தொடர்கள்
தொடர்கள்
கேரக்டர் - அறியப்படாத மனிதர்கள்.. - 2  - வேங்கடகிருஷ்ணன் 


20210008184512300.jpeg

ஒவ்வொரு நாளும் நாம் நிறைய பேரை புதிது புதிதாய் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம் நம்மை கடந்து செல்பவர்கள் ஏராளம். ஆனால், எல்லாருமே நம் மனதில் பதிவதில்லை. சிலர் மட்டுமே நம் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். அவ்வாறு உட்கார்ந்த ஒரு சிலரைப் பற்றியது தான் இந்த பதிவு.

இவரை நான் சந்தித்தது போது, நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். என் தந்தை தபால் துறையில் வேலை செய்தார், வேலை மாற்றலில் சென்ற இடத்தில்... நாங்கள் குடி போன இரண்டாம் நாள் எங்களுக்கு இவர் அறிமுகமானார். பார்த்தவுடன் பயம் கலந்த மரியாதை. உண்மையில் சொன்னால், அந்த வயதில் எனக்கு பயம் ஏற்பட்டது. திடகாத்திரமான உருவம், பரந்து விரிந்த நெற்றி, அதில் ஒற்றை நாமம் போல் இடப்பட்ட குங்குமப்பொட்டு. அது நீளவாக்கில் புருவ மத்தியிலிருந்து மேல் நோக்கிச் சென்றது. பெரிய விழிகள், அடர்த்தியான..முறுக்கி விடப்பட்ட கட்டை மீசை, அதுதான் அவருடைய அடையாளமே. அவர் அழைக்கப்பட்டதே மீசைக்காரர் என்றுதான். நீண்ட நாட்கள் சென்ற பிறகுதான், அவருடைய பெயர் வெங்கடாசல உடையார் என்று தெரிந்து கொண்டேன்.
பார்த்தவுடனே எங்கள் குடும்பத்தோடு நண்பராகி விட்டார். எளிமையான மனிதர், இடுப்பில் ஒரு சிகப்பு நிற வேட்டி, தோளில் ஒரு சிகப்பு நிறத் துண்டு. இடுப்பு வேட்டியை சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தட்டையான ஒரு பச்சை நிற பெல்ட். கழுத்தில் சிகப்பு கயிறு முடிந்த ஒரு டாலர்.

எல்லா கோவில்களிலும் இருப்பார், குறிப்பாக துர்க்கை அம்மன் கோவில். சில நாட்களில் மாலை வேளைகளில் உடம்பு முடியாத குழந்தைகளை அழைத்து வந்து, அவரை மந்திரிக்கச் சொல்வதுண்டு. அதை நான் ஆச்சரியமாக வேடிக்கை பார்ப்பேன். விஷ கடிக்கு மந்திரிப்பார், சுளுக்குக்கு மந்திரிப்பார். தேள் கடி, பாம்புக்கடி ஆகியவற்றுக்கு கூட மந்திரிப்பார். என் அப்பாவிடம், அவர் அடிக்கடி சொல்வதுண்டு... உங்களுக்கு தெரிந்து, யாருக்காவது பாம்பு கடித்து விட்டால் என் பெயரைச் சொல்லி ஒரு தந்தி கொடுங்கள்.. தந்தி கொடுத்தவுடன், நான் சொல்லும் வரை விஷம் ஏறாது நிற்கும். அவரை இங்கு அழைத்து வந்தால் நான் காப்பாற்றி விடுவேன் என்று. அந்த வயதில் இது சாத்தியமா என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. ஆனால் ஒரு முறை அது நடந்தது...

நான் அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயம், எங்கள் பள்ளியை ஒட்டி இருக்கும் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரை பாம்பு தீண்டி விட்டது. அவர் காலை பிடித்துக்கொண்டு கத்திய கத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஓடி வந்து, அவரை தூக்கி வந்து ஓரமாக கிடத்தினார்கள். பள்ளியை ஒட்டி இருந்ததால் எங்கள் வகுப்பில் இருந்து நாங்களும் வெளியே வந்து அதை பார்த்தோம். உடனே கயிறு கட்டுங்கள், ரத்த ஓட்டத்தை நிறுத்துங்கள் என்று அந்த இடமே அமர்க்களப்பட்டது. அங்கே இருந்த ஒரு வயதான மனிதர் அந்த விஷக்கடி மேல் தன் கையை வைத்து அழுத்தி வெங்கடாஜலம் வெங்கடாஜலம் வெங்கடாஜலம் என்று மூன்று முறை சொன்னார், சொல்லிவிட்டு அந்த கடிபட்ட இடத்தின் மேல் ஒரு துண்டினால் இறுக்கி கட்டினார். ‘தூங்குங்க.. நம்ம மீசைக்காரர் கிட்ட கூட்டிட்டு போவோம்’ என்று அவரை 2 -3 பேர் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

