தொடர்கள்
கதை
“வெண்பொங்கலா…” - வெ. சுப்பிரமணியன்

20210008161533926.jpeg

சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்த அவளிடம், “நீ அனிதா தானே?” என்று கேட்டதும், ஒருவித பதட்டத்துடன், சுற்றிலும் பார்த்தவள், “உங்களை யாருன்னு எனக்கு அடையாளம் தெரியலே” என்றாள்.

“ஏம்மா, என்னையா தெரியாதுங்கிறே. இரண்டு வருஷமா அடிக்கடி, மாம்பலத்திலே இருக்கிற, என்னோட பிரௌசிங் சென்டருக்கு, வறியே? அதுகூடவா ஞாபகமில்லை?” என்றேன்.

முகம் வெளிறிப் போனவள், “ஐயா, உங்களை, இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை” என்று படபடத்தாள்.

“சரி, என்னைத்தான் தெரியாதுங்கிறே, ஆனால், ‘ஆகாஷ்’, யாருன்னு கண்டிப்பாத் தெரியணுமே?” என்றேன்.

“நீ… நீங்க… யாரோன்னு நினைச்சுகிட்டு, எங்கிட்டே பேசறீங்க” என்றவள், அருகே நின்று கொண்டிருந்த, குழந்தையை தூக்கிக் கொண்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

“அவளேதான் சந்தேகமேயில்லை” என்று முனகிக்கொண்டே, வெளியே வந்து பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரையுமே காணவில்லை.

அன்று இரவு தூங்கவில்லை. எண்ணம் முழுவதும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. இரண்டு வாரத்துக்கு முன்னாடி கூட அந்த ஆகாஷோட பார்த்தேனே!

“இவளுக்குத்தான் இன்னும் கல்யாணமாகலியே?. அப்படியே இரண்டு வாரத்துக்குள்ளே, வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருந்தாலும், எப்படி குழந்தை இருக்கும்? இதில ஏதோ மர்மமிருக்கு. எப்படியாவது ஆகாஷை நேர்ல பார்த்து பேசணும்” என்றபடியே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் மதியம், ஒரு ஹோட்டலுக்குள், அனிதாவும், அந்தச் சிறுவனும் நுழைவதைப் பார்த்தேன். அந்த ஹோட்டலுக்குள் நானும் நுழைந்தேன். மங்கலான வெளிச்சமிருக்கும் அந்த. டேபிளில் அவள் குழந்தையோடு அமர்ந்திருந்தாள்.

“அனிதா…” என்று நான் அழைத்ததும், அவள் எழுந்து ஓடி ஒளியாமல், ‘என்ன வேண்டும்’ என்பது போல் என்னை பார்த்தாள்.

“எனக்கு தெரியும் அனிதா!, நீயும் ஆகாஷும் ஒருவரையொருவர் எப்படி நேசித்தீர்களென்று. உங்களுக்குள்ளே எதாவது பிரச்சனையா? இந்த குழந்தை யாரு”? என்று, கேள்விகளால் அவளைத் துளைத்தேன்.

பின்னாலிருந்து, ஒரு முரட்டுக் கரம், என் தோளை இறுக்கியது. திரும்பிப் பார்த்த என்னிடம், “என்னோட வாங்க சார், உங்க எல்லாக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லறேன்” என்றான் அவன்.

“நேத்திக்கும், சூப்பர் மார்க்கெட்லே. நீங்க அவளை, தேவையில்லாத கேள்வி கேட்டு, டார்ச்சர் பண்ணினதா சொன்னாள்”, என்றான்.
அப்படியே, என்னைத் தள்ளிக்கொண்டு போய், ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தான். என் போறாத வேளையோ என்னவோ, ஐந்து நிமிடங்களுக்கு அந்தப் பக்கமே யாரும் வரவில்லை.

