு அதற்கு அவகாசமே கிடைக்காமல் போயிற்று. இப்படியிருக்கையில் ஒருநாள் தற்செயலாக கூரத்தாழ்வானுக்கும், ஹநுமத்தாஸர் என்பவருக்கும் திருவாராதனக்ரமம் உபதேசிக்க நேர்ந்தது. முடிகிற ஸமயத்திலே அங்கே வங்கிபுரத்துநம்பி வந்துசேர, உடையவருடைய திருவுள்ளம் துணுக்கென்று அஞ்சி நடுங்கிற்று. ‘இத்தனை நாள் கேட்டும் இவருக்கு உபதேசியாது இருந்துவிட்டோம். இன்று இவ்விருவர்க்கு உபதேசிக்கும் போதாவது இவரையும் கூட்டிக் கொண்டு உபதேசித்திருக்கலாம். அதுவும் நாம் செய்திலோம். இப்படி இருவகைக் குற்றங்களுக்கு ஆளானோமே’ என்று அஞ்சி நடுங்கின உடையவர் வங்கிப்புரத்து நம்பியைப் பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்தார்: “எல்லோரையும் நியமிக்கக் கூடிய எம்பெருமானும் கூட யசோதையிடம் அஞ்சி நடுங்கக் கூடுமோ என்று ஸந்தேகங் கொண்டிருந்தேன். இன்று (சிஷ்யரான) உம்மிடத்திலே நான் அஞ்சி நடுங்கினேன் ஆகையாலே அது நடந்திருக்கக் கூடியதே என்று அறிந்தேன்” என்றாராம்.

இப்படி விம்மியழுத கண்ணபிரான் அந்த உரலையும் இழுத்துக் கொண்டு போனான். ஏன் கட்டின கட்டை அவிழ்த்துக் கொண்டு போகவில்லை என்றால்,
மணமருவு தோளாய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
புணர் மருதமிற நடந்த.....
(பெரிய திருமொழி 8-3-4)

“பந்தித்தவற்றை அறுத்துக் கொண்டு போகை யன்றிக்கே கட்டின உரலையும் இழுத்துக் கொண்டு போய். பகதத்தாதிகள் விட்ட அஸ்த்ரங்களாகிலிறே நேரே மார்வைக் காட்டி நிற்பது. பரிவுடையளாய்க் கட்டினதுக்கு ப்ரதிக்ரியை இல்லை. ஆகையால் அத்தையும் இழுத்துக் கொடு போய்”
என்றருளிச் செய்கிற பெரியவாச்சான் பிள்ளை, பெரியதிருமொழி 2-10-6 உரையில்,

பிரதிகூலரான துர்யோதனாதிகள் கட்டின கட்டாகிலிறே அவிழ்த்துக் கொண்டு போகவல்லது. அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டானிறே!”
என்றருளிச் செய்கிறார். அழகிய மணவாளப்பெருமாள்நாயனார்
செருக்கனான ஸார்வபௌமன் அபிமத விஷயத்தின் கையிலே யகப்பட்டு ஒரு கருமுகை மாலையாலே கண்டுண்டால் அதுக்கு ப்ரதிக்ரியை பண்ணமாட்டாதே யிருக்குமா போலேயிறே இவள் கட்டின கட்டுக்கு ப்ரதிக்ரியை பண்ணமாட்டாதே யிருந்த விருப்பும். பிறருடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்குமத்தனையல்லது தன் அநுக்ரஹத்தாலே வந்த கட்டுதன்னாலுமவிழ்க்கப் போகாது என்கை.
என்று (கண்ணிநுண்சிறுத்தாம்பு முதல் பாசுர வியாக்கியா னத்தில்) அருளிச் செய்துள்ளது சுவைக்கத்தக்கது.