தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க......

20210008183145868.jpg

நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி ..ஹி ஒட்டு) கேட்ட விஷயங்கள்...

மாம்பலம் ரேஷன் கடையில் கணவனும் மனைவியும்...

“என்ன இன்னிக்கு பொறுப்பா ரேஷன் கடைக்கெல்லாம் வர்றீங்க?”

“நான் எப்பவுமே பொறுப்பு தான், நீ தான் அதை புரிஞ்சுக்கல..”

“ரேஷன் கார்டுல பேர் இருக்கற யார் வேணும்னாலும் அந்த பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கலாமாம்...”

கணவர் ஜெர்க் ஆகி... “அப்புறம் என்னை ஏன் வரச் சொன்ன.?”

“கரும்பு மத்ததெல்லாம் தூக்கிட்டு வரணும், நான் அப்படியே கிரீன் ட்ரென்ட்ஸ் போறேன்... நீங்க வீட்டுக்கு போங்க...எப்பிடியும் உங்கம்மா திருவெற்றியூர் பட்டினத்தார் சமாதி பாக்கணும்னு சொல்லிகிட்டே இருந்தாங்க, கையில கரும்போட போயி நின்னு, கூட்டிட்டு போறேன்னு சொல்லுங்க, உங்கள பாத்தே கன்னத்துல போட்டுக்குவாங்க...”

கணவர் அப்செட்டாகி... அமைதியாய் பின் தொடர்கிறார்.....

மாம்பலம் - வாசு.


சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இருவர்...

“கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் பளிச்சுனு ஒரு வித்தியாசம் சொல்லு பாப்போம்..”

“அண்ணாவை வெச்சு பொழச்சுக்கிட்டவர் கலைஞர், அண்ணாவை வெச்சு பொழைக்கத் தெரியாதவர் ஸ்டாலின்...”

“நீ எந்த அண்ணாவை சொல்றே..?”

“உனக்கே புரிஞ்சுடுச்சி.. உங்க தலைவருக்கு சொல்லி புரியவை...”

முருகன் - நந்தனம்


தஞ்சாவூர் மணிக்கூண்டு அருகே, மளிகை கடையில்...

“எதுக்கும்மா நீங்க வரீங்க, கூப்பிட்டா நான் கொண்டு வந்து தரப்போறேன்..”

“எங்க, லிஸ்ட் சொல்லணும்னு கூப்பிட்டேன், நீங்க தான் ரெஸ்பான்ஸ் பண்ணலையே..”

“என் நம்பற கூப்டீங்களா?”

“ஆமா.. மிஸ்ட் கால் கொடுத்தேன்..”

“ஏம்மா... கட்சியிலயா சேரப்போறீங்க, மிஸ்ட் கால் கொடுக்க.. கூப்பிட்டு சொல்லுங்கம்மா. எனக்கு வர்ற காலையே சமாளிக்க முடியல, மிஸ்ட் கால்லாம்... இப்படி பண்ணா எப்படிம்மா?”

பெண்மணி வெக்கப்பட்டுக்கொண்டே ஆர்டரை சொல்கிறார்...

ராமன் - கரந்தை


திருவண்ணாமலை கோவில் வாசலில் இரு மாணவர்கள்...

“என்ன மச்சி, மாஸ்டரா? ஈஸ்வரனா?”

“போடா நீ வேற, நம்ம மாஸ்டர் கூப்பிட்டிருக்காரு... எக்ஸாம் உண்டாம், வந்து நோட்ஸ் வாங்கிட்டு போக சொல்லியிருக்கார்.”

“என்னது நோட்ஸ் ஆ?”

“ஓ இன்னக்கி ஆன்லைன் க்ளாஸ் அட்டண்ட் பண்ணலயா நீ... நாளைக்கு இருக்கு கச்சேரி.”

“நெட்ஒர்க் ப்ராபளம் டா, எங்க அம்மாவை சொன்னேன், அப்பப்ப சீரியல் பாக்க எடுத்துட்டு போய்டுறாங்க...”

“சரி உங்க வீட்டுக்கு வரேன் நாளைக்கி...”

இருவரும் தலையசைத்து கலைகிறார்கள்..

மஞ்சுளா - திருவண்ணாமலை.


ஓடும் பேருந்தில்... கணவனும் - மனைவியும்...

“என்னங்க புக் பண்ணிடட்டுமா...”

“என்னத்த டி...”

“என் பிரண்டு ஒரு ஆன்லைன் ஆப் பத்தி சொன்னா..”

“ஆப் பா?”

“ஆமாங்க, நம்ப வீட்டு அட்ரசை ரெஜிஸ்டர் பண்ணி, சதுர அடி சொல்லி பணம் கட்டிட்டா, காலைல அஞ்சு மணிக்கு வந்து அவங்களே கோலம் போட்டுட்டு போய்டுவாங்களாம், ஒரு சதுர அடிக்கு அஞ்சு ரூபா தானாம்.”

கணவர் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து போய் நிற்கிறார்.

சுஜாதா - வேலூர்.