இரண்டு வாரங்களுக்கு முன் விகடகவியில் தடுப்பூசி தந்திரங்கள் என்று விலாவாரியாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
சரிந்து போன மருந்துக் கம்பெனிகளின் இமேஜை தூக்கி நிறுத்த இந்த கரோனா தடுப்பூசி தயாரிப்பு ஒரு பெரும் வாய்ப்பாக அந்த பெரிய நிறுவனங்களுக்கு அமைந்து விட்டது என்கிற ரீதியில் அந்தக் கட்டுரை இருந்தது.
மேலும் தடுப்பூசி வகைகளைப் பற்றியும், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளைப் பற்றியும் விலாவாரியாக எழுதியிருந்தோம்.
கரோனாவைத் தடுக்க தடுப்பூசி எப்படியாவது வருமா என்று ஏங்கி காத்திருந்த வேளையில், இன்று அது நனவாகி, நம் உயிர் காக்க வந்திருக்கிறது. சந்தோஷப் பட வேண்டிய வேளையில், இப்போது கேள்வி என்னவெனில்…. உண்மையிலேயே தடுப்பூசி உயிர் காக்குமா..?
உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இந்தியா.
அதிலும் இந்திய தேர்தல் திருவிழா, உலக நாடுகளை வியக்க வைக்கும் மகா மெகா ஜனநாயக தேர்தல். 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், மக்களாட்சியை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்ந்தெடுப்பதே ஒரு மிகப் பெரும் பிரயத்தனம். இப்படி இந்தியாவை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்க... அடுத்ததாக, மனித குல வரலாற்றிலேயே முதல் முறையாக பெருமையுடன் இந்தியா முன்னெடுக்கப் போகும் பிரமிப்பான விஷயம், கரோனா தடுப்பூசி முயற்சி தான். இது எல்லா நாடுகளையும், இந்தியாவை பொறாமையுடன் பார்க்க வைத்திருக்கிறது.
கரோனா தடுப்பூசியை பொறுத்தவரை பல நிறுவனங்கள் முயன்று கொண்டிருந்தாலும், இந்திய அரசு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது.
ஒன்று பாரத் பயோ டெக் (கோவாக்சின்) மற்றது அஸ்ட்ராஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவினுடையது. (கோவிஷீல்ட்)
இரண்டு தடுப்பூசிகளின் ஒப்பீடு இங்கே…
தடுப்பூசிகளை பொறுத்தவரை, அதை தயாரிப்பதற்கு நேரம் பிடிக்கும். முக்கிய காரணம் - சோதனை.. சோதனை.. சோதனை...
கீழே உள்ள அட்டவணையைப் பார்த்தால் ஒரு தடுப்பூசி தயாரிப்பதற்கு சுமாராக எத்தனை கால அவகாசம் பிடிக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
முதலில் செல்கள் மற்றும் மிருகங்களில் அதை செலுத்தி சோதனை செய்ய வேண்டும்.
பின்னர் வெகு சில மனிதர்களுக்கு, இதை செலுத்தி பார்ப்பார்கள்.
அது பின்னர், நூற்றுக்கணக்கில் முயற்சி செய்யப்படும்.
பின்னர் ஆயிரக்கணக்கில்...
சோதனைகளின் போது, ஏதும் பக்கவிளைவுகளோ அல்லது மரணங்களோ இல்லையென்றால் தான், அது அதிகார பூர்வமாக அரசால் அனுமதிக்கப்பட்டு, பொதுமக்கள் உபயோகத்திற்கு வரும்.
இது தான் தடுப்பூசிகளின் பயணம். முழுமையாக வெற்றிகரமாக ஒரு தடுப்பூசி எல்லா தடைகளையையும் தாண்டி தயாரிக்க ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் ஆகும்.
ஆனால், கரோனா தடுப்பூசி என்பது சுமார் ஒரு வருடத்தில் மக்கள் பயன் பாட்டிற்கே வந்து விட்டது.
இதுதான் அனைவரின் சந்தேகத்திற்கு ஆதாரம்.
பாரத் பயோடெக்கின் கோவாக்சினை பொறுத்தவரை இது இன்-ஆக்டிவேடட் வாக்சின் என்று சொல்கிறார்கள். அதாவது செயலிழக்கப்பட்ட வைரசை செலுத்துவதன் மூலம் நம் உடலுக்குள் நிஜ வைரஸ் வரும் போது. எதிர்த்து சண்டையிடு என்று ஆணை கொடுக்கும். இது எம்.ஆர்.என்.ஏ அல்ல. இந்த நிறுவனம் இது தான் படு பாதுகாப்பான தடுப்பூசி என்று சொல்கிறது.
