தொடர்கள்
Daily Articles
வாசி யோசி - 15 - வேங்கடகிருஷ்ணன்

20201103202024526.jpg

வெற்றிக்கு சில புத்தகங்கள்...

வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்

20201103202554741.jpg

கட்டுகளிலிருந்து விடுபடுங்கள்.....

அமெரிக்காவில் வாழ்ந்த ஹாரி ஹௌடினி சென்ற நூற்றாண்டின் ஒரு அதிசய மனிதர். நம் முந்தய தலைமுறைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனெனில் அவர் உலகம் முழுவதையும் தன்னைப்பற்றி பேசவைத்தவர், தன்னுடைய எண்ணங்களின் வலிமையால்.

அந்த வலிமையின் வெளிப்பாடே... கட்டுகளிருந்து இருந்து விடுபடுவது.

இங்கே கட்டுகளிருந்து விடுபடுதல் என்றால் என்ன?.. நம்மையும் நம் எண்ணங்களையும் கட்டும் அனைத்துமே கட்டுகள் தான். ஹௌடினி ஆரம்பகாலத்தில் ஒரு தொழில்முறை மந்திரக்கலைஞராக மேடை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதில் அவர் ஒரு சாதாரண கயிற்றில் தொடங்கி, இரும்புச்சங்கிலிகள் மற்றும் கைவிலங்குகள் எதுவாக இருந்தாலும் அதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வார். மேலும், அவரை கை, கால்களையும் கட்டி ஓர் அறைக்குள் அடைத்து, எத்தனை காவல்கள் போட்டாலும், எந்த பிரச்னையுமின்றி யாரும் அறியாமல் வெளியே வந்துவிடுவார். மேலும் அவர் கட்டுகளிருந்து வெளிவரும் நுணுக்கங்களில் கவனத்தை செலுத்தினார் . சில நிகழ்ச்சிகளில் ஹௌடினி மேடையில் நின்று கொண்டிருப்பார், அவரை மிகவும் இறுக்கமாக கயிராலும், சங்கிலியாலும் அசைக்க கூட முடியாதபடி கட்டுவார்கள். அதனுடன், பல பூட்டுகளைப்போட்டு பத்திரப்படுத்துவார்கள். இந்த பூட்டுகளையும், கயிறுகளையும் சில நிமிடங்களிலேயே தகர்த்து எறிந்து ஹௌடினி வெளியே வந்து விடுவார்.

ஹௌடினியின் இந்த தகர்த்தெறியும் வித்தை, அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் அதிசயிக்க வைத்தது. எந்த ஒரு புதுவகை போட்டாலும் ஹௌடினியை கட்டுப்படுத்த முடியவில்லை. தன் திறமையை மேலும் மேலும் மெருகேற்றிக்கொள்ள அவர் பலப்பல புதிய சோதனைகளை மேற்கொண்டார். உதாரணமாக.. தண்ணீர் நிரம்பிய பால் கேன் ஒன்றிற்குள் அவரைப்போட்டு அடைப்பார்கள், அதிலிருந்து அவர் வெளியே வரவேண்டும். இது சவாலானது மற்றும் சிரமானதும் கூட. மூச்சை அடக்கியபடியே அவர் வேலை செய்து தடைகளிருந்து அவர் வெளியே வரவேண்டும். இதில் அவர் மூழ்கி இறந்தும் போகலாம். இதையும் அவர் தகர்த்தார். இந்த தந்திர வெற்றியின் சுவை அவருக்கு மிகவும் பிடித்துப்போக, மிக மிக ஆபத்து நிறைந்த சவாலை எதிர்கொள்ள துணிந்தார் ஹௌடினி. இந்த முறை அவர் உடல்முழுவதும் சங்கிலியால் பிணைத்து, அவரை தலைகீழாக தண்ணீர் நிரம்பிய ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் இறக்குவார்கள், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருப்பதாலும், அவரால் நகரக்கூட முடியாது. மேலும் தண்ணீருக்குள் இருப்பதால் மூச்சு விடுவதும் சிரமம். இந்த கொலைகாரப் பெட்டியிலிருந்தும் அவர் அநாயாசமாக வெளியே வந்தார். மேலும், இதே தந்திரத்தை அவர் பல ஆண்டுகளாக செய்து காட்டிக் கொண்டிருந்தார்.

ஹாரி ஹௌடினியின் இந்த வித்தைகள் எல்லாம் நிஜமா அல்லது ஏமாற்று வேலையா... என்ற வாதமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது....

சரி... இதிலிருந்து நாம் தெரிந்து கொண்டு, கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்று நினைக்கிறீர்களா..? ஹௌடினியை ஒரு வெறும் மந்திர வித்தைக் கலைஞராக மட்டும் பார்க்கக்கூடாது. அவருடைய நுணுக்கங்கள் மற்றும் அணுகுமுறைகளை நாம் புரிந்து கொண்டால் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் மற்றும் உத்தியோகத்திலும், நாம் அவற்றை பயன்படுத்தி வெற்றிகளை குவிக்க முடியும்.

நாமும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பிரச்சனைகளை தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உதாரணமாக... நம்முடைய தொழிலில் நமக்கு வழக்கமாக பெரிய அளவில் ஆர்டர் தரும் நமது வாடிக்கையாளர் நமக்கு ஆர்டர் கொடுப்பதை நிறுத்தினால் நமது தொழில் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கும்.

