தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை- 18 - காவிரி மைந்தன்

20210001161116349.jpg

2020112522131725.jpg

காவிரி மைந்தன்

20210007195145693.jpg

பாவை நீ காட்டிய பச்சை விளக்கை மறக்க முடியாது!

அன்பிற்கினியவளே..

ஒரு நாள் முழு நிலவென்கிறாய். மறு நாள் அதை நீ மூடி வைக்கிறாய். பிரிவென்னும் இருள் சூழ்ந்தபோது எனக்கேதோ இந்த உலகம் வெறுமையில் கிடப்பதாய் தெரிந்தது. கனிந்த உன் இதயத்தில் வசிக்கும்போதுதான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்!

எதிர்மறையாய் இருந்தவளை காதல் பொதுமறைக்குள் கொண்டுவர நான் பட்ட வேதனைகள் கொஞ்சமல்ல!

கருணை எனும் மழை பொழிந்து பாவை நீ காட்டிய பச்சை விளக்கை நான் மறக்க முடியாது! எங்கே? எங்கே?

என்று என் கண்கள் அகல அலை பாய.. இங்கே.. இங்கே.. என்று என் இதயத்திற்குள் நீ குடிபுக.. இன்பம் இன்பம் என்றே சொல்லின நம்மிரு இதயங்களும்! ஏதோ ஒன்று உன்னிடம் என்னை ஈர்த்தது என்று வரையறுக்க முடியவில்லை. காற்று எப்படி ஒரு வடிவில் தென்றலாகவும் மறு வடிவில் புயலாகவும் மாறுகிறதோ.. அப்படித்தான் காதலும்!

பெண்ணே.. நீ தென்றலாயிரு! புயலாய் மாறி என்னைத் தொலைத்து விடாதே!

அன்பின் பலம் என்னவென்று அறிந்தேனடா என்று நீ சொன்ன சொல்லின் எத்தனை சுகம் தெரியுமா?

துன்ப நிலை மாற்றி இன்ப நிலை காட்ட என்ன நான் செய்ய வேண்டும் என்றாய். என் மடி சாய்ந்த மல்லிகையே!

எனக்கான முல்லை நீ! பிடிவாதம் செய்தேனும் உனைக்கரம் பற்றிக் கொள்கிறேன்!

நேற்று நடந்த கதை நம் நெஞ்சத்தில் உரம் சேர்க்கும். அன்பின் பாதை ஒன்றே இந்த அவனியிலே.. சிறந்ததாகும். மண்டியிட்டு நான் தொழுதபின் நீ ஏன் மன்னித்து கொள்ளுங்கள் என்கிறாய்!

மனதிற்குள் மனதை வைத்து.. மஞ்சளில் நீராட்டு!

மங்கள நாண் பூட்டு! குங்குமக் கோலம் வரை! குற்றாலச் சாரல் தா!

முத்தாட நேரம் கொடு! முழு மனதால் மாலையிடு! பொற்காலம் நமக்கு இனி என செவ்வாய் திறந்து சொல்!

நம் விழிகளின் சந்திப்பில் விடியும்வரை கதைகள் படி!

ஆசையின் சங்கதிகளை அப்படியே இறக்குமதி செய்!

ஓசைநயம் மிகுந்தாலே ஒய்யாரம் கூடி நிற்கும்!

பேரழகில் மயங்கிட நான் பூரணமே இங்கு வா! கார்குழலில் எனை மறைத்து காதலுடன் கட்டியணை! போர்க் குணங்கள் உனக்கிருந்தால் புன்னகையோடு எனக்குக் காட்டு! மௌனத்தில் பூத்திடு!

என்னை நீ சேர்த்திடு! கண்ணசைவில் காவியம் பாடு! கண்ணும் இமையும் ஒன்றாய்.. உன்னில் நானுமாய்.. என்னில் நீயுமாய் கலந்தே இருக்கட்டும்!