தொடர்கள்
கதை
தோழா.... - பா. அய்யாசாமி

20210008161958162.jpeg

Tech park என கொட்டை எழுத்தில் எழுதிய பேரூந்து ஒன்று தனது வளாக பணியாளர்களை தாம்பரத்தில் இறக்கி விட்டுப்புறப்பட்டது. இறங்கியவர்களில் ரேவதியும், அஸ்வினும் ஒரே ஊரைச் சேர்ந்த, ஒரே உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள், கல்லூரி்ப்படிப்பு மட்டும் வேறு வேறாக இருந்தாலும், பணி செய்யும் இடம் ஒன்றாகிப்போனதால், பயமில்லாமல் இதுவரை சனிக்கிழமைகளில் தன் ஊருக்கு வந்து போக துணையாக அஸ்வின் இருப்பது ரேவதிக்கு பெரிய பலமாக இருந்தது. அது முற்றிலும் இன்றோடு முடியப் போகிறது எனத் தெரியாமல், தங்களது ஊரான காஞ்சிபுரத்திற்கு செல்ல பேரூந்தின் வருகைக்காக காத்து நின்றுக் கொண்டிருந்தனர் இருவரும்.

தாம்பரத்திலிருந்து பேரூந்தில் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும் இவர்கள் ஊர் சென்றடைய. ரேவதி, வயது இருபத்தி இரண்டுக்குரிய துடிப்பும், துள்ளலும் உடையவள். அஸ்வின், ரேவதியுடன், பள்ளி, கல்லூரிகளில் நட்பாக இருந்தவரை, அவளிடம் அன்பாக பழகியவன், பணம், பதவி், வசதி எதற்கும் குறைவில்லாத வாலிபன்.

தன் நீண்ட நாள் ஆசையை இன்று எப்படியாவது தீர்த்துக் கொள்ள வேண்டும், என மனதில் நினைத்த அஸ்வின், கையை அவள் தோளின் மீது போட்டான்.

‘ஏய்! கையை எடு, என்ன இது பஸ் ஸ்டேண்டு கூட பார்க்காமல்?’ என திட்டி கையைத் தட்டிவிட்டாள்.

இடுப்பைக் கிள்ளி அவளை சீண்டினான், இப்படி பொது இடத்தில் பல சேட்டைகளை அஸ்வின் செய்துக் கொண்டேயிருக்க... அவள், அவனிடம் இருந்து விலகி நிற்க முடியாமல், அவனை நட்பு ரீதியில் சகித்துக் கொண்டு இருந்தாள்.

‘என்னாவாயிற்று அஸ்வினுக்கு? இதுநாள் வரை இப்படி நடந்து கொண்டது இல்லையே?’ என யோசித்தாள்.

அவளிடமிருந்து கொஞ்சம் விலகி நின்று யாருக்கோ போன் செய்து கொண்டு இருந்தான் அஸ்வின். “இன்னும் இரண்டு மணி நேரமாகும், காரை எடுத்துவா, இன்றைக்கு விட்டால் அவ்வளவுதான், கை நழுவி விடுவாள்” என ரேவதியைப் பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்தான்.

அங்கே தள்ளு வண்டியில பழக்கடை போட்டு இருந்த சின்னா, அஸ்வின் செய்த சேட்டைகளையும், ரேவதியின் அழகையும் ரசித்துப் பார்த்தவனுக்கு, பொறி தட்டியது. அஸ்வின் போனில் பேசியதைக் கேட்டதும் அவனுள் ஒரு புதுத்திட்டம் மனத்திற்குள் ஓடியது...

அவனும் யாருக்கோ போன் செய்து, தான் தாம்பரத்தில் இருப்பதாகவும், “சீக்கிரமாக வாங்கடா, நான் அவர்கள் செல்லும் பேரூந்தில் ஏறிடுவேன், நீங்க வண்டியிலே நான் சொல்லும் பஸ்ஸை ஃபாலோ பண்ணுங்கடா? அப்போப்ப போன் செய்... இறங்கினதும் வச்சு செய்திடுவோம்” என பேசிக்கொண்டு இருந்தான்.

தனக்கு எதிராக சதி வலைகள் பின்னப்படுவது கூடத் தெரியாமல் அப்பாவியாய் பேரூந்தின் வருகைக்காக காத்து நின்று கொண்டியிருந்தாள் ரேவதி, அஸ்வினுடன்.

பேரூந்து வந்ததும் அஸ்வின், ரேவதி ஏறிக்கொள்ள... கைலியை ஒரு கையில் பிடித்தபடி ஓடிப்போய் ஓடும் பேருந்தில் பின்பக்க வாசல் வழி ஏறினான் சின்னா.

பேரூந்தில் அருகருகே அமர்ந்தனர் இருவரும், ரேவதி அவனிடம் பேசாமல் வரவும், அஸ்வினோ அவளை சீண்டியபடி வந்தான்.

