தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 22 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20210008123134506.jpeg

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.

அறம், பொருள், இன்பம், வீடு - இந்த நான்கும் தான் மதத்தின் அடிப்படை. இந்த நான்கிற்கும் அடுத்ததாக புருஷார்த்தம் என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. வீடு, தர்மத்தை குறிக்கும். தர்மத்திற்கு பின் ஒரு அர்த்தம் இருக்கிறது. அர்த்தம் என்றால் வேண்டுமென்று நினைத்தல் என்று பொருள். மனிதர்களாக பிறந்தவர்கள் தமக்கு வேண்டுவன என எதை நினைக்கிறார்களோ அவையே புருஷார்த்தம் என்று அர்த்தம். பொதுவாகவே நாம் பணமும், பொருளும் தான் வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கே அர்த்தம் என்று பொருள் வந்துவிட்டது. நம் ஆச்சார்யாள் இந்த அர்த்தத்தை பெரிய அனர்த்தம் என்று பஜகோவிந்தத்தில் கூறுகிறார். இவைகள் அல்பாயுசான தற்காலிக சந்தோஷங்கள்.

பொதுவாகவே மக்கள் எப்போதும் நிரந்தரமாக, சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறார்கள். சந்தோஷம் என்பது இரண்டு விதம். ஒன்று தற்காலிக சந்தோஷம், மற்றொன்று நிரந்தர சந்தோஷம். அதாவது எப்போதும் குறையாமல் இருக்கக் கூடிய சந்தோஷம். கொஞ்ச நாழிகை இன்பம் தருவது காமம். காமம் என்பது அணைத்துலக ஆசைகளையும் குறிக்கும். எப்போதும் நிலைத்திருக்கும் இன்பமே மோக்ஷம். அந்த மோக்ஷத்தின் பெருமை தெரியாததால் தான் சிற்றின்பத்தையே மனிதர்கள் நினைக்கிறார்கள்.

ஆகவே உண்மையில் நாம் நினைக்க வேண்டியது நான்காவதாகிய வீடு. நடைமுறையில் நாம் வேண்டுவது மூன்றாவதாகிய வீடு. விருந்து சாப்பிடுவதினால் ஏற்படும் இன்பம், பதவி கிடைப்பதனால் கிடைக்கும் இன்பம், இந்த இன்பங்களெல்லாம் சிற்றின்பங்கள். இந்த சிற்றின்பங்களை எதனால் சம்பாதிக்கிறோமோ அதுவே பொருள். அது தானியமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம். பொருளே இன்பத்துக்கு சாதனம். இந்த இன்பத்தை சிறிது பொழுதில் அனுபவித்து தீர்த்து விடுகிறோம். மறுபடியும் நமக்கு இன்பம் வேண்டும் என்ற ஆசை தொடங்குகிறது.

அதற்கு மேல் இன்பம் என்ற ஒன்று தேவை இல்லாதது என்று தோன்றச் செய்யாதது மட்டுமே மோக்ஷம்.