அது போலவே கோவிஷீல்டும் பலவீனப்படுத்தப்பட்ட அடினோவரைஸை உபயோகப்படுத்தி (அதன் ஜெனடிக் சமாச்சாரம் கோவிட் வைரசைப் போலவே இருப்பதால்) தயாரிக்கப்பட்டது தான்.
கோவாக்சினின் வெற்றி சதவிகிதம் பற்றிய தகவல் இல்லை. கோவிஷீல்டு 70 சதவிகிதம் வேலை செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சோதனை என்ற விஷயத்தை பார்த்தோமல்லவா... அதன் முடிவுகளின் தரவுகள் தான் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தேவை. எத்தனை பேருக்கு போடப்பட்டது, எத்தனை பேர் தடுப்பூசியை தாங்கி கொண்டார்கள், பக்க விளைவுகள் இருந்ததா, எத்தனை பேரை பாதித்தது என்ற விஷயங்கள் ஒரு தடுப்பூசியை அனுமதிக்க மிக மிக முக்கியம்.
இங்கு தான் எல்லா கரோனா தடுப்பூசியும் இடிக்கிறது. காரணம் நேரமில்லை. சோதனை செய்து.. சோதனை செய்து.. தரவுகள் எடுக்க நேரம் இல்லை. உயிர் போகும் நேரத்தில், வழக்கமான அரசு வழிமுறைகளை கடைபிடித்தால் ஏராள மக்களை பறி கொடுக்க வேண்டும். இது தான் உலகம் முழுவதும் அரசு இயந்திரங்களை கொஞ்சம் வளைந்து கொடுக்க வைத்திருக்கிறது.
மும்பையிலுள்ள மருத்துவர் ஸ்வப்னீல் பாரிக் தொற்று நோய் குறித்து ஆராய்ச்சி நடத்துபவர்...
அவர் சொல்கையில்.. “அரசு இயந்திரங்களின் வழக்கமான கெடுபிடிகளைத் தாண்டி விரைவாக தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எனக்கும் புரிகிறது. ஆனால், இந்த ஒப்புதல் முறையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகிறது.
ஏனெனில், மக்களின் நம்பிக்கையை பெற இது மிக அவசியம் என்கிறார்.
அடார் பூனாவாலா, சீரம் இன்ஸ்டிடியூட்டின் முதன்மை அதிகாரி. பெரும் பணக்காரர். உலகின் 65 சதவிகித நோய் தொற்றுக்கான தடுப்பூசிகள் இவரது தொழிற்சாலையில் தான் தயாராகிறது. கோவிஷீல்ட்டை பொறுத்தவரை, ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
நிச்சயம் முடியும். அவரது தொழிற்சாலைக்கு இது ஒன்றுமேயில்லை. ஆனால், தடுப்பூசியைப் பொறுத்தவரை எவ்வளவு தயாரிக்கிறோம் என்பதை போலவே எப்படித் தயாரிக்கிறோம் என்பதும் முக்கியம்.
உலக அளவில் ஃபைசரும், பயோஎன்டெக்கும் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசிக்கு 90 சதவிகித பலன் இருப்பதாக சொல்கிறார்கள்.
இருந்தாலும் ஃபைசரின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு ஒரு நர்ஸ் இறந்து போவது போல ஒரு வீடியோ வைரலாக, சமூக வலைதளத்தில் வர... அது உட்டாலங்கடி செய்தி என்று தெரியவந்து விட்டது. அந்த நர்ஸுக்கு வலி வந்தால் மயக்கம் வருமாம். அது தான் ஊசி போட்டவுடன் மயங்கி விழுந்து விட்டாரம். வேறு ஆசாமிகளே கிடைக்கவில்லை போல!
அது போலவே, அவர்கள் தடுப்பூசியை உபயோகப்படுத்தியதால் ஆறு பேர் இறந்து போய்விட்டார்கள் என்ற செய்தியும் உலா வந்தது.
இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆறு பேர் இறந்தது உண்மை. ஆனால், அதில் நான்கு பேர் இந்த தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவருமே வேறு உபாதைகளினால் தான் இறந்தார்கள் என்று இப்போது தெரிய வந்து விட்டது. அது ஒரு நான்காயிரம் பேர் கொண்ட சோதனைக் குழு.
ஆக, ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும் மிகச் சிறந்தது தான். இந்தியாவில் விற்க அவர்களும் மனுப் போட்டு அனுமதிக்கு காத்திருக்கிறார்கள். எம்.ஆர்.என்.ஏ வகை தடுப்பூசி இது.
