‘உப்பு ... உப்பேய்..’ என்று தெருவில் ஒலிக்கும் குரலுக்கு, அம்மா நம்மை முறத்துடன் துரத்துவார். 20 பைசா கொடுத்தால் உப்புக்காரர் ஒரு படி உப்பும், இரண்டு கை நிறைய ‘கொசுறு’ உப்பும் அள்ளிப்போடுவார். அது பைசாக்களின் காலம். திடீர் என்று ‘உப்பு விற்பவரை தெருக்களில் காணவில்லை. உப்புக்கு ‘கல் உப்பு’ என்று நாமகரணம் சூட்டி, பேக்கட் செய்து டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வைத்து விட்டார்கள். “அயோடின் இல்லாத உப்பையா இவ்வளவு காலம் சாப்பிட்டீர்கள்?” என்று நம்மை குழப்பி, டாட்டாக்கள் “சால்ட்” விற்க ஆரம்பித்தனர்.
“உப்பு வியாபாரிகள் காணவில்லை’ என்று சிந்தனை வந்த போது, அவர்களைத் தொடர்ந்து இன்னும் நிறைய பேர் காணாமல் போனது நெஞ்சில் உரைத்தது. உரத்த குரலுடன் நம்மை ஈர்த்து, “நம் வாழ்வில் ஒரு அங்கமாக, பால்யத்து தெருக்களில் உலா வந்த வியாபாரிகள் எல்லாம் எங்கே போனார்கள்?” என்ற நினைப்பு அரித்தது.
“வளையல் விற்பவர்கள், பித்தளை பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவர், கத்தி, கத்திரிக்கோலை சாணை பிடிப்பவர், வெள்ளை ஐஸ் கட்டியைத் துருவி, வண்ணம் சேர்த்து குச்சியில் செருகி தருபவர், ஜவ்வு மிட்டாய் விற்பவர் (கையில் ரோஸ் கலரில் கடிகாரம் கட்டி விடுவாரே!) பஞ்சு மிட்டாய் விற்பவர், தயிரும், நெய்யும் தலையில் சுமந்து வந்து விற்கும் ஆச்சி, கிழங்கு விற்பவர், காட்டு விறகு சுமந்து வந்து விற்பவர், கெரசின் வண்டிக்காரர், குறி சொல்பவர், அதிகாலையில் உடுக்கையை அடித்து பலன் சொல்லும் குடுகுடுப்பைக்காரர், பலூன் விற்பவர், ஜாக்கெட் துண்டுகள் விற்பவர், செம்பு, பித்தளை உலோக துண்டுகளை எடுத்துக்கொண்டு பேரிச்சம் பழம் தருபவர். குச்சி ஐஸ் விற்பவர், கோலி சோடா, கலர் பானங்களை மாட்டு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு வருபவர், மண்பானைகள், அலுமினிய பாத்திரங்கள் விற்பவர், பனை ஓலை காத்தாடி விற்பவர், கலர் காகித கண்ணாடி விற்பவர் என்று காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.
இவர்களைத் தவிரவும் பொது இடங்களில் சினிமா பாட்டுகள் ஒலிக்க, இடைவிடாது சைக்கிள் ஓட்டுபவர், கழைக்கூத்தாடி, மோடி வித்தை செய்பவர், பாம்பாட்டிகள் போன்றவர்கள் மக்களை உற்சாகப்படுத்தி அதன் மூலம் தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். ஆரவாரம் மிக்க தெருவின் காட்சிகள் இன்று இல்லை.
நகரமோ, கிராமமோ, எந்த இடம் என்றாலும் அங்கு வீதிக்கென்று குரல்கள் இருந்தன. அந்தக் குரல்கள் மக்களின் வாழ்வோடு இணைந்து வாழ்ந்தன. தயிர்க்காரம்மா வாசலில் குரல் கொடுத்தால் “மணி எட்டரை ஆகி விட்டது” என்று பரபரத்து பள்ளிக்கு ஓடிய காலம் அது. பொருளை மட்டும் விற்று விட்டு செல்லாமல், நம் வீட்டில் ஒருவராக நம் சுக துக்கங்களில் அவர்களும் பங்கு கொண்டனர். இப்போது வீதியில் கேட்கப்படும் குரல்கள் ‘டேப்பில்’ பதிவு செய்யப்பட்ட குரல்கள், வெங்காயம் விற்பவர் கூட அலட்டிக் கொள்ளாமல், ‘குரல் பதிவு’ கொண்டு கூவி விற்கிறார். இந்த இயந்திரக் குரல்கள் பெரிதாக நம்மை ஈர்ப்பதும் இல்லை, நம்முடன் ஒட்டுறவு வைத்துக் கொள்ள அவை முற்படுவதுவும் இல்லை.