அந்த தடியன், என்னை நாயடி-பேயடி அடித்து பின்னிவிட்டான். இரத்தமே வராமல், ஊமைக்குத்தா குத்திவிட்டு, “போதுமா, இல்லே, இன்னும் அனிதாவைப் பற்றி எதாவது ‘டீட்டெயில்ஸ்’ தெரியணுமா?” என்று கேட்டு, என்னை அங்கேயே உதறி விட்டுவிட்டு, அவளையும், அந்த குழந்தையையும் கூட்டிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

வலியை பொறுத்துக் கொண்டு, சத்தம் காட்டாமல், முகம் கழுவியபடி, நானும் அந்த இடத்தை காலி பண்ணினேன்.

அடிவாங்கிய உடம்பின் வலி தீர, ‘ஆயில்-மஸாஜ்’ செய்துகொள்ள, திருச்சியில், கல்லணையருகே இருக்கும், ஆயுர்வேத வைத்திய சாலைக்கு, அன்றே போய்ச் சேர்ந்தேன்.

கரிகாலன் கட்டிவைத்திருந்த கல்லணைக்கு, அழகு சேர்த்துக் கொண்டிருந்த அந்த பூங்காவில், ஒரு மரத்தடியில், அமர்ந்திருந்தேன். அருகே காவேரியாறு, சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.

“போகட்டும் விடுங்க ஆகாஷ், எல்லாம் விதிப்படிதான் நடக்கும். அனிதாவோட இந்த முடிவுக்கு, நீங்க காரணமில்லை என்பது, எனக்கு தெரியும்”, என்று, பேசிக்கொண்டே போனவளோடு, கூட நடந்தவனைப் பார்த்ததும், அதிர்ந்து போனேன். ஓடிப்போய், அவர்கள் முன் நின்றேன்.
என்னைப் பார்த்ததும், “சார் நீங்களா? இப்போ, இங்கே எப்படி?” என்று கேட்டான் ஆகாஷ்.

“நீயாவது என்னை அடையாளம் கண்டுகிட்டயே ஆகாஷ்…! உன்னை லவ் பண்ணிகிட்டிருந்தாளே அனிதா…, அவ, சென்னையிலே, என்னை இரண்டு தடவை, நேர்ல பார்த்தும் அடையாளம் தெரியாத மாதிரி பேசிட்டாப்பா. இப்போ, ஒரு முரட்டு தடியனும், ஒரு பொடியனும், அவ கூடவே சுத்தறாங்க”, என்று சொன்னேன்.

அவன்கூட இருந்த பெண்ணோ, “வாங்க ஆகாஷ், உடனே போய் அனிதாவை பார்க்கலாம்” என்றாள்.

‘இவங்க யாரு?’ என்ற என்னிடம், “அனிதாவின் அண்ணி, பேரு கமலா. போனவாரம் சென்னையிலே, நடந்த சாலைவிபத்தில்…” என்று ஆகாஷ் ஏதோ சொல்லவந்தான்.

அதற்குள், கமலாவோ, “ஆகாஷ் பிளீஸ்… அந்த இன்ஸிடன்டைப் பற்றி, அனிதாவை நேர்ல நாம பார்க்கும் வரை, பேசவேண்டாமே…” என்றாள்.

“வாங்க, இன்னிக்கே சென்னைக்கு கிளம்புவோம்” என்று அவசரப் படுத்தினாள். நானும், அவர்களுடன் சென்னைக்கு கிளம்பினேன்.
அடுத்த நாள் காலையிலிருந்து, அனிதாவை தேடியலைந்துவிட்டு, லேசாக இருட்டத் துவங்கியதும், மெரினா கடற்கரையில், மூவரும் நடந்து கொண்டிருந்தோம்.

கடற்கரையில், ஒரு ஓரமாய் அமர்ந்துகொண்டு, மணலை நோண்டியபடியே, கடலலைகளை, விரக்தியாக பார்த்துக் கொண்டிருந்தாள் ‘அனிதா’.