ஆனாலும் இதில் ஒரு சிக்கல். ஏனெனில், தடுப்பூசிகளை பொறுத்தவரை அதிலுள்ள மருந்தின் வீர்யம் கெடாமல் இருக்க குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் தான் இருக்க வேண்டும். ஃபைசரின் தடுப்பூசியை மைனஸ் எழுவது டிகிரி செண்டிகிரேடில் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால் மருந்து வேலை செய்யாது. சும்மா ஊசியை குத்திக் கொள்ளாலம். ஆனால் பயன் இல்லை.
இந்தியாவை பொறுத்தவரை, மைனஸ் எழுவது டிகிரி வெப்பத்தில் இந்த மருந்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்வது நடக்காத விஷயம். ஆக நமக்கு இரண்டிலிருந்து ஆறு டிகிரி வரை வெப்பத்தில் இருக்கும்படி தயாராகும் கோவிஷீல்டு தான் சரி.
இந்த இரண்டு நிறுவனங்கள் தவிர, மேலும் மூன்று நான்கு நிறுவனங்கள் தடுப்பூசி ரேசில் இருக்கிறது.
தடுப்பூசி ஒப்புதல் பற்றி இன்னொரு சர்ச்சை...
அதாவது முதல் நாள் தடுப்பூசி ஒப்புதல் வருகிறது... ஆனால், அடுத்த ஒரு மாதத்தில், ஒரு கோடி மருந்து தயாராக இருப்பது எப்படி??
அதாவது ஒப்புதல் கிடைக்காமலேயே மருந்து தயாரிக்கத் துவங்கினால் மட்டுமே சாத்தியப்படக் கூடிய எண்ணிக்கை.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் அடர் பூனாவாலா அதை ஒப்புக் கொள்கிறார். இதற்கு ஒரு வேளை மருந்துக்கு ஒப்புதல் கிடைக்கவில்லையென்றால் அத்தனை மருந்தையும் கொட்டி விடும் அளவு நஷ்டத்தை சமாளிக்கும் சக்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அவரால் முடியும். வெறும் 3,300 கோடி ரூபாய் தான் முதலீடு செய்திருந்தாராம்.
ஒரு வேளை அங்கீகாரம் கிடைக்கவில்லையெனில் கொட்டி விட்டால் போச்சு என்றிருக்கலாம்.
ஒரு முழுக் கட்டுரையையே அடர் பூனாவாலாவுக்கு எழுதலாம். இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம் இங்கே அவசியமாகிறது
உலக நாடுகள் அனைத்திற்குமான தடுப்பூசியைத் தயாரிக்க வேண்டுமென்றாலும் அடர் பூனாவாலாவால் முடியும்.
வருடத்திற்கு நூற்றியம்பது கோடி தடுப்பூசிகளை இவரது சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது. அவரது வாழ்க்கை முறையை படித்துப் பார்த்தால் தலை சுற்றும். அவரது அலுவலகமே ஒரு பெரிய விமானத்தை வாங்கி அதை உள்ளே மாற்றி அலுவலகமாக அமைத்துக் கொண்டிருக்கிறார். 35 விலையுயர்ந்த கார்கள் அவரது கலக்ஷெனில். அவரது தொழிற்சாலையில் ஒரு நிமிடத்திற்கு 500 தடுப்பூசி பாட்டில்கள் தயாராகிக் கொண்டே இருக்கின்றன.
அது தான் மருந்து நிறுவனங்களின் சக்தி. உலகம் முழுவதும் தடுப்பூசி தேவைப்பட ஏராளமான பணம் புழங்கும் துறை எப்போதுமே மருந்துத் துறை.
எண்ணெய், ஆயுதம் இதற்கு அடுத்ததாக பணம் புழங்கும் இடம் மருந்துத் துறை தான்.
அதெல்லாம் இருக்கட்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா..?
பல ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு வரும் தடுப்பூசிகள் மிக மிக பாதுகாப்பானவை.
ஆனால், கோவிட் 19 விஷயத்தில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு வந்த வேகம் தான் பயமுறுத்துகிறது.
ஏனெனில் போதுமான சோதனைக்கு நேரம் இருக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால், அஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி சோதனையின் துவக்கத்தில் ஒரு தன்னார்வலர் இறந்து போக அதன் காரண காரியங்களை ஆராய்ந்து தான் மீண்டும் சோதனையை துவங்கினார்கள்.
இந்த தடுப்பூசிகள், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று இதுவரை தரவுகள் இல்லை. தடுப்பூசிகள் புதிதாக நோய்களை அளிப்பதில்லை. நோய் தொற்று வைரஸ் வந்தால், அதை எதிர்த்து போராடவே நம் உடலை தயார்ப்படுத்துகிறது.
