தொடர்கள்
நெகிழ்ச்சி
இறந்த மகளின் கண்கள் தானம்... - சுகுமாரன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). இவருக்கு 3 மகள்கள். இவரது மூத்த மகளுக்கு வரும் 25-ம் தேதி பெங்களூரில் திருமணம் என்பதால், உறவினர்களுக்கு பத்திரிகை அளிக்க, கடந்த சில நாட்களுக்கு முன் தும்பை கிராமத்துக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்தார்.

தும்பை கிராமத்திலுள்ள விவசாய கிணற்றில் நாராயணன் குடும்பத்தினர் கடந்த 4-ம் தேதி குளிக்க சென்றிருந்தனர். கிணற்று படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டிருந்த நாராயணனின் இளைய மகளான கல்லூரி மாணவி சுதா (19), சற்று நிலைதடுமாறி, கிணற்றுக்குள் விழுந்து மூழ்கினார்.

கிணற்றுக்குள் மூழ்கிய சுதாவை, செய்யாறு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே சுதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மகள் இறந்த துக்கத்தில் இருந்த நாராயணன் குடும்பத்தினர், ‘தங்களின் மகள் இறந்தாலும், மற்றவர்களுக்கு அவரது கண்கள் ஒளி கொடுக்க வேண்டும்’ என தீர்மானித்து, அவற்றை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

அதன்பேரில், செய்யாறு தன்னார்வ அமைப்பு உதவியுடன், காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு சுதாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.