அன்று பள்ளி இருந்ததால் அதற்கு மேல் எங்களால் தொடர முடியவில்லை. இரண்டு நாள் கழித்து அதே நிலத்தில் அதே மனிதரை வேலை செய்யும்போது பார்த்தோம். எங்களுக்கு பயங்கர ஆச்சரியம்.. மெதுவாக அவரிடம் சென்று பிழைத்தது எப்படி என்று கேட்டோம். “தலை சுத்துற மாதிரி இருந்தது, அப்புறம் ஒண்ணும் தெரியல, கண்ணு முழிச்சு பார்க்கும்போது எதுக்கால மீசக்கார் இருந்தார். ஏதோ தண்ணி மாதிரி என் முகத்தில் அடிச்சார். ஒரு செம்புல கொடுத்து இதை குடிச்சிட்டு வீட்டுக்கு போ அப்படின்னாரு. அதை குடிச்சேன், அது கொஞ்சம் கசப்பா இருந்தது. வீட்டில் போய் தூக்கம் வரும்.. ஆனால் தூங்காத... நாளைக்கு காலைல தூங்கலாம், ராத்திரி பூராவும் முழிச்சுட்டு இரு அப்படின்னார்.. அன்னிக்கு ராத்திரி முழிச்சிட்டு இருந்தேன், மறுநாள் காலைல தான் தூங்கினேன். அதுக்கப்புறம் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை” என்றார். எனக்கு அப்போது, அது பெரிய ஆச்சரியமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு அவர் வந்தபோது, இதைப்பற்றி எனது தந்தையார் விசாரிக்க... ‘ஆமா பெருமாளே’ என்றார். எங்க அப்பாவை அவர் பெருமாள் என்று தான் அழைப்பார். “ஆமாம் பெருமாளே, எங்க குருநாதர் சொல்லிக்கொடுத்தது. இந்த மந்திரத்தை உச்சரித்து, அதை எனக்கு கட்டுபடுத்தி வச்சி இருக்கேன். அதனாலதான் என் பேர மூணு தடவை சொன்னா, விஷம் அதுக்கு மேல நகராமல் பாத்துக்கும். இது விஞ்ஞானம், மருத்துவத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டது - மாந்திரீகம்” என்று சொல்லி பேசிக்கொண்டே வந்தவர்... அம்மாவை பார்த்ததும் நிறுத்தினார். அம்மாவுக்கு கையில் சுளுக்கு இருந்தது, இரண்டு நாளாக அவஸ்தை. இவர் வேறு ஊரில் இல்லாததால், அம்மாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது அம்மா சொன்னவுடன் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி, தோளில் இருந்து இறங்குவது போல் பாவனை செய்து, பின்னர் அம்மாவோட தலையை மூன்று முறை சுற்றி அந்த தண்ணீரை வெளியில் கொண்டு போய் கொட்டி விட்டு வந்து விட்டார். அம்மாவிடம், ஒரு ஐந்து நிமிடம் கழித்து கையை உதறுங்கள் என்று சொன்னார். அதே போல ஐந்து நிமிடம் பொறுத்து அம்மா உதற... சுளுக்கு போன இடம் தெரியவில்லை. இது அடுத்த ஆச்சரியம்.

எங்களுக்காக அவர் தனியே செய்து காட்டிய ஆச்சரியங்கள் பல உண்டு... உதாரணமாக வெறும் கையாலேயே கொதிக்கும் எண்ணெயில் அப்பளம் போட்டு எடுப்பது, கிணத்துக்குள்ளே குதித்து வெளியே வரும்போது நெற்றியில் நாமத்தோடு வருவது, நெருப்பினை கையால் பிடிப்பது போன்ற பல வேலைகளை எங்களுக்கு செய்து காண்பித்திருக்கிறார்.