ஆகாஷ்தான் ‘அனிதாஆஆ…” என்று கத்திக்கொண்டு, அவளருகே ஓடிப்போனான். கூடப்போன, அனிதாவின் அண்ணியோ ‘பளாரென்று’ அனிதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

சற்று தள்ளி, அலைகளில் கால் நனைத்துக் கொண்டிருந்தவன், கையில் இருந்த குழந்தையோடு, அனிதாவிடம் வந்து நின்றான். அவன்தான், அன்று ரெஸ்ட்-ரூமில் என்னை துவைத்தெடுத்த முரடன். அவனைப் பார்த்ததும் என் சப்த நாடியும் ஒடுங்கியது.

அந்த முரடனோ, “கமலா… எப்படியிருக்கே?” என்றதும், “என்னங்க…” என்று, கதறிக்கொண்டு, அவனை கட்டிக் கொண்டாள் கமலா. அந்த குழந்தையோ, “அம்மா” என்று அலறியபடியே, கமலாவிடம் தாவியது.

“பிளீஸ் கமலா… அனிதாவை அடிக்காதே. அவ சின்ன பொண்ணு. இப்படியெல்லாம் நடக்கும்னு அவ கற்பனை செஞ்சுகூட பார்த்திருக்க மாட்டா” என்று கமலாவை, சமாதானப் படுத்தினான் அந்த முரடன்.
‘என்ன பேசிக்கொள்கிறார்கள்’ என்று, புரியாமலிருந்த என்னிடம், “ஸார்… நான் அனிதாவின் அண்ணன். கமலாதான் என் மனைவி. அன்னிக்கு நீங்க யாரோன்னு நினைச்சு அடிச்சுட்டேன், மன்னிச்சுடுங்க” என்றார் கமலாவின் கணவன்.

ஆகாஷை கோபமாக பார்த்துக் கொண்டிருந்த அனிதாவிடம், கமலாதான் பேசினாள். “இங்கே பார் அனிதா, நானும் மிஸ்டர் ஆகாஷும், ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே, மும்பையிலே, ஒரே ஐ.டி. கம்பெனியிலே வேலை பார்த்தோம்.

போனமாதம்தான், உங்க அண்ணன், நீ வேற ஜாதியை சேர்ந்த, ஆகாஷை காதலிப்பதை ஸ்மெல் பண்ணி, நம்ப குடும்பத்தாரிடம் சொன்னார்.

நம்ப குடும்பத்திலே இருக்கிற, ஜாதிவெறி பிடிச்ச, உங்க மாமனுங்களெல்லாம், இந்த கல்யாணம் நடந்தா ‘ஆகாஷை’ கொன்னுடுவோம்னு, மிரட்டினாங்க. அதனால, உங்கக் காதலை, எப்படி பிரிக்கலாம்னு, நானும் என் வீட்டுக்காரரும், யோசிச்சோம்”.

“பிறகுதான், ஆகாஷும் நானும் முன்னாள் காதலர்கள், இன்னமும் இருவருக்கும் தொடர்பிருக்குன்னு, உன் ஆஃபீஸ்லே, வேலைபார்க்கிற என் ஃப்ரெண்ட் மூலமா, உன்கிட்டே பொய் சொல்லச் சொன்னோம். நீ நம்பணும் என்பதற்காக, நாங்க அப்போ சேர்ந்து எடுத்துகிட்ட சில ஃபோட்டோக்களை, உன்கிட்டே காண்பிக்கச் சொன்னோம்”.

“நானும் உன் அண்ணனும், நினைத்தபடியே, ஆகாஷ் மேல உனக்கு வெறுப்பு வந்தது. ஆனால், நீ முட்டாத்தனமா, உன் ஆஃபீஸோட மூணாவது மாடியிலே இருந்து குதிப்பேன்னு, நாங்க எதிர் பார்க்கலே. “குத்துயிரும் கொலையுயிருமாய் உன்னை ஹாஸ்பிட்டல்லே சேர்த்திருக்காங்க” என்ற செய்தி கேள்விபட்டதும், உன்னை பார்க்க, அவசரமா வண்டியை எடுத்துகிட்டு கிளம்பினார் உங்க அண்ணன்.