இந்த நினைவுகளில் ஆழ்ந்திருந்த போது என் கவனத்தைக் கலைத்தது அந்த பதிவு செய்யப்பட்ட குரல் “சாணை பிடிக்கிறதேய்” என்று ஒலித்தது. ‘ஆஹா இவர்கள் இன்னும் வருகிறார்களா?’ என்று சந்தோஷமாக வெளியில் சென்று அவரை நிறுத்தினேன். ஒரு கையில் ‘பெடல்’ செய்துக் கொண்டு, மறு கையில் கத்தியை பிடித்துக் கொண்டு, தீப்பொறி பறக்க கூர்மையாக்கும் சாகசம் நிறைந்த தொழில் அல்லவா அது? டூ வீலரில் சாணை பிடிக்கும் கருவியைக் கட்டிக் கொண்டு தன் தொழிலைச் செய்கிறார். அவரிடம் பேச்சு கொடுத்தேன். முப்பதுகளில் இருக்கும் அவர் பெயர் சமீர். பன்னிரண்டு ஆண்டுகளாக சாணை பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
“எந்த ஊர்?” என்று கேட்டவுடன் தன்னைப் பற்றிய விவரங்களை மளமளவென்று ஒப்புவித்தார். “சொந்த ஊர் சென்னை மா, மாமனார் ஊர் திருப்பதி. நான்கு மாசம் முன்பு மனைவிக்கு பிரசவ வலி எடுத்து ஆம்புலன்சில் திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் போனோம். வழிலேயே குழந்தை பிறந்து விட்டது. அப்போது தொப்புள் கொடி ‘கட்’ செய்யும் போது தவறு நடந்து, குழந்தைக்கு ரத்தம் வந்துக் கொண்டே இருந்தது.வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து அங்கு ஆப்ரேசன் செய்துள்ளார்கள். இதுவரைக்கும் அறுபதாயிரம் ரூபாய் செலவு ஆகி இருக்கு” என்றார்.
“எங்கு தங்கி இருக்கிறீர்கள், எப்படி செலவை சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டேன், வண்டியை ஆஸ்பத்திரி பார்க்கிங்கில் காசு கொடுத்து பார்க் செய்து விட்டு, ஆஸ்பத்திரிக்கு முன் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் இடத்தில் தங்கி கொள்கிறேன். ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிப்பேன். ஒரு சில நாளில் ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் சுற்றி சுற்றி வருவேன்” என்றார். “உங்களைப் போல சாணைப் பிடிக்கும் தொழில் செய்பவர்கள் இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள். வேறு தொழில் தெரியாதவர்கள், இந்த தொழிலை இன்னும் விட்டு விடாமல் இருக்கிறோம்” என்றார்.
“உங்களைப் பற்றி எழுதலாமா? என்றவுடன் “எழுதுங்க” என்று சொல்லி புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சம்மதித்தார். நம் வீட்டில் உள்ள ஒரு மொக்கை கத்தியை சாணை பிடிக்க கொடுத்து, மேலும் கொஞ்சம் பணமும் அவருக்குக் கொடுத்து அனுப்பினேன். சாப்பிட சொல்லியும் மறுத்து விட்டார். சாதனையாளர்களைப் பற்றியே எழுதுகிறோம், சாதாரணர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றியதால் சமீரைப் பற்றி எழுதினேன். தங்கள் வாழ்க்கை என்னும் போர்க்களத்தை வீதியிலே அமைத்து போராடி கொண்டிருக்கும் ஜீவன்கள் இவர்கள்.
காலம் மாறி விட்டது. பொருளாதார வளர்ச்சியின் அங்கமாக நாம் காய்கார பாட்டிகளையும், மளிகைக்கடை அண்ணாச்சிகளையும் தவிர்த்து விட்டு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்று, தேவையானது, தேவையற்றது எல்லாவற்றையும் வாங்கி டெபிட் கார்டைத் தேய்த்து விட்டு வருகிறோம். நம் சமையலறையும், குளிர்பதனப்பெட்டியும் மளிகைப் பொருட்களாலும், காய்கறி, பழங்களாலும் நிரம்பி வழிகிறது. வாழ்க்கையும் மாறித்தான் விட்டது.
‘புழுதி நிறைந்த தெருக்கள் - கான்க்ரீட் ரோடுகளாய் உருமாற்றம் அடைந்துள்ளன. அந்தச் சாலைகளில், முன்னர் ஒலித்த பல பழைய குரல்கள் இன்று இல்லை. கால மாற்றத்தில், “சோபா ரிப்பேர், கேஸ் ஸ்டவ் ரிப்பேர்” என்று புதிய குரல்கள் ஒலிக்கின்றன. எப்படியோ வீதியை நம்பி வாழும் சிலரால், நம் வீதிகள் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. சமீர் போன்றவர்கள் இன்னும் அங்கு தம் வாழ்க்கையைத் துயருடன் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த சமூக மாற்றமும் இவர்களை இன்னும் சென்று அடையவில்லை என்பது நிதர்சனம்.
Leave a comment
Upload