இந்தியாவில் 2020-ம் ஆண்டு, மார்ச் மாத இறுதியிலிருந்து கடந்த ஏழெட்டு மாதங்களாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கினால் மக்களின் வருவாயுடன், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறு வணிகம் முதல் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை உற்பத்தியின்மை, விற்பனையின்மை போன்ற பிரச்னைகளால் மிகவும் பாதிக்கப்பட்டன. நாடு முழுவதும் மிகப்பெரிய பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது.
‘இந்த தொழில் முடக்கம், பொருளாதார தேக்கநிலை மற்றும் அதைச் சார்ந்த பிரச்னைகளை தொழில் நிறுவனங்கள் எப்படி சமாளித்தன? மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? அரசு தரப்பில் கிடைத்த உதவிகள் என்னென்ன?’ என விகடகவி சார்பில் அறிந்து கொள்ள விரும்பினோம்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் தொழிற்சாலை மற்றும் தலைமை அலுவலகத்தை கொண்ட மாருதி ஆபீஸ் எக்யுப்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் ஹரிஹர சுப்ரமணியனிடம் பேசினோம்...
“கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு தடையால் மற்ற தொழில் நிறுவனங்களைப் போல், எங்கள் நிறுவனமும் மிகுந்த பாதிப்பைச் சந்தித்தது. அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். பொருளாதார மந்த நிலையால், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே விற்பனை மிகவும் குறைய ஆரம்பித்தது.
பின்னர் 2020, ஜனவரி முதல் மெதுவாக விற்பனை ஒரு கணிசமான முன்னேற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. சகஜ நிலைக்கு வரும் நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 2019-ல் ஏற்பட்ட 4 மாத சரிவை சரிசெய்யும் மிகப்பெரிய பாரமும் எங்களை அழுத்தியது.
கீழே விழுந்த குதிரை தானும் அடிபட்டு, ஓட்டியவரையும் காயப்படுத்தியது போல... பழைய நிலையை சரிசெய்யவும், புதிய பிரச்னைகளை சமாளிக்கவும் எங்களுக்கு மிகப்பெரிய மனோபலம் தேவைப்பட்டது. எந்த செலவினங்களும் குறையாத நிலையில், வருமானம் ஏதுமின்றி 2020 ஏப்ரல் முதல் நாங்கள் மனதளவிலும் சரி, நிதி நிலைமையிலும் சரி... அதல பாதாளத்துக்கு சென்று விட்டோம்.
இந்த நிலையிலிருந்து எங்களை மீட்டெடுத்தவர்கள் இருவர். ஒன்று - எங்களது Suppliers. நிலைமையை புரிந்து கொண்டு, payment-க்காக எந்தவித அழுத்தமும் ஏற்படுத்தாமல் உதவி செய்தனர். இரண்டாவது - Govt. of Indiaவின் அறிவுறுத்தலின்படி, Holiday period உடன் bank எங்களுக்கு வழங்கிய கடன் மற்றும் நான்கைந்து மாதங்களுக்கு பழைய கடனின் வட்டியை செலுத்தாமல் இருக்க அனுமதித்தது. Bank-ம், Suppliers-ம் செய்த உதவியினால், இன்று மாருதி உயிருடன் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது அடியெடுத்து வைத்திருக்கும் 2021-ம் ஆண்டில் நாம் - அதாவது, MSME நிர்வாகத்தினர், *சிக்கன நடவடிக்கை - எந்தவித அனாவசிய செலவினங்களும் செய்யக்கூடாது. *கடனுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கடன் கொடுக்க நேரிட்டால், அந்தத் தொகையை மிகக்குறுகிய காலத்தில் வசூலிக்க வேண்டும். *எந்தவித விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது போன்ற வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்.
மேற்கண்ட சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வதால் மட்டுமே, கடந்த ஆண்டின் நிதி நெருக்கடியை சமாளித்து, இந்த ஆண்டில் நம்மைப் போன்ற MSME நிறுவனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்!” என ஹரிஹரன் வலியுறுத்தி கூறினார். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.
Leave a comment
Upload