“கூடப் போகணும்னு, அடம் புடிச்ச என் குழந்தையையும் கூட்டிகிட்டு, வேகமா ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலே, ஆக்ஸிடென்ட் ஆகி, உன்னை சேர்த்திருந்த அதே ஆஸ்பத்திரியிலேயே இவங்களையும் சேர்த்திருந்தாங்க”.

“உங்களைப் பார்க்க நான் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். ஐந்து வருஷங்களுக்குப் பிறகு, அந்த ஹாஸ்பிட்டல்லதான், உன்னை பார்க்க வந்த, ஆகாஷை நேர்ல பார்த்தேன். உன்னையும், உன் அண்ணனையும், என் குழந்தையையும் உயிரற்ற சடலங்களா, பார்த்ததும், எங்களுக்கு துக்கம் தாங்க முடியலை. கொஞ்ச நேரத்திலே, அங்கே வந்த, ஜாதி வெறி புடிச்ச உன்னோட மாமன்களோ, ஆத்திரத்திலே, அப்பாவியான உன்னோட ஆகாஷை, ஆஸ்பத்திரியிலேயே, பிச்சுவா-கத்தியால வெட்டி வீசிட்டானுங்க. உயிருக்கு போராடிக்கொண்டு, மூணு நாளா, ஐ.சி.யூவிலே கிடந்த, ஆகாஷை, அவங்க பெற்றோர்களிடம், பிணமாத்தான் குடுத்தாங்க”.

“அப்பாவியான, ஆகாஷோட துர்மரணம், என்னை மனரீதியா, ரொம்பவே பாதித்தது. உங்க எல்லாரோட அகால-சாவுக்கும், நான்தான் காரணம். அதனால, நானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டேன்” என்று நடந்தவற்றை, விளக்கமாக சொன்னாள் கமலா.

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த, அனிதா, முதலில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டாள். பிறகு, அண்ணன்- அண்ணியை, நிற்கச் சொல்லி, ஆகாஷுடன் சேர்ந்து, காலில் விழுந்தபடி, “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றாள்.

கடற்கரை “மண்ணை” கையிலெடுத்து, அவர்கள் தலையில் போட்டு, கமலாவும் அவள் கணவரும் ஆசீர்வாதம் செய்தார்கள்.

அருகே இருந்து நானோ, “ அடக் கண்றாவியே…! நீங்களெல்லாம் பேய்-பிசாசுகளா…?” அப்போ நான் யாரு...? என்றேன்.

“எங்களுக்கு எப்படித் தெரியும்… லக.. லக… லக… லகஅஅஅ…. என்று இளித்தபடியே, அவர்கள் குடும்பத்துடன், கடற்கரையிலிருந்து மறைந்து விட்டார்கள்.

அச்சத்தில் இருந்த நானோ, “சாகலை-சாகலை, இன்னும் நான் சாகலை…!” என்று ஓலமிட்டேன்.

“அப்பா… எழுந்திருப்பா… நான்தான் உன் புள்ளை, ஆகாஷ்” என்ற குரல் கேட்டதும், “அனிதா வரலையா? என்றேன்.

“எந்த அனிதா?” என்றவன், “மார்கழி மாசம் வந்தாலே, விடிய காலையிலேயே கோவில் கோவிலாப் போய், நெய் சொட்டச் சொட்ட, வெண்பொங்கலை வாங்கி திங்க வேண்டியது. பொங்கலை முழுங்கின, மயக்கத்திலே, வீட்டுக்கு வந்து, ஈசிச்சேர்ல சாஞ்சு நல்லா தூங்க வேண்டியது. கண்ட பேய்க்கதையையும் கனவுகண்டு, எதையாவது பினாத்த வேண்டியது, எழுந்திருப்பா, இனிமே… காலையிலே, பொங்கல் தின்னே… ஜாக்கிறதை”, என்று எனக்கு, ‘பள்ளியெழுச்சி’ பாடினான்.

என் ஆத்துக்காரியோ, ‘வரேளா, டிபன் ரெடி. இன்னிக்கு வெண்பொங்கல், என்றதும், நானும் என் மகனும், என்னது, “வெண்பொங்கலா…” என்று அரண்டு போனோம்.