ஆகையால் பயப்பட தேவையில்லை. ஆனால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை வரத்தான் செய்யும். தசைகள் லேசாக வலிக்கலாம், அல்லது காய்ச்சல் வரலாம். அவையெல்லாம் சாதாரண நிகழ்வுகள் தான். ஒரு புதிய தடுப்பூசிக்கு எதிராக உடல் நிகழ்த்தும் சாகசங்கள் தான் இதெல்லாம்.
ஆனால், அலர்ஜி இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு, தடுப்பூசி கொடுக்கும் முன் மருத்துவர்கள் நன்றாக விசாரித்து விட்டுத் தான் கொடுப்பார்கள்.
ஏற்கனவே கோவிட் வந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசியினால் பலன் இருக்குமா என்று கேட்டால் இருக்கும். உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் பலவீனமாகும் போது இந்த தடுப்பூசி இன்னமும் உதவி செய்யுமாம்.
அதே சமயம், கோவிட் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போட மாட்டார்கள்.
எல்லோரும் போட்டுக் கொண்டால் நானும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்றும் சிலர் கேட்கலாம். கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், தடுப்பூசி போட்டுக் கொண்டால் கோவிட்டை உடல் எதிர்க்கும் என்று தெரிய வருகிறது. ஆனால், நோய் பரவாமல் தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.
உயிர் காக்கும் நேரத்திலும் சர்ச்சைகளுக்கு ஒன்றும் குறையில்லை.
ஒரு டிவீட்டில் முதல் தடுப்பூசியை பிரதம மந்திரி நரேந்திர மோடி போட்டுக் கொள்வாரா...? நாட்டு மக்களுக்கு தடுப்பூசி மேல் ஒரு நம்பிக்கை வருவதற்கு என்று ஒரு கேள்வி எழுந்தது.
இன்னொரு பக்கம், இந்தோனேஷியாவில் பன்றியின் கொழுப்போ என்ன எழவாவது மருந்தில் இருக்கிறதா இது ஹலாலா என்று ஒரு கேள்வி எழும்பி, அதற்கு சீனாவின் சைனோவாக்ஸ் பதிலே சொல்லாமல் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
அந்நாட்டு அதிபர் கடுப்பாகி, “இங்கு நோய்தொற்றின் கோரப்பிடியில் இருக்கிறோம். உயிர் காக்க வேண்டிய நேரத்தில் என்ன விதமான கேள்வி இது” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.
அடுத்தது என்ன..?
இந்தியாவில்.....
154,000 செவிலியர்கள் நாடு முழுவதுமான கோவிட் தடுப்பூசியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
நாட்டிலுள்ள 29,000 குளிர்பதன நிலையங்களில் மருந்துகள் ஸ்டாக் வைக்கப்படும்.
50 வயது மேலுள்ளவர்களுக்குத் தான் முதலில் தடுப்பூசி துவங்கப்படும்.
முதல் கட்டமாக சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி ரெடி.
கோவிஷீல்டை பொறுத்தவரை இரண்டு டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்டதிலிருந்து நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு பிறகு, இரண்டாவது டோஸ். நினைவிருக்கட்டும் ஒரே நிறுவனத்தின் மருந்தை தான் இரண்டு டோஸ்களும் போட்டுக் கொள்ள வேண்டும். இது ஒன்னு அது ஒன்னு என்றால் வேலை செய்யாது.
இந்தியா - இது போன்ற தடுப்பூசி திட்டங்களில் உலகத்திற்கு முன்னோடி. இன்னமும் சொல்லப்போனால் உலகில் தயாராகும் 60 சதவிகித தடுப்பூசிகள் இந்தியாவில் தயாராவது தான்.
இந்தியாவிலுள்ள மருத்துவ நெட்வொர்க், இது போன்ற விஷயங்களில் உலகிற்கே சவால் விடும் அளவிலானது.
இன்னமும் இரண்டு வருடங்களுக்குள் இந்தியாவிலுள்ள அத்தனை குடிமகன்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், முன்பு போல் இஷ்டத்திற்கு இல்லாமல்... எப்படி கரோனாவிற்கு எதிரான எச்சரிக்கைகள் கடைபிடிக்கப்பட்டதோ, அதை தொடர்வதும் மிக மிக மிக அவசியம்.
ஆக, தேவையில்லாத கவலைகளையும் சந்தேகங்களையும் விலக்கி விட்டு, சட்டையை மடித்துக் கொண்டு தயாராகுங்கள்.
ஒரு சின்ன சுருக்… அவ்வளவு தான். கரோனா போகிறதோ இல்லையோ கரோனா பற்றிய பயம் தற்காலிகமாக போய் விடும்.இப்போதைக்கு தடுப்பூசியை நம்புவதைத் தவிர வேறு வழியே இல்லை.!!!
Leave a comment
Upload