சுமன், முன் அனுமதி வாங்கி அந்த சைக்ரியாடிக் டாக்டர் சந்திரனிடம் சென்றான்..
“வாங்க மிஸ்டர் சுமன்..” என்று டாக்டர் சந்திரன் வரவேற்றார்.
“உங்களுக்கு ஏதோ புதுமையான பிரச்சனை இருப்பதாக தொலைபேசியில் கூறினீர்களே.. எதுவாக இருந்தாலும் என்னிடம் நீங்கள் வெளிப்படையாக பேசலாம். நான் என்னால் முடிந்த சிகிச்சை தருகிறேன்.. கண்டிப்பாக குணப்படுத்திவிடலாம்” என்று மிகவும் நம்பிக்கை தரும் வகையில் சந்திரன் கூறினார்.
“வணக்கம் டாக்டர்... உங்கள் நம்பிக்கை குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஆனால் குணப்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..!” என்றான் சுமன்.
“சரி.. நீங்கள் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக சொல்லுங்கள்.. நீங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.”
“முதலில் நீங்கள் ஓன்று புரிந்து கொள்ளவேண்டும் டாக்டர்.. பிரச்சனைகள் எனக்கு எதுவும் இல்லை. என் வீட்டில் இருப்பவர்களுக்குத்தான். ஆனால் அவர்களால் எனக்கும் பிரச்சனை..”
“அப்படியானால் நீங்கள் அவர்களைத்தானே கூட்டி வந்திருக்கவேண்டும் சுமன்?”
“அதில்தான் பிரச்சனையே.... இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன்.”
“சரி, சற்று விபரமாக சொல்லுங்கள்..”
“டாக்டர் என் வீட்ல ரெண்டு பேய்கள் இருக்கிறது... ஒண்ணு பெரிய பேய், இன்னொன்று சின்னது..”
“பேய்கள் எதுவும் கிடையாது. அப்படி இருப்பதாக நீங்கள் நினைப்பது உங்கள் கற்பனை. அந்தப் பேய்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”
“ஆமாம் டாக்டர். நான் பார்த்திருக்கிறேன். அந்த பேய்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை..!”
“எங்கு பார்த்தீர்கள்? இரவிலா அல்லது பகலிலா? அப்படி அவை என்ன செய்கின்றன?”
“என் வீட்டில்தான். பகல் இரவு என்று இல்லை. இரண்டும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்கின்றன..”
“என்ன பேய்கள் சண்டையா? அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?.. நீங்கள் அவைகளின் சண்டையை வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே..!”
“அப்படித்தான் நானும் வேடிக்கை பார்த்து வந்தேன்.. திடிரென்று ஒரு நாள் சின்ன பேய் வீட்டை விட்டு போய் விட்டது..!”
“நல்லதுதானே..ஒரு வழியாக பேய் சண்டை முடிந்தது.!”
“அதுக்கப்புறம் தான் பிரச்சனையே ஆரம்பம்..”
“என்ன ஆச்சு?”
“பெரிய பேய்க்கு சண்டை போட ஆள் இல்லாததால் மிகவும் ஆத்திரத்துடன் இருந்தது.. ஒரு வாரம் போனதும் பெரிய பேய்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது..!”
“என்ன பேய்க்கு பைத்தியமா?.. நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே..!”
“ஆமாம் டாக்டர்.. பைத்தியம் தான்.. நான் என்ன நினைக்கேறேன்.. திரும்பவும் சின்ன பேய் வீட்டுக்கு வந்துவிட்டால் பெரிய பேய்க்கு பைத்தியம் சரியாகிவிடும் என்று..”
“சரி.. அப்படியே செய்வதுதானே. எப்படியாவது சின்ன பேயை வீட்டுக்கு கூட்டி வரவேண்டியதுதானே?.!”
“அது முடியாது. எத்தனை முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. சின்ன பேய் வீட்டுக்கு வரமுடியாது என்று தீர்மானமாக சொல்லிவிட்டது. அதற்கு இப்பொழுது தலை சுற்றல், மயக்கம் எல்லாம் இருக்கு. அதனால் நான் அதை தொல்லை செய்யவில்லை.”
“என்ன சார் உளறல் இது? பேய்க்கு தலை சுற்றல் மயக்கமா? உண்மையில் நீங்க எதைப் பார்த்து பேய் என்று நினைக்கிறீர்கள். சின்ன பேய் வீட்டுக்கு திரும்ப வருவதில் அப்படி என்ன கஷ்டம்?”
“பெரிய பேய் இருக்கும் வரை, நான் அந்த வீட்டுக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டது.”
“இதற்கு நான் என்ன செய்ய முடியும்?”
“டாக்டர்.. நான் பெரிய பேயை இங்கே கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறேன். நீங்கள் பார்த்து அதற்கு வைத்தியம் செய்ய முடியுமா? எப்படியாவது அதன் பைத்தியம் சரியானால் நல்லது.!!”
“பேய்க்கு எல்லாம் என்னால் வைத்தியம் செய்ய முடியாது. அதுவும் பைத்தியம் பிடித்திருக்கும் பேய்க்கு எப்படி வைத்தியம் செய்வது?. முடிந்தால் நீங்க சின்ன பேயை கொண்டு வர முயற்சி பண்ணி பாருங்க..”
“அது முடியாது டாக்டர்..!”
“ஏன் முடியாது?”
“சின்ன பேய், டெலிவேரிக்கு போயிருக்கு.. வர இன்னும் எட்டு மாதமாவது ஆகும்..”
“அடப்பவாவி.. இவ்வளவு நேரமா உன் மனைவியதான் சின்ன பேய்னு சொன்னியா?”
“ஆமாம்.. என்னோட அம்மாதான் பெரிய பேய்..”
“சாரி, மிஸ்டர் சுமன்.. நீங்க வீணாக என் நேரத்தை கெடுக்க வேண்டாம்..
வேறு நல்ல பேய் டாக்டரிடம் போங்க.!.”
Leave a comment
Upload