அதை அவள் ரசிக்கவில்லை என்பதை அறிந்தான், அவர்களை ஃபாலோ செய்து வந்த சின்னா.

அவர்கள் இறங்கும் இடம் வரவே, இறங்க இருக்கை விட்டு எழுந்தனர்...
வெளியே ஒரே இருட்டு.

எட்டு மணிக்கெல்லாம் ஊரே அடங்கி இருக்க, இருளில் இறங்கி நடந்தனர். அவர்கள் பின்னாடியே கார் ஒன்று வர, அதை கைக் காட்டி நிறுத்தினான் அஸ்வின், அதுவும் நின்றது.

“வா, ரேவதி இதில் போகலாம்” என அழைத்தான் அஸ்வின்.

“ஏன்..? நம்ம ஸ்கூட்டர் இருக்கே ஸ்டாண்டிலே” என்றாள்.

“இருக்கட்டும் வா, நாளைக்கு நான் வந்து எடுத்துக்கிறேன்,
நீ வா” என அழைத்தான். உள்ளே உட்கார்ந்திருந்த இரண்டு நபர்களை பார்த்ததும், ரேவதி காரினுள் ஏற மறுத்தாள். அதற்குள் உ ள்ளே இருந்தவன் கீழே இறங்கிட, அஸ்வினும் அவனுமாக அவளைப் பிடித்து இழுத்து காரின் உள்ளே தள்ளி கதவை மூடினார்கள்.

கார் புறப்படத் தயாரானபோது, டூ வீலர் ஒன்றில் சின்னா மற்றும் அவனின் நண்பர்கள் இருவர் வந்து இறங்கினர்.

“ஏய், பருப்பு, இங்கிருந்து ஓடிடு. இல்லே!” என முன்னேறி ரேவதியின் கையைப் பிடித்து இழுத்தான் சின்னா.

இதை சற்றும் எதிர்பாராத அஸ்வின் கும்பல், தாக்கத் தயாரானார்கள். அந்த இடமே போர்க்களமாக மாறிட... ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், அஸ்வின் விழுந்தடித்துக் கொண்டு ஊரை நோக்கி ஓடி விட, காரில் வந்தவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடி விட்டனர்.

“ஏய் பைக்கில் ஏறு”. என சத்தமிட்ட சின்னாவின் அழுக்கு சட்டையும், தூக்கிக்கட்டிய கைலியும் பார்த்து மேலும் பயந்த ரேவதி
முடியாது என மறுக்கவும்.... அவளை அடிக்க வந்தனர் சின்னாவின் நண்பர்கள்

அவர்களைத் தடுத்த சின்னா, “இனி நான் பார்த்துக்கிறேன்... நீங்க கிளம்புங்கள்” என்று சொன்னதும், அவனிடம் விடைபெற்றுச் சென்றனர்.

“ஏய்.. நான் யார் தெரிதா உனக்கு? ”என கேட்டான் சின்னா ரேவதியைப் பார்த்து..

“தெரியலை” என்றாள் ரேவதி.

“அதானே, இஸ்கூலே உன்கூட படிச்சவனைல்லாம் மறந்திடு, காலேஜ், வேலை பார்க்கிற இடம்..இது மாதிரி பொறுக்கிப் பசங்களைத்தான் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

நான் சின்னாடீ. சின்னையன் உங்கூட ஐந்தாம் வகுப்பு வரை படிச்சேன், இதே ஊர்தான் நானும்.

உங்களை தினமும் தாம்பரத்திலே நான் பார்ப்பேன். இன்றைக்கு ஒரு தினுசா அந்த அஸ்வின் பய இருந்தான், உன்னைப் பத்தி என் கடையாண்ட நின்னு யாரண்டேயோ ஒரு மாதிரி பேசிகினு இருந்தான், எனக்கு என்னவோ பொறி தட்டிச்சு, ஏதோ தப்பா கீதுனு... இப்போ அது சரியாப் போச்சு, நானும் அதான் அங்கே இருந்து உன்னை ஃபாலே பண்ணிகினே வந்தேன்” என்ற போது, ரேவதியின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

அவர்கள் படித்த அந்த பழைய தொடக்கப்பள்ளிக் கட்டிடம் வரவே அழுதபடி தன் கையை எடுத்து சின்னாவின் தோளில் போட்டாள் ரேவதி. வெட்கத்துடன் விலகி நடந்தான் சின்னா....

“இப்படித்தானே நடந்தோம் அந்த நாட்களில், இப்போ மட்டும் என்னடா
வெட்கம்?” என்று கேட்டாள். சின்னா வெள்ளந்தியாய் சிரித்தான்.

அவன் சிரிப்பு அழகாய்த் தெரிந்தது ரேவதிக்கு!