தண்ணீர் பெட்டிக்குள் உள்ள ஹௌடினிக்கும் இதே சூழ்நிலைதான். வாழ்ந்தாக வேண்டும். நமக்கு, நம் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். இப்படி ஒரு சூழ்நிலையை நாமெவ்வாறு எதிர்கொள்வது..?

ஹௌடினி இந்தச் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கிறார்?

அவர்.. முதலில், அவரை பிணைத்தித்திருக்கும் கயிறுகள், கட்டுகள், பூட்டுகள் மற்றும் மூழ்கடிக்க நினைக்கும் தண்ணீர் இவையனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார். பதற்றத்தில் தன் நிலைமையையும், இயலாமையையும் நினைத்து புலம்பி நேரத்தை வீணடிப்பதில்லை. மாறாக அவரின் சிந்தனை, நேரம், முயற்சி மற்றும் புத்தி என அனைத்தையும் குவித்து, அந்த தடைகளிருந்து எப்படி விடுபடவேண்டும் என்பதிலேயே செயல் படுத்துகிறார். இருக்கும் கொஞ்ச நேரத்தில் அவருக்கு உயிர் பிழைக்க ஒரே வழி இதுவே. நாமும் இதைப் போலவே, அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நினைத்தும் நம்மிடம் உள்ள குறைபாடுகளை நினைத்தும் புலம்பத் தேவையில்லை. வாழ்க்கை என்பதே பிரச்சனைகளையும், சவால்களையும் நாம் எதிர்கொள்வதுதான். இங்கு எதிர்கொள்ள முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. நம்புங்கள்..

அதை சந்தோஷமாக எதிர்கொள்பவன் வெற்றி கொள்கின்றான். எதிர் கொள்ள தயங்குபவன் தோற்கிறான். நாம் உண்மையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குவதில்லை, அதன் விளைவுகளை நினைத்தே பயம் கொள்கிறோம். அதன் விளைவுகளை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி சொல்லித்தருவதே இந்த புத்தகம்.

அப்படி எதைத்தான் இந்த புத்தகம் (The HOUDINI SOLUTION - Emie Schenck) சொல்லித்தருகிறது?

ஒரு பிரச்சனையை முதலில் ஒப்புக்கொண்டு விட்டால் புத்தி தெளிவாகி, எளிதில் அதற்கான தீர்வு கிடைத்துவிடும். நாம் எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும், சிறந்த மேலாளர் என்கிற பெயர் வாங்கி இருந்தாலும், நம்மை நம் குடும்பத்தினர் கொண்டாடினாலும், ஒரு பதற்றமான சூழ்நிலையை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்து வாங்கிய நல்ல பெயர்கள் அனைத்தும் மாறிவிடும்.

பெரும்பாலோனோர் இங்குதான் தடுமாறி விடுகிறார்கள். இந்த சமயத்தில் தான் ஹௌடினி நமக்கு உதவிக்கு வருவார்... இந்த புத்தகத்தின் மூலம், சாதாரண நேரங்களில் கூட நமது புத்திக்கு எட்டாத சில கோணங்களிருந்து யோசிக்க இந்த புத்தகம் கைகொடுக்கும். புதுமையான தீர்வுகள் கிடைக்கும். வழக்கத்திலிருந்து மாறுபட்டு யோசிக்க நம்மை ஊக்குவிக்கும்.

இந்த “ஹௌடினி தீர்வு” மிக சுலபமானது, தெளிவானது. இது சொல்வது ஒன்றைத்தான். கட்டுக்குள் சிக்கியிருக்கும்போது அதைப்பற்றி நினைத்து, உங்கள் சக்தியை.வீணாக்காதீர்கள்.. மாறாக, அதற்கான தீர்வை தீவிரமாக யோசியுங்கள்.. போதும். (இராமாயணத்தில் இந்திரஜித்தின் ப்ரம்ஹாஸ்திரத்தில் கட்டுண்ட போது அதைப் பற்றி கவலைப் படாமல், அதிலிருந்து எப்படி விடுபடுவது, அந்தச் சூழ்நிலையை எப்படி தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்று யோசித்து, வெற்றிகண்டார், விளைவு லங்கா தகனம் )

அவர் வெற்றியின் சூத்திரங்களாக சொல்வது பின்வரும் முக்கிய விஷயங்களைத்தான்.

1. வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கண்டவர்கள் , தடைகளைப் பார்த்து பயந்ததில்லை. மாறாக, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதே வெற்றியின் ரகசியம்.

2. புதிதாக ஒன்றை யோசிக்கவோ, செய்யவோ பயப்படுகிறார்கள். பழையதை மாற்றிக்கொள்ள தயங்குகிறார்கள். இது மாறவேண்டும்.

3. எந்தவொரு சின்ன யோசனைகளையும் அலட்சியம் செய்யாதீர்கள். பெரிய யோசனைகள் தரும் பலன்களைவிட, சின்ன யோசனைகளின் பலன் பெரிதாக இருக்கும்.

4. உலக முன்னேற்றத்தின் மிகப் பெரிய எதிரி.. பழமையே ஆகும். இது மிகப்பெரிய அசட்டுத்தனம் . அதனால் யாருக்கும் எந்த பயனுமில்லை.

5. எந்த ஒரு வேலைக்கும் கெடு வைத்துக்கொள்ள முடியாது என்று நினைக்காதீர்கள். சில சமயங்களில் நெருக்கடியான நேரத்திலும், ஆகச்சிறந்த தீர்வுகள் வரலாம், வரும்...

எனவே ஹௌடினியின் தீர்வோடு... வாழ்க்கையில்.. வெற்றிநடை போடுங்கள்.