நான் மிகவும் ஆவலோடு அவைகளை பற்றிக் கேட்பதால், சிலவற்றை எப்படி செய்வது என்று சொல்லியும் கொடுத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மூலிகையிலிருந்து வரும் பாலைக் கொண்டு நெற்றியில் நாமம் வரைந்து, கிணற்றில் குதிக்க வேண்டும். சாதாரணமாக தெரியாத அந்த பால், தண்ணீர் பட்டதும் அந்த இடத்தில் ஒட்டிக் கொண்டு பளிச்சென்று வெள்ளையாக தெரியும். அப்படித்தான் நாமம் வருவது. அதே போல கையில் ஒரு மூலிகையின் சாரை தடவிக் கொண்டு, கொதிக்கும் எண்ணெயில் கைவிடலாம், எதுவும் ஆகாது. இது போல பல விஷயங்கள்.

அப்போது நான் அவரிடம் கேட்டேன்... ‘மூலிகை தான் எல்லாமே பண்ணுதா..?’ அதற்கு அவர், “80% மூலிகைதான். ஆனால், மத்ததெல்லாம் மாந்திரீகம், எங்கள் குருநாதர் சொல்லிக்கொடுத்தது. அதனால் ரொம்ப தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் உபயோகப்படுத்த சொல்லித்தர முடியும்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஏனோ நாங்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அவருக்கு வாரிசு என்று யாரும் வரவில்லை. அதேபோல மிக நல்ல மனசு பெற்றவர். அவர் கையில் எந்த ஒரு காசம் வைத்துக் கொள்ள மாட்டார். கேட்பவர்களுக்கு கொடுத்து உதவிடுவார். ஏழைகளுக்கு மந்திரம் செய்யவோ மற்ற விஷயங்களுக்கும் காசு வாங்க மாட்டார். அவருக்கு ஒரு பையன் இருந்ததாக கேள்வி. கேள்வி என்றால் நினைவு, நாங்கள் பார்த்ததில்லை. ஒரே ஒருமுறை நான் வீட்டுக்கு செல்லும் போது பார்த்திருக்கிறேன். அவனுக்கு சித்த சுவாதீனம் கிடையாது. இறைவன் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு கணக்கு வைத்திருக்கிறான், நம்மால் புரிந்துகொள்ள முடியாத கணக்கு.

எனக்கு தெரிந்து நாங்கள் அங்கு இருந்த ஏழு வருடமும் அவர் உதவியது கொஞ்சநஞ்சமல்ல... என் அம்மாவிற்கு திடீர் திடீரென்று அருள் வந்து விட்டது என்று சொல்லி ஓட ஆரம்பிப்பார், யாராலும் அவரை பிடிக்கவே முடியாது. என் அம்மா சாதாரண நிலையில் 5 அடி 1 அங்குலம் இருப்பார், அதேபோல 49 கிலோ தான் எடை. ஆனால் இந்த ஒரு தருணத்தில் அவருள் இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தி, பன்மடங்கு பெருகி அவரை கையிலே பிடிக்க முடியாத அளவுக்கு ஆகிவிடும். அந்த அமானுஷ்ய சக்தியின் பிடியில் இருக்கும்போது, அம்மா பலவித மொழிகள் பேசுவார். அவர்கள் கேள்விப்படாத மொழி தெலுங்கு, ஹிந்தி என எல்லாமே அவர் அறியாதவை.

அதையும் வெங்கடாஜலம் உடையார் சரி செய்தார். அதற்கென ஒரு தாயத்து ஒன்று எழுதி அம்மாவின் கழுத்தில் கட்டினார். அதன்பிறகு அம்மாவுக்கு அந்த பிரச்சனைகள் இல்லை. இப்போது நான் சொன்ன இந்த விஷயங்களை என் மகளிடம் சொன்னபோது, அவள் சொன்ன பதில், “பாதி நம்பற மாதிரி இருக்கு, பாதி நம்பற மாதிரி இல்ல”. ஆனால், நீங்களும் நம்பித்தான் ஆகவேண்டும். இவையெல்லாமே நாங்கள் கண்ணால் பார்த்து, உணர்ந்து, அனுபவித்தது. இப்போது அவருக்கு 80 வயதிற்கு மேல் இருக்கலாம். அவரை பார்க்க ஆசைப்படுகிறேன், அவருக்காக ஒரு கேள்வியும் வைத்திருக்கிறேன்... “மீசைக்காரரே...யாருக்காவது இதை நீங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?”